Sunday, 19 January 2020

காந்தியும் தேசமும்

இந்திய நிலத்தில் பயணிப்பது என்பது எனக்கு எப்போதுமே விதவிதமான மனநிலைகளை வெவ்வேறு மனோபாவங்களை எப்போதும் உருவாக்குவதாக இருக்கிறது. மோட்டார்சைக்கிளில் பயணிப்பது எப்போதுமே இனிமையானது. மண்ணின் மாற்றத்தை மெல்ல உள்வாங்கி பிரதேசங்களை போதிய அவகாசத்துடன் அவதானித்து பல்வேறு மனிதர்களைக் கண்டு பேசி உரையாடி என நிறைய வாய்ப்புகளுடன் கூடிய பயணம் அது. நான் மிகவும் விரும்புவதும் கூட. இரயில் பயணங்கள் சக மனிதர்களின் ஈடுபாடுகளை அக்கறைகளை உணர்ந்து கொள்ள உதவுவது. தில்லி நான் மிகவும் விரும்பும் நகரம். ஏன் என்று யோசித்துப் பார்த்தால், அங்கே இந்தியாவின் எல்லா பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களையும் காண முடியும். இந்திய முகங்கள் அலையென எழுந்து நதியெனப் பெருக்கெடுத்து நமக்குக் காணக் கிடைக்கும். தில்லியை ‘’மினி இந்தியா’’ என்பார்கள். அது உண்மைதான். தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் என்றால் அது அதிவேக ரயில். இரவு பத்து மணிக்கு சென்னையில் கிளம்பினால் மறுநாள் காலை விஜயவாடா. மதியம் 2 மணிக்கு நாக்பூர். இரவு போபாலைக் கடந்து விடும். ஜான்சியை நெருங்கி விட்டால் தில்லிக்குப் பக்கத்தில் வந்து விட்டதான உணர்வு. காலை ஏழு மணிக்கு தில்லி. 31 மணி நேரப் பயணம். துரந்தோ இன்னும் விரைவாக சென்னையிலிருந்து டெல்லி செல்கிறது.

வெளிநாடுகளில் பணி புரியும் எனது நண்பர்கள் இந்தியா வரும் போது என்னைச் சந்திப்பதுண்டு. அப்போது அவர்கள் மிகவும் வருத்தப்பட்டு ஒரு விஷயத்தைக் கூறுவார்கள். வெளிநாடுகளில் அந்நாடு குறித்த அந்நாட்டுத் தலைவர்கள் குறித்த கல்வி பள்ளிகளில் அளிக்கப்படுகிறது. ஏன் தமிழ்நாட்டில் அவ்வாறு இல்லை? நமது நாட்டைப் பற்றி ஏன் நம் கல்வி நிலையங்கள் எவ்விதக் கல்வியும் அளிப்பதில்லை எனத் துயரத்துடன் விசாரிப்பார்கள். அவர்களின் கவலையை நானும் பகிர்ந்து கொள்வேன். 

நாம் காந்தியிலிருந்து துவங்கி சிந்தித்துப் பார்ப்பது இந்த விஷயத்தில் பயனளிக்கும் என்று நினைக்கிறேன். காந்தி இந்திய சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த போது இந்தியர்கள் அரசியல், பொருளாதாரம், சமூகநிலை மற்றும் கல்வி ஆகியவற்றில் விடுதலை பெற வேண்டும் என விரும்பினார். ஆகவே இந்த நான்கு தளங்களிலும் தன் செயல்பாடுகளை முன்னெடுத்தார்.

அரசியல் தளத்தில் தனது கட்சியின் உறுப்பினர் ஆண்டு சந்தாவை நாலணா (25 பைசா) என்றாக்கினார். ஆயிரக்கணக்கான சாமானியர்களை அரசியலுக்குள் கொண்டு வந்தார். இந்திய கிராமங்கள் மற்றும் கிராமத் தொழில்கள் மூலமே இந்தியர்கள் பொருளாதாரத் தன்னிறைவு பெற முடியும் என்பதால் இந்தியத்தன்மை வாய்ந்த பொருளியல் கொள்கைகளை முன்வைத்தார். மானுட சமத்துவத்தை இந்திய சமூகங்களில் கொண்டு வர சமூகங்களுக்கு இடையே ஆக்கபூர்வமான உரையாடலையும் நம்பிக்கையையும் கொண்டு வர நினைத்தார். மதிப்பீடுகளைக் கற்பிக்கும் கல்வியை அறிமுகம் செய்தார்.


