Thursday 20 February 2020

ஓர் இணை

சில வருடங்களுக்கு முன்னால், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் புதுதில்லியிலிருந்து சென்னை திரும்பிக் கொண்டிருந்தேன். எனக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மிகவும் பிடித்த வண்டி. கிளம்பும் நேரம், வந்து சேரும் நேரம் இரண்டு வழியிலும் தோதானது. பெரும்பாலும் ஒரே விதமான தன்மை கொண்ட பயணிகள் இருப்பார்கள். காலை பெட்டியில் ஒரு சிறு நடை நடந்தால் சக பயணிகள் அனைவரையும் அறிந்து விடலாம். எனக்கு Side Upper Berth ஒதுக்கப்பட்டிருந்தது. என்னுடன் பயணித்தவர்கள் தில்லியில் பயிலும் கல்லூரி மாணவர்கள். இளைஞர்கள் மற்றும் யுவதிகள். 15 பேர் வரை இருப்பார்கள். அதில் இருவர் காதலர்கள். நான் அங்கு சென்று அமர்ந்த சில நிமிடங்களில் அதனை அறிந்தேன்.

இளைஞர்களும் யுவதிகளும் இளமையின் துள்ளலுடனும் உற்சாகத்துடனும் ஆர்ப்பரித்து பொங்கிக் கொண்டிருந்தனர். அந்தாக்‌ஷரி பாடல்கள். கிண்டல்கள். பெட்டியில் பயணித்த அனைவருக்குமே உற்சாகம் தொற்றிக் கொண்டது.

அந்த இரு காதலர்களும் முற்றிலும் நிறைவான ஒரு பிரத்யேகமான தன்மையால் நிரம்பியிருந்தனர். அந்தப் பெண் புன்னகைக்கும் சிற்பம் போலிருந்தாள். அவளுக்குத் தேவையானவற்றை அவள் கேட்கும் முன் அளித்துக் கொண்டிருந்தான் அவள் காதலன். அவன் அளிப்பவற்றுக்கு மேல் ஏதும் தேவையற்றிருந்தால் அந்த யுவதி. அதிகம் பேசிக் கொள்ளவில்லை. ஒருவரின் கவனம் இன்னொருவர் மேல் முழு முற்றாக இருந்தது. ஒரு முழுமையான ஒருங்கிணைப்பு இருவருக்கும் இருந்தது. ஈருடல் ஓருயிர் என அவர்கள் இருந்தனர்.

ஒட்டு மொத்த பயணத்தில் அவர்கள் தற்செயலாகக் கூட தொட்டுக் கொள்ளவில்லை. அவர்களுடைய உலகில் அவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் இல்லை.

அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்; அந்த நாள் அந்த பயணம் அவர்கள் வாழ்வின் உச்சமான தீவிரமான ஆகப் பெரிய இனிமையான அனுபவம் என.