Saturday 7 December 2019

ஜீவன்

நேற்று அதிகாலை ஒரு கனவு வந்தது. அது ஒரு மருத்துவமனை. இன்னும் சரியாகச் சொன்னால் மருத்துவமனையின் வாயில். வாயிலிலேயே ஒரு பெரிய படிக்கட்டு இருக்கிறது. நான் படிகளில் ஏறாமல் படிக்கட்டின் முன் நிற்கிறேன். சற்று பதட்டமாக இருக்கிறேன். இப்படி ஒரு கனவு. உடன் விழித்து விட்டேன். மின்விளக்கை இயக்கி ஒளிரச் செய்து மணி பார்த்தேன். காலை 4.40. மனது சஞ்சலமாக இருந்தது. அத்துடனே உறங்கி விட்டேன். காலை 6 மணிக்கு விழிப்பு. கண்ட கனவின் உணர்வு நிலை தொடர்ந்தது. அதிலிருந்து விடுபட உடன் குளித்து விடலாம் என முடிவு செய்து குளித்துக் கொண்டிருந்தேன்.

என்னுடைய அறையில் அலைபேசி ஒலிக்கும் சப்தம் கேட்டது. மணி அப்போது 6.15 இருக்கும். பொதுவாக அழைப்புகள் காலை 8 மணிக்கு மேல்தான் இருக்கும். இது யாருடைய அழைப்பு என யோசித்துக் கொண்டிருந்தேன். குளித்து விட்டு வந்து பார்த்தால் எனது நண்பர் அழைத்திருந்தார். அவர் வயது 70. அவரது மகன் அமெரிக்காவில் பணிபுரிகிறார். சில முறை அமெரிக்கா சென்று வந்திருக்கிறார். சில நாட்கள் முன்னால், விசா நேர்காணலில் பங்கெடுத்து திரும்பி வந்திருந்தார். நான் ஃபோன் செய்தேன்.

‘’பிரபு! எனக்கு உடல்நிலை கொஞ்சம் சரியாக இல்லை. இரவு முழுக்க நல்ல தூக்கம் இல்லை. கும்பகோணம் வரை சென்று டாக்டரைப் பார்க்க வேண்டும். நீங்கள் உடன் வர முடியுமா?’’

‘’தாராளமா சார். மணி இப்போ 6.45. நான் 7.15க்கெல்லாம் உங்க வீட்டுக்கு வந்துடறன்’’

‘’இன்னைக்கு ஏதாவது உங்களுக்கு முக்கியமான ஒர்க் ஏதும் இருக்கா?’’

‘’பரவாயில்லை சார். நான் அல்டர்னேட் அரேஞ்மெண்ட் செஞ்சிடுவன்’’

நான் வேகமாகக் கிளம்பினேன். சற்று நேரத்தில் நண்பரின் மனைவி ஃபோன் செய்தார்.

‘’பிரபு! சார் உடம்பு ரொம்ப சிரமப்படறார். டெஸ்ட் ஏதாவது எடுக்கறா மாதிரி இருக்குமா?’’

‘’எல்லாம் பாத்துக்கலாம்மா. நான் இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருக்கன். நீங்க சீக்கிரம் ரெடியாகுங்க”

ஒரு மணி நேரத்தில் கும்பகோணம் சென்று சேர்ந்தோம். நண்பர் கார் சொல்லியிருந்தார். சற்று சிரமப்பட்டே காரில் பயணித்தார் நண்பர். கும்பகோணத்தில் ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றோம்.

அங்கே இ.சி.ஜி எடுக்கப்பட்டது.  பின்னர் இரு மருத்துவர்கள் வந்து பார்த்தனர். இதயத்துடிப்பு சாதாரணமாக இருப்பதாகத் தெரிவித்தனர். நாங்கள் ஆசுவாசம் அடைந்தோம். சோதனைக்கருவிகள் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்ததால் அங்கே இருந்த படுக்கை ஒன்றில் அவரைச் சேர்த்தோம்.

இங்கே ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். ஒரு மருத்துவமனை என்பது எல்லா விதமான சுகாதார அளவீடுகளும் முழுமையாக இருக்க வேண்டிய இடம். அது ஒரு பொது இடம் மட்டும் அல்ல. அங்கே கடைப்பிடிக்கப்படும் சுகாதார நெறிமுறைகள் உச்சபட்சமான அளவில் இருக்க வேண்டும். காலணிகளை வைப்பதற்கான இடங்கள், நோய்த்தொற்று இல்லாமல் இருக்க அடிக்கடி மெழுகப்பட்ட தரைகள், தூய்மையான கழிவறைகள் ஆகியவை ஒவ்வொரு மருத்துவமனையிலும் இருக்க வேண்டும். அதற்கான பணியும் பணியாளர்களும் மருத்துவமனைச் சேவையின் முக்கிய அம்சம். இவை எதுவும் அங்கே இருந்ததாகத் தெரியவில்லை. ஒரு மருத்துவமனைக்கு இவை அவசியமானவை என்ற பிரக்ஞை அங்கே இருந்ததாகவும் தெரியவில்லை.

