Monday 24 February 2020

ஒரு புரிதல்

சில வாரங்களுக்கு முன், நான் கார் துடைக்கும் பிரஷ் வாங்குவதற்காக கடைக்குச் சென்றேன். கடைக்குச் செல்லுதல் என்பது இங்கு கடைகளுக்குச் செல்லுதலே. இன்றைய நுகர்வுச் சூழல் ஒரே மாதிரியான பொருளை எல்லா நுகர்வோருக்கும் விற்க விரும்புகிறது. வேறு விதத்தில் சொன்னால், திணிக்கிறது. நுகர்வு கலாச்சாரம் சாமானியனை செலவழிக்கச் சொல்லித் தூண்டுகிறது. செலவு செய்வதன் மூலம் வாங்குவதன் மூலம் நீ சந்தோஷம் கொள்வாய் என்று ஓயாமல் பல விதங்களில் பிரச்சாரம் செய்கிறது. இன்று பெரும்பாலானோர் மனதுக்குள் இந்த விஷயம் வந்து விட்டது. சிந்தனை மறுசிந்தனை பரிசீலனை ஆகிய எவையும் இன்றி நுகர்வின் பின் செல்வது வெகுமக்களின் இயல்பான மனநிலையாகவும் பழக்கமாகவும் மாறியிருக்கிறது. 

என்னுடைய தொழில் கட்டிட கட்டுமானம். ஒரு பொருளின் விலையை உள்ளூரில் நான்கு இடத்தில் விசாரித்து வெளியூரில் விசாரித்து எங்கே தரமான பொருள் நியாயமான விலைக்குக் கிடைக்கிறதோ அங்கிருந்து வாங்குவது எனது பழக்கம். தரமான பொருளை நியாயமாக விற்க வேண்டும் என நினைக்கும் வணிகருக்கே எனது வணிகத்தை அளிக்க வேண்டும் என நினைப்பேன். 

நுகர்வு குறித்து இவ்வளவு எண்ணங்களும் அபிப்ராயங்களும் இருப்பதால் என்னுடைய தொழில் சார்ந்த விஷயங்கள் தவிர நான் கடைகளுக்குச் சென்று பொருள் வாங்குவது குறைவு. பெரும் வணிக அங்காடிகளைக் காணும் போது ஒவ்வொரு முறையும் வியப்பாக இருக்கும். இந்த உலகம் இத்தனை பொருட்களால் ஆனதா என்று. 

என்னுடைய மாருதி ஆம்னியை இப்போதெல்லாம் தினமும் துடைத்து வைக்கிறேன். நகரத்தின் வீதிகள் வாகனத்தை நிறுத்தி வைக்க தோதானவை அல்ல. வண்டியை பார்க் செய்வது திரும்ப எடுப்பது ஆகியவை இலகுவான அனுபவமாக இருப்பதில்லை. வெளியூர் செல்லும் போது வாகனத்தை எடுத்துச் செல்வது ; உள்ளூரில் இரு சக்கர வாகனத்தைப் பயன்படுத்துவது என்பதே எனது பழக்கம். நான் டெல்லிக்கே டூ-வீலரில் பயணிப்பவன்!

கார் துடைப்பது என்பது  ஒரு தீவிரமான செயல்பாடாக இருக்கிறது. தினமும் துடைக்கும் போது காருடன் ஒரு உரையாடலும் பிரியமும் உருவாகி விடுகிறது. என்னை என் மனநிலையை என் சுக துக்கங்களை என் கார் அறியும் என்று உணரத் துவங்கினேன். என்னைப் புரிந்து கொள்கிறது ; எப்போதும் சங்கடப்படுத்துவது இல்லை. ஓர் உற்ற துணைவனாக வாழ்வில் இடம் பெறத் துவங்கியது. காரை பார்க்கிங்கில் இருந்து எடுத்து வாசலில் வைப்பது துணியால் அதன் மேல் படர்ந்திருக்கும் தூசியைத் தட்டுவது பின்னர் ஒரு வாளி தண்ணீரை எடுத்துக் கொண்டு துணியை நீரால் நனைத்து காரைத் துடைப்பது பின்னர் உலர்ந்த துணி கொண்டு துடைப்பது காகிதத்தால் கண்ணாடியைத் துடைத்துப் பளபளப்பாக்குவது என குறைந்தது அரை மணி நேரத்துக்காகவாவது தினமும் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. தூசியைத் தட்டுவதற்கும் கார் மேட்டில் இருக்கும் மண்ணைக் கூட்டுவதற்கும் பிரஷ் இருந்தால் வசதியாக இருக்கும் என்று எண்ணினேன்.

