Sunday 8 December 2019

இன்னொரு கனவு


2017ம் ஆண்டு நானும் என்னுடைய நண்பர் ஒருவரும் மோட்டார்சைக்கிளில் மாதேஸ்வரன் மலைக்குச் சென்றோம். மாதேஸ்வரன் மலை கர்நாடக மாநிலத்தில் உள்ளது. மைசூருக்குப் பக்கமானது. அந்த ஊரின் பெயர் அளித்த ஆர்வம் காரணமாக அங்கு செல்ல வேண்டும் என எண்ணம் கொண்டிருந்தேன். நண்பர் தனது சென்னை அறைவாசியின்  திருமணம் சேலத்தில் நடைபெறுவதாகச் சொன்னார். காலை மயிலாடுதுறையில் கிளம்பி சேலத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு அங்கிருந்து மாதேஸ்வரன் மலை செல்வதாகத் திட்டம். மயிலாடுதுறை – காட்டுமன்னார்குடி – விருத்தாசலம் – மார்க்கமாக சேலம் சென்றோம். மதியம் அங்கிருந்து புறப்பட்டோம். சேலத்திலிருந்து மைசூர் செல்ல இரண்டு பாதைகள் உள்ளன. சேலம் – ஈரோடு – சத்தியமங்கலம் என ஒரு பாதை. இன்னொரு பாதை சேலம் – மாதேஸ்வரன் மலை – மைசூர் என. இரண்டாவது பாதையில் பேருந்துகள் மிகக் குறைவாகவே இயக்கப்படுகின்றன. சேலம் – மேட்டூர் அணை – கொளத்தூர் என செல்லும். காவிரியை ஒட்டியுள்ள ஊர்கள் வழியே செல்லும் பாதை. அந்த பயணப்பாதை மறக்க இயலாதது. சின்னஞ்சிறு மலை கிராமங்கள். ஏராளமான மாந்தோப்புகள். நிசப்தமாயிருக்கும் பாறைகள். நாங்கள் இயற்கையின் அழகில் மனம் தோய்ந்து சென்று கொண்டிருந்தோம். இவ்வாறான கணங்களில் மனதிலிருந்து எல்லா சிறுமைகளும் அகன்று விடும். மனம் தூய பேருவகை கொள்ளும். அந்த உணர்விலேயே இருவரும் எதுவும் பேசிக் கொள்ளாமல் சென்று கொண்டிருந்தோம். அங்கே பாலார் என்று ஒரு சிற்றாறு ஒன்று வரும். அங்கிருந்து ஹொகேனக்கல் செல்வதற்கான பாதை பிரியும். கொண்டை ஊசி வளைவுகளைச் சுற்றி சுற்றி மாதேஸ்வரன் மலை சென்று சேர்ந்தோம். சென்றதும் மாதேஸ்வர சுவாமி ஆலயம் சென்று வழிபட்டோம். நான் நாடு முழுதும் சுற்றியவன். நண்பர் முதல் முறையாக மோட்டார்சைக்கிளில் வெளிமாநிலத்துக்கு வருகிறார். அவருக்கு எல்லாமே புதுமையாகவும் நூதனமாகவும் இருந்தது.

மாதேஸ்வரர் ஒரு முனிவர். சிவ பக்தர். இந்த மலைக்கு தவம் புரிய வருகிறார். இவர் தவத்தில் இருக்கும் போது புலியும் மானும் இவர் முன் ஒன்றாக வந்து பணிகின்றன. இவரது கருணை தங்கள் வாழ்வை மேன்மையடையச் செய்ய வேண்டும் என இவரிடம் பணிந்து ஆசி கோருகின்றனர் மலைக்குடிகள். மலைக்குடிகள் அவரைத் தெய்வமெனப் போற்றுகின்றனர். அந்த மலையே சுவாமிகளின் பெயரால் ‘’மாதேஸ்வரன் மலை’’ எனப்படுகிறது. நாங்கள் மாதேஸ்வர சுவாமியை வணங்கினோம்.

