Saturday 15 February 2020

எண்ணிய எண்ணியாங்கு

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
-திருக்குறள்

நேற்று முந்தைய தினம் வெளியான ஆள்வினையும் ஆன்ற அறிவும் கட்டுரையை வாசித்து விட்டு நண்பர்கள் அழைத்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை வெளிப்படுத்தினர். ஐயங்களை எழுப்பினர். அழைத்தவர்களில் ஒருவர் அரசூழியர், ஒருவர் ஆசிரியர், ஒருவர் விவசாயி, ஒருவர் கடைக்காரர், ஒருவர் வணிகர், ஒருவர் பொறியியல் மாணவர், ஒருவர்  நியூஸிலாந்திலிருந்து அழைத்திருந்தார். 

நியூஸிலாந்திலிருந்து அழைத்த என்.ஆர்.ஐ எனது நண்பரின் உறவினர். எனது நண்பரும் கூட. அவருக்கு சென்பொன்னார் கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள அவருடைய பூர்வீக கிராமத்தில் மூன்று ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. அதில் முழுவதும் தேக்கு பயிரிட முடியுமா என்று கேட்டார். தாராளமாகச் செய்ய முடியும் என்று சொன்னேன். மிகவும் மகிழ்ந்தார். மே மாதம் இந்தியா வந்ததும் என்னைச் சந்திப்பதாகச் சொன்னார். தனக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நான் அவசியம் உதவுகிறேன் என்று சொன்னேன். 

இயந்திரப் பொறியியலில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி தனக்கு பெரிய அளவில் உதவவில்லை என்று வருத்தத்துடன் கூறினார். கல்வி மூலம் பொருளியல் மாற்றம் கொண்டு வர முடியும் என்பது யோசித்துப் பார்க்கவே அதிசயமாக இருக்கிறது என்று கூறினார்.

வணிகருக்கு ஆர்வம் தாங்கவில்லை. நான் கூறுவதில் நான்கில் ஒரு பங்கு நடந்தாலே பெரும் நன்மை பலருக்கு விளையுமே என்றார்.

விவசாயி எனது கணக்கீடு சரிதான் ; ஆனால் சாத்தியமா என்பது தெரியவில்லை என்றார். அரை ஏக்கர் நிலத்தில் வேலி அமைக்க வேண்டும். அதுதான் முதன்மைச்செலவு. அதன் பின்னர் பராமரிப்புச் செலவு குறைவே என்பதையும் ஒப்புக் கொண்டார். கணக்கீட்டில் பாதிக்குப் பாதி நடந்தால் கூட அதுவும் நல்ல லாபமே என்றார். வறண்ட நிலம் நிறைந்திருக்கும் தென் மாவட்டங்களில் இது எப்படி சாத்தியமாகும் என்பது தெரியவில்லை என்றார். அதற்கு நான் ஒரு வழி சொன்னேன். பருவமழைக்கு ஒரு மாதம் முன்னால் தேக்கு கன்றுகளை நடுவோம் எனில் மழை பொழியும் மூன்று மாதங்கள் அது தன் வளர்ச்சியைத் தானே பார்த்துக் கொள்ளும்; அதன் பின்னர் உள்ள காலங்களில் சற்று முயன்றால் வளர்த்து விடலாம்; முயற்சியும் முனைப்பும் இருந்தால் எந்த கடினமான செயலும் சாத்தியமே என்றேன். பெருமூச்சுடன் ஒப்புக் கொண்டார்.

ஆசிரியரும் அரசூழியரும் இது சாத்தியமேயில்லை என்றனர். அவர்கள் வேறு விதமாய் கூறினால்தான் ஆச்சர்யம்.

இந்தியா உணவு தானியங்களுக்கான மிகப் பெரிய சந்தை. நாம் சுதந்திரம் பெற்ற காலத்தையொட்டி வறட்சியும் பஞ்சமும் அவ்வப்போது இந்திய நிலத்தைத் தாக்கியது. ஒட்டுமொத்த இந்திய மக்கள்தொகைக்கும் உணவு கொடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருந்தது. மத்திய அரசு உற்பத்தியைப் பெருக்குங்கள் என விவசாயிகளிடம் மன்றாடிக் கொண்டிருந்தது. இப்போது இந்தியா உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது.