கார் பொருட்கள் வாங்கும் கடைக்குச் சென்றேன். அவர்கள் சில பிரஷ்ஷைக் காட்டினர். அது என்னுடைய காருக்கும் நான் கார் துடைக்கும் முறைக்கும் ஒத்துப் போகக் கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு வரவில்லை. மூன்று கடைகளில் சென்று விசாரித்தேன். திருப்தியில்லை. ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றேன். அங்கே தென்னை நாரால் ஆன ஒரு பிரஷ் இருந்தது. Mat-டைக் கூட்டுவதற்கு இது வசதியானது என்று தோன்றியதால் அதை வாங்கினேன். ஒரு மரக்கடையில் தென்னை நார்க் கொத்துகளை சிப்பமாக இறுக்கிச் செருகியிருந்தனர். விலை ஐம்பது ரூபாய் என்றனர். தரமான பொருள் சகாய விலை என்பதால் வாங்கிக் கொண்டேன். பின்னர் என்னுடைய கார் மெக்கானிக்குக்கு  ஃபோன் செய்து என்னுடைய காருக்கு உபயோகமான பிரஷ் எங்கே கிடைக்கும் என்று கேட்டேன். அவர் நான் சென்று விசாரித்த கடைகளையே திரும்பவும் சொன்னார். நான் அங்கே சென்று விட்டேன் என்றேன். புதிதாகத் துவக்கப்பட்ட ஒரு கடையைச் சொன்னார். அங்கே சென்று கார் மேற்பரப்பைத் துடைக்கும் பிரஷை வாங்கினேன். பிளாஸ்டிக்கால் ஆனது. பிளாஸ்டிக் கைப்பிடி. விலை எழுபத்து ஐந்து ரூபாய்.

தினமும் ஷெட்டிலிருந்து காரை இறக்குவது மெல்ல தூசி தட்டுவது தண்ணீரால் துடைப்பது ; கொஞ்ச தூரம் காரை இயக்குவது மீண்டும் ஷெட்டில் ஏற்றுவது என்னும் செயல்களை தினமும் ஒரு பக்தன் தன் கடவுளை திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்புவது திருநீராட்டுவது பல்லாண்டு பாடுவது என்பது போல செய்து கொண்டிருக்கிறேன். அந்த தென்னை பிரஷை மேலும் இரண்டு வாங்கி வந்து வீட்டில் வைத்துக் கொண்டு ஷெல்ஃபிலும் ஜன்னல் கம்பிகளிலும் படியும் தூசியைத் தட்டிக் கொண்டிருக்கிறேன். 

காரின் கியர் அமைப்பில் மிகச் சிறிய மெல்லிய குறைபாடு ஒன்று இருந்தது. அதை யாராலும் கண்டறிய முடியவில்லை. சமீபத்தில் சந்தித்த நண்பர் ஒருவர் வண்டியை ஓட்டிப் பார்த்து விட்டு அதனைக் கண்டறிந்தார். ஒரு வெல்டிங் பட்டறையில் ஐம்பது ரூபாய் கொடுத்து பற்ற வைத்தோம். இப்போது மிக சுமுகமாக இருக்கிறது. தினமும் துடைத்து வைத்ததால் தான் பலநாள் கண்டறிய முடியாத அந்த குறையை கார் சரி செய்ய விரும்பி அதற்கான வாய்ப்பை உருவாக்கியது என்று எண்ணிக் கொண்டேன்.

யாவுமே ஈஸ்வர சொரூபம் என்பது தானே அத்வைதம்?