Tuesday 31 March 2020

கருணைப் பெருவெளி


நாம் வாழும் காலகட்டத்தில் தொழில்நுட்பம் பல்வேறு விதமான உபகரணங்களை நமக்கு வழங்கியுள்ளது. தொழில்நுட்பம் வழங்கும் சாதனங்களை உலகளாவிய வணிகம் மனிதத்திரள் உயிர்த்திருக்கும் எந்த நிலத்துக்கும் கொண்டு சென்றுள்ளது. இன்று உலகின் எந்த மானுட சமூகமும் உலகாயதத்தையே தன் எண்ணமாய் செயலாய்க் கொண்டுள்ளது. கடந்த நூற்றாண்டுகளில் மண் ஆண்ட மன்னர்களுக்கு இல்லாத வசதிகள் இன்று சாமானிய மனிதனுக்கும் கிடைக்கிறது. மக்களாட்சி கொள்கையளவினேனும் பொருள் ஈட்டுவதற்கான வாய்ப்பை அனைவருக்கும் தருகிறது. இவை உண்மைகள். ஆனால் இந்த உண்மைகள் மானுடத்துக்கு நலத்தை மட்டுமே வழங்கியுள்ளனவா என்பதை நாம் யோசிக்க வேண்டும். மனித உழைப்பு சுரண்டப்படுவது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருப்பினும் அறமற்ற வணிகம் மனித குலத்தை அதன் வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு மனதளவிலும் கருத்தாகவும் அடிமைப்படுத்தியுள்ளது. சக மனிதன் மேல் நம்பிக்கை இருக்க வேண்டிய இடத்தில் நம்பிக்கையின்மையை எங்கும் நிரப்பியுள்ளது. பொருளியல் விடுதலை என்ற போர்வையில் ஒட்டு மொத்த மானுடத்தின் மேலும் நுகர்வு திணிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தால் மானுடம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக திரட்டியிருக்கும் ஞானம் எல்லா மனிதனுக்கும் கிடைக்கும் இக்காலகட்டத்திலேயே வரலாற்றில் என்றும் இல்லாத அளவு நுகர்வு, வணிகத்தாலும் அரசியலாலும் ஒவ்வொரு தனிமனிதன் மேலும் திணிக்கப்பட்டுள்ளது.

மானுடன் தன் உலகியல் வாழ்வு தனக்கு அளிக்கும் சமூக, அரசியல், பொருளாதார அடையாளங்களுடன் பிணைக்கப்பட்டவன் மட்டும் தானா? அவனது விடுதலை சாத்தியம் தானா? என்ற வினாக்கள் மிகப் பெரிதாக எழுந்து நிற்கும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.

தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட யோகிகளும் ஞானிகளும் வாழும் உலகை நமக்கு அறிமுகம் செய்யும் நூல் ’’ஒரு யோகியின் சுயசரிதம்’’. இறைமை என்பது ஒவ்வொருவருக்குள்ளும் நிரம்பியிருக்கிறது; புற அடையாளங்கள் முழு உண்மை அல்ல; அவை பகுதி உண்மைகளே என்னும் அடிப்படையிலிருந்து தங்கள் புரிதலைத் துவங்கி வாழ்வின் முழுமையான நிலையை அடைந்த ஜீவன்களின் வாழ்க்கை குறித்த சில சுவடுகளை அடையாளம் காட்டுகிறது இந்நூல். 

சமூக உறவுகளையும் அதன் எல்லைகளையும் மட்டுமே நாம் புறவய யதார்த்தமாகக் கண்டிருக்கும் வாழ்வில் நம் கண்ணுக்குத் தெரியாமல் யுகயுகமாக உயிர்த்திருக்கும் யுக புருஷர்கள் மனிதர்கள் மேல் கொண்டிருக்கும் எல்லையற்ற அன்பையும் கருணையையும் உணர்வதற்கான வாய்ப்பை இந்நூல் வழங்குகிறது. 