இன்றும் வெங்காய விலை தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் ஒரு முக்கியக் காரணியே. விளைச்சல் எவ்வாறு இருக்கும் என்பதையோ இயற்கைச் சீற்றங்களையோ எந்த அரசாலோ முழுமையாக கணித்திட முடியாது. சில மாதங்களுக்கு முன்னால், நாடெங்கும் வெங்காயத்தின் விலை உயர்ந்து கிலோ ரூ.200 க்கு சென்றது. இப்போது கிலோ ரூ.20 க்கு விற்கிறது.

எனது கட்டுரையில் நான் சொல்ல விரும்புவது இதுதான். தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வியில் அதன் விவசாயக் குடிமக்களின் வாழ்வில் பொருளியல் மாற்றத்தைக் கொண்டு வரும் யோசனைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றனவா என்பதைப் பரிசீலித்துப் பார்க்க வேண்டும். ஐம்பது ஆண்டுகள் இவ்வாறான ஒரு யோசனை அல்லது பல யோசனைகள் முன்வைத்திருக்கப்படும் எனில் அது சமூகத்தின் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். கடந்த ஐம்பது ஆண்டுகளில் எழுத்தறிவு என்பதே கல்வியறிவு என்பதாக கருதப்பட்ட ஒரு காலம் இருந்தது. கிராமத்துக் குழந்தைகள் பள்ளிக்கு வருவது என்பதும் இடைநிற்றல் இல்லாமல் பள்ளிக் கல்வியை நிறைவு செய்வதும் பெரும் செயலாக இருந்தது. தமிழ்நாட்டில் தொழில் வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு பள்ளிக்கல்வி மூலம் முன்வைக்கப்படவில்லை; அதற்கான தொலைநோக்கு அரசிடம் இல்லை.

குறு விவசாயிகள் தேக்கு பயிரிடும் விஷயத்தில் மாநில அரசாங்கம் என்ன செய்திருக்க முடியும் என நான் நினைப்பதைக் கூறுகிறேன்:

1. 12 வருட பள்ளிக்கல்வியில் மரப்பயிர் குறித்தும் அது உருவாக்கும் பொருளியல் நலன்கள் குறித்தும் பாடங்கள் இடம்பெற வேண்டும். மாணவர்களுக்கு அது போதிக்கப்பட வேண்டும்.

2. பள்ளிக்கல்வித் துறையால் இது குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அதிகபட்சம் 30 ஆண்டுகள் வரை பள்ளி மாணவர்களுக்கு முன்வைக்கப்பட வேண்டும்.

3. மரப்பயிரைக் காக்க முள்வேலி அமைக்கக் குறு விவசாயிகளுக்குத் தேவைப்படும் மூலதனத்தை அவர்களுக்கு வங்கிகள் மூலம் குறைந்த வட்டி கொண்ட கடனாக வழங்கலாம்.

4. இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஊக்கத்துடன் பள்ளியில் சொல்லப்பட்டு ஒரு தலைமுறை மனதில் கொண்டு சென்ற ஒரு விஷயத்தை செயலளவில் நிறைவேற்றுவது சாத்தியமே.

5. பள்ளிக்கல்வி மூலம் தொடர் விழிப்புணர்வு - விவசாயத்துறையின் வழிகாட்டல் - வங்கிகளின் கடன் - விவசாயிகள் பங்கேற்பு என அடுத்தடுத்து நிகழுமெனில் இது சாத்தியமே.

லட்சக்கணக்கான குறு விவசாயிகள் வாழ்வில் வளத்தைக் கொண்டு வர வேண்டும் என நினைக்கும் அரசாங்கம் மாநிலத்தில் ஆட்சி செய்தால் இது சாத்தியம். இது வருடக்கணக்காக நடக்க வேண்டிய ஒருங்கிணைக்க வேண்டிய பணி; பொருளியல் மாற்றம் பெற்ற சமூகம் அரசியல் தலைமையிடம் பல விஷயங்களை எதிர்பார்க்குமென்பதால் சமூகம் பெரிய மாற்றங்கள் இல்லாமல் இப்படியே இருக்கட்டும் என நினைக்கும் திராவிடக் கட்சிகள் இதனை எப்படி செய்வார்கள்?

விவசாயிகளின் நண்பனாக காட்டிக் கொள்ள விவசாயத்திற்கு இலவச மின்சாரம் என்று சொன்னால் போதாதா என்ன?