Saturday 18 January 2020

கதர்

கதராடை என்பது கைநெசவால் நெய்யப்பட்ட பருத்தி ஆடையைக் குறிக்கும். கதர் என்ற சொல்லுக்குப் புரட்சி என்ற அர்த்தமும் உண்டு. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பிரிட்டனுக்குத் தேவைப்பட்ட ‘’அவுரி’’ என்ற சாயம் பயிரிட இந்திய விவசாயிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர். அவர்கள் விளைவித்த பருத்தி கட்டாயமாக மிகக் குறைந்த விலைக்குக் கொள்முதல் செய்யப்பட்டு இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இயந்திர நெசவின் மூலம் ஆடைகள் உருவாக்கப்பட்டு அவை இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டன. மிகக் குறைவான விலைக்குப் பருத்தியைக் கொள்முதல் செய்ததில் கிடைக்கும் லாபமும் நல்ல விலைக்கு ஆடைகளை விற்பதில் கிடைக்கும் லாபமும் சேந்து கொள்ளை லாபம் சம்பாதித்தனர் பிரிட்டிஷார். 

பல நூற்றாண்டுகளாக உலகிலேயே மிக அதிக பருத்தியை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. இந்தியாவின் பருத்தி உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு குஜராத், மகாராஷ்ட்ரா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களைச் சார்ந்தவை.

நான் சென்ற வாரம் அகமதாபாத் சென்றிருந்த போது மேற்கொண்ட ரயில் பயணம் 33 மணி நேரம் நீண்டது. சென்னைக்கும் அகமதாபாத்துக்கும் இடையேயான நவஜீவன் எக்ஸ்பிரஸில் பயணம் செய்தேன். சென்னைக்கும் தில்லிக்கும் இடையேயான தூரம் சென்னைக்கும் அகமதாபாத்துக்கும். இதில் ஒரு சுவாரசியமான அம்சம் ஒன்றைக் கவனித்தேன். நவஜீவன் எக்ஸ்பிரஸ் தனது 33 மணி நேரப் பயணத்தில் தோராயமாக 2 மணி நேரம் தமிழ்நாட்டில் செல்கிறது. 12 மணி நேரம் ஆந்திராவில் (பழைய ஆந்திரா - இப்போது ஆந்திரா, தெலங்கானா), 12 மணி நேரம் மகாராஷ்ட்ராவில். ஆறிலிருந்து ஏழு மணி நேரம் குஜராத்தில் என அந்த வண்டி செல்கிறது. இந்த மூன்று மாநிலத்தையும் ரயிலில் கண்டவாறு பயணிக்கும் எவரும் அறிய முடியும் - இந்த மாநிலங்களில் விவசாயம் செய்வது என்பது எவ்வளவு கடினமானது என்பதை. இன்றும் இந்த பிரதேசங்களில் லட்சக்கணக்கான மக்களுக்கு பருத்தியை விளைவித்தலே வாழ்க்கையைத் தருவதாக இருக்கிறது. 

மகாத்மா காந்தி குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். தென்னாப்ரிக்காவிலிருந்து இந்தியா வந்ததும் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கும் பொறுப்பை ஏற்கிறார். இந்திய விடுதலைப் போராட்டத்திற்குள் விவசாயிகளையும் எளிய மக்களையும் கொண்டு வர விரும்புகிறார். அப்போதிலிருந்து அவர் பருத்தி ஆடைகளையே அணியத் துவங்குகிறார். இந்திய விடுதலைப் போராட்டம் புதிய பரிமாணம் ஒன்றைப் பெறுகிறது. தனது தொண்டர்கள் ஒவ்வொருமே கைத்தறியால் நெய்யப்பட்ட பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும் என்கிறார். அது ஒரு குறியீடு. நாங்கள் விவசாயத்தை விவசாயிகளை உழைப்பை உழைப்பின் மேன்மையை மிகப் பெரிதாய் மதிக்கிறோம் என்பதற்கான குறியீடு. இந்தியப் பெண்களை இராட்டையால் நூல் நூற்க பணிக்கிறார். அந்த இராட்டை இந்தியாவின் வெவ்வேறு ஊர்களில் சுழன்ற போது ஒரு சாம்ராஜ்யத்துக்கு எதிராக ஒரு தேசம் தன் எதிர்ப்பைத் திரட்டிக் கொண்டிருக்கிறது என்பது பிரிட்டிஷாருக்குப் புரிந்து போனது. 

உணவு உற்பத்தியில் நாம் பல ஆண்டுகளாகத் தன்னிறைவு பெற்றிருக்கிறோம். நமது மிகப் பெரிய ஜனத்தொகைக்குத் தேவையான உணவை நாமே உற்பத்தி செய்கிறோம். எங்கே ஆற்றுப்பாசனமும் கால்வாய்ப் பாசனமும் சாத்தியமாயிருக்கிறதோ அங்கே நெல்லும் கோதுமையும் விளைகிறது. ஆனால் பருத்தி விவசாயிகள் இலகுவான நீர்ப்பாசனம் அற்ற பகுதிகளில் போராடி விவசாயம் செய்கின்றனர். கைத்தறி நெசவில் ஈடுபடும் நெசவாளிகள் மௌனமாகத் தங்கள் தறியை இயக்கிக் கொண்டுள்ளனர். உண்ணும் உணவுக்குச் சமமானது உடுத்தும் உடை. பருத்தி விவசாயிகளையும் கைத்தறி நெசவாளிகளையும் காப்பது இந்திய மக்களின் கடமை. 

நம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தை தேசத்தை தேசமக்களை கணமும் நினைவில் அகற்றாமல் பணி புரிந்த மகத்தான தலைவர்கள் வழிநடத்தினர். மகாத்மா காந்தி, வல்லபாய் படேல், பால கங்காதர திலகர். கதர் நம் போராட்டத்தின் சின்னமாக ஆன போது நாம் அரசியல் விடுதலையை வென்றெடுத்தோம். 

நமது நாட்டு மக்கள், பருத்தி விவசாயிகளையும் கைத்தறி நெசவாளர்களையும் குறித்து சிந்திக்கும் போது நமது விடுதலை அதன் அடுத்த பரிமாணத்தை அடையும்.