காலையிலிருந்து நீண்ட தூரம் பயணித்திருந்ததால் நல்ல பசி. உணவு அருந்தினோம். கர்நாடகாவில் இட்லிக்கு மாவு அறைக்கும் போது உளுந்து மிகக் குறைவாகச் சேர்ப்பார்கள். ஆகையால் இட்லியில் அரிசி மாவின் இனிப்புச் சுவையே அதிகம் இருப்பதால் இட்லி இனிக்கும். சாம்பாரிலும் இனிப்புச்சுவை இருக்கும். எனக்கு அது தெரியும். இந்தியாவில் நீங்கள் ஒரு மாநில உணவை ஒருமுறை உண்டு விட்டால் உங்கள் நாவு அதன் ருசியை இயல்பை பலவருடங்களுக்குப் பின்னும் நினைவில் வைத்திருக்கும். கர்நாடகா எனக்குத் தண்ணீர் பட்ட பாடு. நான் இட்லியை ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். நண்பர் மிகவும் சிரமப்பட்டார். அவரால் உணவு அருந்த முடியவில்லை என்பதைத் தாண்டி நான் எந்த அல்லலும் இல்லாமல் எப்படி இட்லிகளை விழுங்குகிறேன் என்ற வியப்பு.

எம்.எம்.ஹில்ஸுக்கு (மல்லே மாதேஸ்வரன் மலை என்பதை எம்.எம்.ஹில்ஸ் என்பார்கள்) கிளம்பத் திட்டமிட்ட போதே நண்பரிடம் ஒரு ஸ்வெட்டர் எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன். அவர் சென்னையைத் தாண்டாதவர். என் உடல் எந்தக் குளிரையும் தாங்கும் என்றார். நான் ஒரு ஸ்வெட்டரை வண்டி பெட்டியில் போட்டு வைத்தேன். அதை எடுத்து அணிந்து கொண்டேன். நேரமாக நேரமாக குளிர் அடர்த்தி கொண்டது. நண்பரால் குளிர் தாங்க முடியவில்லை. நாங்கள் புதிய பகுதியில் ஒரு மணி நேரம் நடந்து சுற்றினோம். இன்னும் அறை ஏதும் போடவில்லை. நண்பருக்கு நான் என்ன அது குறித்த எந்த ஆர்வமும் இல்லாமல் இருக்கிறேனே என்ற எண்ணம். வந்தோம். சாமி கும்பிட்டோம். சாப்பிட்டோம். காலாற நடந்து விட்டு தங்குமிடம் அப்புறம் ஏற்பாடு செய்து கொள்ளலாம் என இருந்தேன். கோவிலைச் சுற்றி நடக்கும் போது அங்கே சிலர் அட்டைகளை கோயில் சுவரை ஒட்டி போட்டு போர்வையை போர்த்திக் கொண்டு படுத்திருந்தனர்.

‘’இந்த மாதிரி கோயில் சுவரை ஒட்டி யாத்ரிகள் பலபேரு படுத்திருப்பதைப் போல நாமும் படுத்து விடுவோமா?’’ நான் ஆர்வத்துடன் கேட்டேன்.

நண்பர் பயந்து விட்டார். ‘’பிரபு! இப்பவே எனக்கு குளிர் தாங்கல. ராத்திரி தூக்கமில்லாமல் போச்சுன்னா நாளைக்கு டூ-வீலர் ஓட்ட முடியாது. ஏதாவது லாட்ஜ்-ல ரூம் போட்டுறுவோம். செலவு எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை.’’

‘’நாம யாத்ரி. மாதேஸ்வர சாமியைக் கும்பிட ரொம்ப தூரத்தில இருந்து வந்திருக்கோம். லாட்ஜ் கிடைக்கும்தான். ஆனா ஏதாவது மடம் இருக்குமான்னு பார்க்கலாம்’’

‘’ஒரு புது இடத்துக்கு வந்து இருக்கா இல்லையான்னு தெரியாத மடத்தை எப்படி தேடுவீங்க?’’

‘’நான் நாடு முழுக்க பயணம் செஞ்சவன். எனக்குத் தெரியும். இங்க ஏதாவது இருக்கும்.’’

மலைப்பாதையின் ஏற்ற இறக்கங்களில் நடந்தோம். வழியில் வாழைப்பழத்தை தள்ளுவண்டியில் ஒருவர் தள்ளிக் கொண்டு வந்தார். நண்பர் பழம் வேண்டாம் என்றார். நான் ஆறு பழங்களை வாங்கி ஒவ்வொன்றாக நடந்து கொண்டே தின்று விட்டு தோலை கையில் வைத்திருந்தேன். சில நிமிடங்களில் சில பசு மாடுகள் எதிர்ப்பட்டன. அவற்றுக்கு வாழைப்பழத் தோலை அளித்தேன். அவை நட்பு பாராட்டின.