யோகம் என்பது பிரபஞ்சத்துடன் ஒன்றுதலைக் குறிக்கும். நானும் உலகும் வேறல்ல என உணரும் நிலையே மனிதனின் முழு விடுதலை. இந்திய மரபு ஞான , பக்தி, கர்ம, கிரியா யோகங்களை மானுட விடுதலைக்கான கருவிகளாகக் கொண்டுள்ளது. பகவத்கீதை இந்த வெவ்வேறு விதமான மார்க்கங்களுகிடையே ஓர் ஒருங்கிணைப்பை உருவாக்கிய நூல். அல்லது இந்த மார்க்கங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்த நூல். 

கிரியா யோகம் மனிதன் தன்னை - தனது உடலை - தனது மனத்தை - தனது எண்ணத்தை - தனது மூச்சை தொடர்ந்து குறிப்பிட்ட முறையில் கவனிப்பதன் மூலம் வாழ்வின் எல்லா உண்மைகளையும் அறியும் மார்க்கம் என்று சொல்ல முடியும். மானுடன் வாழ்வின் போக்கிலேயே சென்று விடுதலை பெற லட்சக்கணக்கான ஆண்டுகள் தேவைப்படும் என்று இந்நூல் சொல்கிறது. இந்த உலகில் மனிதர்கள் சில ஆயிரம் ஆண்டுகளாக உயிர்வாழ்கிறார்கள் எனில் கிரியா யோகம் சொல்லும் லட்சக்கணக்கான ஆண்டுகள் புவியில் தோன்றிய முதல் உயிரிலிருந்து நிகழும் பயணத்தைக் குறிக்கிறது எனப் புரிந்து கொள்ள முடிகிறது. உயிரின் பரிணாமத்தில் லட்சக்கணக்கான ஆண்டுகளில் நிகழும் மாற்றத்தை மிக விரைவில் நிகழ்த்தக்கூடியது கிரியா யோகம். நெடுந்தொலைவை கால்நடையாகக் கடப்பதற்கும் விமானத்தில் கடப்பதற்குமான வேறுபாடு. மானுடப் பிரக்ஞையை மிக உயர் தளங்களுக்கு மிகக் குறுகிய காலத்தில் கொண்டு செல்லும் கருவியே கிரியா யோகம். 

கிரியா யோகம் பயிலும் மாணவர்களின் புற உலகத் தடைகளை சூட்சும வடிவத்தில் இருக்கும் குருமார்கள் அவ்வப்போது தோன்றி தகுந்த வழிகாட்டல் மூலம் நீக்குவதன் சித்திரம் இந்நூல் முழுதும் உள்ளது. இமயமலையின் குகைகளும் பனி பொழியும் பிராந்தியங்களும் இந்நூலை வாசிப்பவர்களை அவர்கள் மனத்தில் உணரச் செய்கிறது. அமைதியற்ற சமூகம் அதன் பிரஜைகள் ஒவ்வொருவர் மனத்திலும் உருவாக்கியிருக்கும் அவநம்பிக்கைகளை அகற்றி வாழ்வின் அற்புதங்களை உணர வைக்கும் கருணைப் பெருவெளியாகவும் இந்த உலகம் இருப்பதை இந்நூல் குறிப்புணர்த்துகிறது.

இந்தியா ஆன்மீகமான சாதனைகளுக்கான தேசமாகவே காலங்காலமாக இருந்துள்ளது.  இந்தியா ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தன் நாட்டை நோக்கி ஆக்கிரமிக்க வந்தவர்களுடன் போராடியதும் அதன் ஆன்மீகப் பாரம்பர்யத்தைத் தொடர்வதற்காகத்தான். இந்திய ஆன்மீகத்தின் முக்கியமான பகுதியான கிரியா யோகம் குறித்து ஒரு ஞானியால் எழுதப்பட்டிருக்கும் நூல் ‘’ஒரு யோகியின் சுயசரிதம்’’.

கருணைப் பெருவெளியின் அன்பான கண்கள் நம்மைக் காண்கின்றன என்பதே வாழ்வுக்கு பெரும் நம்பிக்கை தருகிறது. நமது அறிதலுக்கு அப்பாற்பட்ட அற்புதப் பெருவெளிகளில் அலைந்து திரியும் அனுபவத்தைத் தரும் நூல் ‘’ஒரு யோகியின் சுயசரிதம்’’.