இந்தியப் பிரதமர் தனது மக்களிடம் தூய்மையை வலியுறுத்துகிறார். உலக அரங்கில் நம்மைப் பற்றிய நல்ல அபிப்ராயத்தை உருவாக்க தூய்மையையும் சுகாதாரத்தையும் கைக்கொள்ளுங்கள் என்கிறார். குடிமக்களின் உடல் ஆரோக்கியமே தேசத்தின் சிறந்த மூலதனம் என்பதால் ‘’ஃபிட்னெஸ் சவால்’’ விடுக்கிறார். மருந்து நிறுவனங்கள் மருந்து தயாரிப்பில் அடையும் கொள்ளை லாபத்தால் சாதாரண குடிமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க மத்திய அரசின் மூலம் ‘’ஜன் ஔஷதி’’ மருந்துக் கடைகள் நாடு முழுதும் செயல்பட வேண்டும் என முனைப்பு காட்டுகிறார்.

எனக்குத் தெரிந்து ஒரு மருந்துக்கடையில் மருத்துவர் எழுதித் தரும் மருந்துகள் மருந்து அட்டையிலிருந்து தனித்தனியாக ஒவ்வொரு மாத்திரை வில்லையாக கத்தரிக்கோல் கொண்டு கத்தரித்துத் தரப்படுகிறது. மருந்தின் பெயரோ அதன் ரசாயனமோ தெரிந்தால் ‘’ஜன் ஔஷதி’’ கடைக்குச் சென்று வாங்குவார்கள் என்பதால் அதைத் தடுக்க இந்த ஏற்பாடு.

மூன்றாவதாக ஒரு மருத்துவர் வந்து இ.சி.ஜி அறிக்கையைப் பார்த்தார். நாங்கள் மருத்துவமனைக்கு வந்து ஒரு மணி நேரம் ஆகியிருந்தது. நோயாளி ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக கூறினார். நண்பரின் மனைவியும் நானும் எங்கள் வாகன ஓட்டியும் மட்டுமே இருக்கிறோம். எங்களுக்குப் பதட்டமாகி விட்டது. ஒரு மணி நேரம் முன்பு எடுக்கப்பட்ட இ.சி.ஜி தான் அது. அவ்வாறெனில் ஒரு மணி நேரம் முன்னால் பார்த்த இரு மருத்துவர்கள் ஏன் இதயத்துடிப்பு சாதாரணமாக இருப்பதாகக் கூறினர்? ஆபத்தான கட்டம் எனில் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது குறித்து எப்படி முடிவெடுப்பது? மருந்துகள் எழுதித் தந்தனர். அவை மருத்துவமனையின் ஃபார்மஸியில் மட்டுமே கிடைக்கும் என்றனர். மருத்துவமனையின் ஒரு பகுதியாக இருந்த அது திறக்கப்படவில்லை. திறக்கும் நேரம் காலை பத்து மணி என்றனர். காத்திருந்து மருந்து வாங்கிக் கொடுத்தோம். பின்னர் சில மருந்துகள் சலைன் மூலம் ஏற்றப்பட்டன. மருந்து ஏறும் போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. என்னை இங்கிருந்து அழைத்துச் சென்று விடுங்கள் என நண்பர் மன்றாடுகிறார். நேரம் சென்று கொண்டேயிருந்தது. அவரது உறவினர்களும் நண்பர்களும் தொடர்ந்து ஃபோன் செய்து விபரம் கேட்கின்றனர். அமெரிக்காவிலிருந்து அவரது மகன் அரை மணிக்கு ஒருதரம் ஃபோன் செய்து தந்தையின் உடல்நிலையை விசாரிக்கிறார். அந்த மருத்துவமனையில் குடிக்கத் தண்ணீர் கூட வைக்கப்படவில்லை. காலை வந்ததிலிருந்து தண்ணீர் கூட குடிக்காமல் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தேன். நண்பரை தஞ்சாவூர் அழைத்துச் செல்வதாய் முடிவு செய்தோம். டிஸ்சார்ஜ் உடனே செய்யப்படவில்லை. இ.சி.ஜி மற்ற சோதனைகள் செய்யப்பட்டதற்கு பணம் செலுத்துங்கள் என்றார்கள். எங்கள் கையில் போதுமான பணம் இருந்தது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடம். செலுத்தி முடிக்கவே ஒரு மணிக்கு மேல் ஆனது. எந்த தொகை செலுத்தப்பட்டதற்கும் முறையான ரசீதுகள் கிடையாது.

ஒரு ஆம்புலன்ஸில் தஞ்சாவூர் அழைத்துச் சென்றோம். நண்பருக்கு ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. நானும் அவரது மனைவியும் அருகில் உடன் இருந்தோம்.  ரயில் கட்டணம் ஒரு ரூபாய் உயர்ந்தால் நாடே கொந்தளிக்கிறது. ஆம்புலன்ஸுக்கு கேட்கப்பட்ட தொகை சாதாரணமாகக் கேட்கப்படுவதைப் போல இரு மடங்கு. தஞ்சாவூர் சென்று சேர்ந்தோம்.

நாங்கள் சென்ற மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் மூன்று மருத்துவர்கள் இருந்தனர். அறிக்கைகளைப் பார்த்து உடன் சிகிச்சையைத் துவக்கினர். நண்பர் இப்போது நலமுடன் இருக்கிறார்.

மருத்துவத்தை சேவையாகக் கருதும் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் இன்னும் இந்த நாட்டில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாடு என்றும் கடன்பட்டுள்ளது.