இன்று தமிழ்நாட்டின் கல்வி என்பது மிகப் பரிதாபகரமான நிலையை அடைந்திருக்கிறது. இங்கே கற்பிக்கப்படும் கல்வியால் சாமானிய மக்களுக்கு எந்த வித பலனும் இல்லை. பெரும்பாலானோரை பயனற்ற கல்வியே சென்றடைகிறது என்பதாக நான் நினைப்பது:

1. தமிழ்நாடு விவசாயத்தை அடிப்படையாய்க் கொண்ட நாடு. கிட்டத்தட்ட 60 சதவீத மக்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ விவசாயத்தைச் சார்ந்து வாழக் கூடியவர்கள். அவர்களுக்கு விவசாயம் குறித்த எவ்விதமான அறிமுகமும் பாடப்புத்தகங்களில் வழங்கப்படுவதில்லை.  நெசவுத்தொழில் குறித்த அறிமுகமும் இல்லை.

2. மொழிப்பாடங்களின் தரம் மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்ற போது எட்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்த மொழிப்பாடத்தின் தரத்தையும் இப்போதுள்ள எட்டாம் வகுப்பு பாடத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியக்கூடிய உண்மை இது.

3. இந்திய நாடு குறித்த முழுமையான விபரங்கள் பாடத்திட்டத்தில் இல்லை. நாடு குறித்த தரவுகள் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வியை முடிக்கும் எவருக்கும் முழுமையாகத் தெரியும் என்ற நிலையை சர்வசாதாரணமாக உருவாக்க முடியும். ஆனால் எதுவும் நிகழ்வதில்லை. நாடு குறித்த தரவுகள் என்பது இந்திய நாட்டின் பரப்பளவு எவ்வளவு, இந்தியாவின் சுற்றளவு எத்தனை கி.மீ, இந்தியாவில் பாயும் பெருநதிகள் யாவை, இந்தியாவின் சிறுநதிகள் எத்தனை, போன்றவை. இவை மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் பன்னிரண்டு ஆண்டும் போதிக்கப்பட வேண்டும்.

4, தமிழ்நாட்டுப் பள்ளிகளில் உடற்கல்வியும் விளையாட்டும் இல்லவே இல்லை.

5. தேசத் தலைவர்களின் வாழ்க்கை குறித்து 12 ஆண்டும் போதிக்க முடியும். ஆனால் அவை மிகக் குறைவாகவே உள்ளன.

6. வணிகம், சுயதொழில் ஆகியவை குறித்து எந்த அறிமுகமும் இல்லை.

7. குடிமைப் பண்புகள் நம் சமூகத்தில் அனைவருக்குமே தேவை. அவை குறித்து எதுவுமே கற்பிக்கப்படுவதில்லை.

தமிழ்நாடு தவறான பாதையில் நெடுந்தூரம் நெடுநாட்கள் பயணித்திருக்கிறது. தமிழ்நாடு சரியான பாதையில் பயணிக்க வேண்டும்.

மகாத்மா காந்தி கல்வியை சமூக மாற்றத்துக்கான கருவியாகக் கண்டார். அவர் உருவாக்கிய - விரும்பிய கல்விமுறையில் கீழ்க்காணும் அம்சங்கள் இருந்தன.

1. உயர் விழுமியங்களுக்கான மேலான வாழ்க்கைக்கான பிராத்தனையை காந்தியின் கல்வி கொண்டிருந்தது.

2. மூளை உழைப்புக்குச் சமமாகவே உடல் உழைப்புக்கும் அதில் இடம் இருந்தது.

3. குடிமைப் பண்புகளும் சுகாதாரமும் அதில் இருந்தன.

4. மொழியும் கைத்தொழிலும் கற்றுத் தரப்பட்டன.

5. காந்திய முறைப்படி கல்வி கற்ற ஒருவரால் தனது வாழ்க்கைக்கான பணிகளை பிறரை மிகக் குறைவாய் மட்டுமே சார்ந்து வாழ முடியும்.

இப்போதுள்ள கல்விமுறையில் ஒரு மாற்றம் தேவைப்படுகிறது.