நண்பர் என்னிடம் சொன்னார்: ‘’நீங்க ஒரு புது ஊர்ல இருக்கறா மாதிரியே இல்ல. ஏதோ பழகின இடத்தில இருக்கறாப் போல இருக்கீங்க”

நான் கணியன் பூங்குன்றனின் வரியைச் சொன்னேன். ‘’யாதும் ஊரே; யாவரும் கேளிர்’’

எங்கள் பாதையில் ஒரு கல்லூரிக் கட்டிடம் போல பெரிதாக ஒன்று எதிர்ப்பட்டது. அதன் வாசலில் ஒரு நாற்காலியை வைத்து கன்னடத்தில் ஏதோ எழுதி வைத்திருந்தார்கள். இங்கே சென்று விசாரிப்போம் என்றேன். தங்குமிடம் காலி இல்லை என்று தானே இவ்வளவு பெரிய போர்டு வைத்திருக்கிறார்கள் என்றார்.

‘’சொல்லவே இல்லையே நீங்கள். என்ன ஆச்சர்யம் உங்களுக்கு கன்னடம் வாசிக்கத் தெரியுமா?’’

‘’எனக்கு கன்னடம் தெரியாது. ஆனா இப்படி ஒரு அறிவிப்பு இருந்தா இதுவாத்தான் இருக்கும்னு யூகிக்கத் தெரியும்’’

‘’நீங்க எதையுமே பெஸிமிஸ்டிக்காத்தான் யோசிக்கறீங்க. உள்ள போவோம். ரூம் வேணும்னு கேளுங்க. நான் சோஃபால ஒக்காந்திருக்கன். இல்லன்னு சொன்னா என்கிட்ட சொல்லுங்க. நான் பேசிப் பாக்கறன்’’

நண்பர் சென்றார். அந்த யாத்ரி நிவாஸின் வரவேற்பாளர் வாசலைச் சுட்டிக் காட்டி நண்பரிடம் ஏதோ சொன்னார். நண்பர் திரும்பி வந்து விட்டார்.

நான் சென்றேன்.

‘’ஜி! நமஸ்காரம். என்னுடைய பெயர் பிரபு. என்னுடைய தொழில் கட்டிடக் கட்டுமானம். நான் ஒரு மோட்டார்சைக்கிள் பயணி. இந்தியாவெங்கும் மோட்டார்சைக்கிளில் பயணிப்பவன். சிறு வயதிலிருந்தே மாதேஸ்வர சுவாமி குறித்து கேட்டிருக்கிறேன். பல நாட்களாக இங்கு வர வேண்டும் என்று நினைத்ததுண்டு. இன்று தான் வர முடிந்தது. நாங்கள் நாளை காலை மீண்டும் சாமி கும்பிட்டு விட்டு கிளம்புகிறோம். இன்று இரவு நமது இடத்தில் தங்க இடம் கிடைக்குமா?’’ நான் ஆங்கிலத்தில் அவரிடம் சொன்னேன்.

வரவேற்பாளர் மிகப் பணிவுடன் என்னிடம் கேட்டார்: ‘’ஜி! நீங்கள் என்ன ஊர்?’’

‘’உங்களுக்குத் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்’’

‘’நன்றாகத் தெரியும் ஜி”

‘’அதற்குப் பக்கத்தில்தான் எங்கள் ஊர்’’

‘’ரொம்ப சந்தோஷம். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க. எல்லா ரூமும் ஃபுல்லா இருக்கு. ஆனா ரொம்ப முக்கியமானவங்க வந்தா தர்ரதுக்குன்னு ரெண்டு ரூம் எப்போதும் வச்சிருப்போம். அதில ஒண்ணு தந்துடறன்’’

‘’சரி நீங்க ரெடி பண்ணுங்க. கோயில் வாசல்ல எங்க டூ-வீலர் நின்னுட்டு இருக்கு. நாங்க போய் எடுத்துட்டு வந்திடறோம்’’

நண்பரிடம் வந்தேன். ரூம் ஏற்பாடாகி விட்டது என்று சொன்னேன். என்னிடம் இல்லை என்றார்கள் எப்படி உங்களுக்கு மட்டும் தந்தார்கள் என்று கேட்டார். அதெல்லாம் தொழில் ரகசியம் என்றேன்.

