Saturday 28 March 2020

இராமன் கதை

நான்கு நாட்களாக வீட்டில் இருக்கும் போது சில விஷயங்கள் துலக்கம் பெற்று வந்தன. சில ஆண்டுகளுக்கு முன் இயற்கை விவசாயம் சார்ந்த  ஒரு சமூகச் செயல்பாட்டில் ஈடுபட்டிருந்தேன். அதன் ஒரு பகுதியாக ஊருக்கு அண்மையில் இருக்கும் பல கிராமங்களுக்குச் சென்று வந்தேன். சில கிராமங்கள் மிகவும் உள்ளடிங்கியவை. அந்த கிராமங்களில் நான் அவதானித்த விஷயம் ஒன்று உண்டு. அந்த  கிராமங்களுக்கு அவற்றின் வெளிப்புறத்திலிருந்து வருபவர்கள் சிறு வணிகர்களே. பாத்திர வியாபாரிகள். அண்மையில் உள்ள நகருக்கு அவர்கள் வர வேண்டும் என்றால் இரண்டு கிலோ மீட்டர் நடந்து வந்து பக்கத்தில் உள்ள சற்று பெரிய கிராமத்துக்கு வந்து அங்கு பேருந்து பிடித்து பத்து கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். நான் அங்கிருந்த போது வந்த பாத்திர வியாபாரியிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவருடைய வாடிக்கையான ‘’லைன்’’. மீண்டும் பத்து நாள் கழித்து வருவேன் என்றார்.

தமிழக கிராமங்கள் தங்கள் ஊரைத் தாண்டி பெரும்பாலும் எங்கும் செல்லாத பழக்கம் கொண்டவர்கள். அவர்களுடைய பிரதான தொழில் விவசாயம். அவர்களுடைய பொருளியல் சுழற்சி கிராமத்துக்குள்ளேயே பெரும்பாலும் நிறைவு பெற்று விடும். அவ்வாறெனில் அவர்கள் எவ்வாறு தங்கள் வாழ்வியலை உயிரோட்டத்துடன் வைத்துக் கொண்டார்கள்?

கிராம மக்களின் வாழ்வில் நாட்டுப்புறக் கலைஞர்கள் பெரும் பங்கு வகித்தனர். பறை வாத்தியத்தை இசைத்தவாறு மொத்த மகாபாரதத்தையும் சொல்லும் கலைஞர்கள் ஊருக்கு ஊர் இருந்திருக்கின்றனர். அவர்களைப் பேணும் மரபு தமிழக கிராமங்களுக்கு இருந்திருக்கிறது. அவர்களே இந்தியாவின் இதிகாசங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்கள். அதன் மூலம் தமிழ் கிராமங்களின் பண்பாட்டை உயிர்த்திருக்கச் செய்தவர்கள். 

இன்றும் ஒவ்வொரு தமிழ்நாட்டின் கிராமத்திலும் இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் கதையாகச் சொல்லக்கூடிய கதைசொல்லிகள் தேவைப்படுகிறார்கள். கிராமத்தின் சிறு குழந்தைகள் - மூன்றிலிருந்து எட்டு வயது வரையிலான குழந்தைகள் மனிதக் குரலின் வழியாக இந்த கதைகளைக் கேட்க வேண்டும். காட்சி ஊடகத்தின் மூலம் பார்ப்பதைக் காட்டிலும் இது பயன் மிக்கது. அந்த ‘’கதைசொல்லிகள்’’  அவர்கள் பண்பாட்டுப் பணிக்காக நல்ல ஊதியம் பெற வேண்டும்.