‘’ரூம் தர்ரேன்னு சொல்லியிருக்காங்க. நீங்க இங்கயே இருங்க. நான் போய் வண்டிய எடுத்துட்டு வந்துடறன். அவங்க மனசு மாறிடப் போவுது.’’

‘’மனுஷனை நம்புங்க. நம்பிக்கைதான் வாழ்க்கை. பயணம் எனக்குச் சொல்லிக் கொடுத்தது அதைத்தான்’’

நாங்கள் நடந்து சென்று வண்டியை எடுத்துக் கொண்டு அந்த கன்னட மடத்தின் யாத்ரி நிவாஸுக்கு வந்தோம். அறை தயாராக இருந்தது. முதல் தளத்தில். மடத்தின் முக்கியஸ்தர்களுக்கான அறை.

வரவேற்பாளர் சற்று தயக்கத்துடன், ’’டபுள் ரூமுக்கு ரூ.600 டொனேஷன். உங்க கிட்ட ரூ.200 வாங்கிக்கிறோம். முறையா ரசீது கொடுத்துடுவோம்’’

நண்பர் பாய்ந்து இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை தன் பர்ஸில் இருந்து எடுத்துத் தந்தார்.

நான் வரவேற்பாளரிடம் என்னை சிவராம காரந்தின் வாசகன் என்று சொன்னேன்.

‘’ஜி! அப்படியா?’’

‘’சிவராம காரந்த், பைரப்பா, மாஸ்தி வெங்கடேச ஐயங்கார், ஸ்ரீரங்க ஆகிய கன்னட எழுத்தாளர்களின் படைப்புகளைப் படித்திருக்கிறேன்.’’

‘’ஜி! நீங்க இங்க தங்கறது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்’’

அறைக்கு வந்தோம். விசாலமான அறை. பெரிய தனித்தனியான இரண்டு கட்டில்கள். மெத்தை. தூய மெத்தை உறை. தடிமனான கருப்புக் கம்பளி. கூஜாவில் குடிநீர் கொண்டு வந்து வைத்திருந்தனர்.

மலைப்பிரதேசம் ஆகையால் காற்று குளிரால் நிரம்பி எந்த ஓசையும் இல்லாமல் இருந்தது. அந்த மௌனம் அடர்த்தி மிக்கதாக அர்த்தம் கொண்டது.

நண்பர் இந்த நாள் நம்ப முடியாததாக இருக்கிறது என்றார். தனது குழந்தைப் பருவம் மற்றும் பால பருவத்தின் நினைவுகளை சொல்லிக் கொண்டிருந்தார். வென்னீர் கிடைக்குமா என்று பார்க்கிறேன் என ரிசப்ஷனுக்குச் சென்றார். நான் உறங்குகிறேன் என்றேன். உறங்கி விட்டேன். எப்போதும் நான் படுத்தால் ஒரு நிமிடத்தில் உறங்கி விடுவேன். அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள். சின்ன வயதிலிருந்தே அப்படி பழக்கம். எனக்குத் தூக்கம் வராமல் இருந்த நாட்களை ஒரு கை விரலில் எண்ணி விடலாம். அன்றும் உறங்கி விட்டேன். உறக்கத்தில் ஒரு கனவு. சட்டென விழித்து விட்டேன். எழுந்து உட்கார்ந்தேன். லைட் அணைக்காமல் இருந்தது. நண்பர் கட்டிலில் அமர்ந்திருந்தார். நான் கண்ட கனவைச் சொன்னேன்.

‘’இந்த இடம் ஒரு வெட்டவெளியில இருக்கு. சுத்தியும் புதர்க்காடுகள். ஒவ்வொரு ரூமுலயும் ரெண்டு பேர் மூணு பேர் இருக்காங்க. திடீர்னு பயங்கரவாதிகளோட ஒரு குரூப் வருது. அவங்க என்னைத் தேடி வந்திருக்காங்க. அந்த இடத்தோட வாசல் பகுதியில அவங்க பொஸிஷன் எடுக்கறாங்க. தாக்குதலுக்கு அவங்களுக்கு ஆர்டர் கிடைக்குது. ஆனா முன்பகுதில தங்கியிருக்கற யாத்ரிங்க ஜன்னல் கதவுகள் வழியா பயங்கரவாதிகள் மேல தாக்குதல் நடத்தறாங்க. மெஷின் கன் சத்தம். கிரனைட் தாக்குதல். ராக்கெட் லாஞ்சர்ஸ். ஒரே சத்தமா இருக்கு. யாத்ரிகள் எப்படி பயங்கரவாதிகளை தாக்குறாங்கன்னு நான் குழம்பறேன். ஒரு யாத்ரி என்கிட்ட ஓடி வந்து அவங்க உங்களைத் தேடி வருவாங்கன்னு எங்களுக்குத் தெரியும். நாங்க தாக்குதலுக்குத் தயாரா இருந்தோம்னு சொல்றாரு. குண்டுகள் வெடித்து எழும் தீயின் ஒளி எங்கும் பரவுகிறது. புல்லட் காற்றை உரசிச் செல்லும் ஓசை எங்கும் கேட்கிறது. நான் யாத்ரிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்கிறேன். ஒரு பயங்கரவாதியும் தப்ப முடியாது என்கின்றனர். பயங்கரவாதிகளைத் தாக்கும் நீங்கள் யார் என்று கேட்கிறேன். நான் கேள்வி கேட்டவர் ஹா ஹா ஹா என சிரிக்கிறார். நான் ஆம்புலன்ஸுக்கு ஃபோன் செய்கிறேன். ஆம்புலன்ஸ் சைரன் கேட்கிறது. எனது நண்பர் வெளியே செல்கிறார். அங்கே வெடித்த குண்டு ஒன்று ஏற்படுத்திய அதிர்ச்சியில் அவர் கீழே விழுந்து தலையில் லேசான அடிபட்டு ரத்தம் வருகிறது. நான் ஆம்புலன்ஸில் நண்பரை அழைத்துக் கொண்டு செல்கிறேன். அதில் ஒரு மருத்துவர் இருக்கிறார். அவர் நண்பருக்கு சிகிச்சை அளிக்கிறார். நான் மருத்துவரிடம் டாக்டர் ஒன்றும் பயமில்லையே என்று கேட்கிறேன். இல்லை பயமில்லை என்கிறார். என்ன நடக்கிறது என்று கேட்கிறேன். அவர் ஃபோன் வந்தது; நாங்கள் வந்தோம் என்றார். மருத்துவமனைக்கு ஒரு யாத்ரி வந்து ஒரு பயங்கரவாதி கூட தப்பவில்லை என்று சொல்லி விட்டு ஹா ஹா ஹா என்கிறார்.’’

நண்பர் மிரண்டு போய் விட்டார்.

நான் நேரம் அதிகாலையாயிருக்கும் என்று எண்ணி நண்பரிடம் மணி எத்தனை என்று கேட்டேன்.

‘’ரிஸப்ஷன் போனேன். வென்னீர் இருந்தது. கொண்டு வந்தேன். நான் இங்கேயிருந்து அங்க போய்ட்டு வர நேரம் தான். அதிகபட்சம் உங்களை விட்டுட்டு போய் நாலு நிமிஷம் இருக்கும். அதுக்குள்ள ஒரு ரணகளத்தை இங்க உருவாக்கிட்டிங்க”

’’என்னது நான் தூங்கி நாலு நிமிஷம் தான் ஆகுதா?’’

நண்பர் செல்ஃபோனில் நேரத்தைக் காட்டினார். அவர் சொல்வது உண்மைதான்.

‘’நீங்க ரணகளம் ஆக்குனது கூட பெருசுல்ல. அதுல உங்களுக்கு துளி கூட பாதிப்பு இல்லன்னு சொன்னீங்க பாருங்க; அதத்தான் தாங்கவே முடியலை’’

‘’ஏங்க எதையுமே நல்லதா யோசிக்க மாட்டறீங்க. கனவுலயும் நான் உங்க மேல எவ்வளவு அக்கறையா இருந்திருக்கேன் பாருங்க”

வென்னீர் குடித்து விட்டு படுத்தேன்.

கனவு ஹெமிங்வேயின், For Whom The Bell Tolls நாவலை நினைவுபடுத்துகிறது என்று நண்பரிடம் சொல்லலாமா என்று யோசித்தேன். வேண்டாம் என முடிவெடுத்து உறங்கி விட்டேன்.