தமிழ்நாட்டில் இந்த காலகட்டத்தில் தாது வருஷப் பஞ்சம் குறித்தும் அப்போது ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்தும் அப்போதைய ஆட்சி பஞ்சத்தை எப்படி எதிர்கொண்டது என்பது குறித்தும் ஓர் உரையாடல் எழக் கூடும் என்று எதிர்பார்த்தேன். அவ்வாறு ஏதும் நிகழவில்லை.
தமிழ்நாட்டில் எப்போதுமே இந்திய அரசாங்கத்துக்கு எதிரான குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கும். இந்திய அரசாங்கம் தமிழக மக்களுக்கு எதிராக எப்போதும் செயல்படுகிறது என்ற பரப்புரை சுதந்திரம் பெற்றதிலிருந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. ‘’வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’’ என்று மேடைதோறும் முழங்கினார்கள். ‘’அடைந்தால் திராவிட நாடு ; இல்லையேல் சுடுகாடு’’ என்றார்கள். தமிழ்நாட்டின் பொது மக்கள் சிந்தையில் எப்போதும் தில்லி குறித்த ஐயங்களை தமிழ்நாட்டில் உருவாக்கிக் கொண்டேயிருந்தனர். அந்த காலகட்டத்திலும் இந்திய அரசின் நிதியிலிருந்து மக்கள் பிரதிநிதிகளாக ஊதியம் பெற்றுக் கொண்டு இருந்தனர் என்பது நகைமுரண்.
பிரிட்டிஷ் ஆட்சி இந்திய மக்களைப் பொருளாதார ரீதியாக சுரண்டுகிறது என்பதை மகாத்மா காந்தி தேசத்திடம் எடுத்துரைத்தவண்ணம் இருந்தார். நாம் உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்ளும் மிகச் சிறிதளவு உப்பிலிருந்து கூட வரி பெறும் அளவுக்கு பிரிட்டிஷார் இரக்கமற்றவர்கள் என்பதை இந்தியாவின் எளிய மக்களுக்கும் புரிய வைத்தார். ( காந்தி வாழ்வில் நடந்த ஒரு சம்பவம். இந்திய சுதந்திரத்தின் போது காந்தி தில்லியில் இல்லை. வங்காளத்தில் இருந்தார். தில்லி திரும்பிய போது நேரு மகாத்மாவைச் சந்திக்கிறார். காந்தி அன்று மௌன விரதத்தில் இருக்கும் நாள். நேரு காந்தியிடம் சுதந்திர சர்க்கார் செய்ய வேண்டிய காரியமாக நீங்கள் நினைப்பது என்ன என்று கேட்கிறார். மகாத்மா ஒரு காகிதத்தில் பென்சிலில் ''Remove salt tax'' என்று எழுதிக் காட்டுகிறார்). ஒத்துழையாமை இயக்கம் இந்தியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் பிரிட்டிஷார் ஆட்சி நடத்த முடியாது என்பதை குறியீட்டு ரீதியில் எடுத்துரைத்தது. அவரது காங்கிரஸ் கட்சி நாட்டின் ஒவ்வொரு கிராமங்களிலும் ஊழியர்களையும் தொண்டர்களையும் கொண்டு கிட்டத்தட்ட ஓர் இணை அரசாங்கமாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தது.
சுதந்திரத்தை ஒட்டி நம் நாடு பெரும் மதக்கலவரத்தைச் சந்தித்தது. தகவல் தொடர்பு மிகக் குறைவாய் இருந்த காலகட்டத்தில் பொருளாதார நிலை வலுவாக இல்லாத ஓர் அரசாங்கத்தைக் கொண்டு இந்திய ஜனநாயகம் நடைபோடத் துவங்கியது. ஜனநாயகம் அனைவருக்குமான பிரதிநிதித்துவத்தை அளிப்பது . நமது அரசியல் சாசனம் அவ்வகையில் மேலான ஒன்றே. நாம் ஒரு தேசமாக மெல்ல மெல்ல எனினும் முன்னேறியவாறே இருக்கிறோம் என்பதே உண்மை.
நாம் சாதிக்க வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன. நாம் மாற்றிக் கொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்று வரை நாம் குடிமைப்பண்புகள் மிக்க சமூகமாக உருவாகி விட்டோமா என்பது மிகப் பெரிய கேள்வி. அரசியல் கொந்தளிப்புகள் மற்றும் பூசல் மனநிலையைத் தாண்டி கோடிக்கணக்கான சாமானிய இந்தியர்கள் இந்திய அரசு உருவாக்கிக் கொடுத்த வாய்ப்புகளின் வழியாகவே வெற்றி பெற்று எழுந்தனர் என்பது வரலாறு.
தமிழ்நாட்டில் மத்திய அரசை எப்போதுமே வசைபாடியே பழகி விட்டனர். இந்த வசைபாடல் லட்சக்கணக்கான தமிழ் மக்களை தவறான திசையில் வழிநடத்துகிறது என்பதே உண்மை. எந்த நாடாயினும், எந்த ஜனநாயகமாயினும் தனது தார்மீக அடிப்படைகளுக்கு எதிராகப் பேசும் எந்த குழுவையும் அனுமதிக்காது என்பதே உண்மை. ஆயினும் இந்தியாவில் பல்வேறு காரணங்களால் இவ்வகையான குழுக்கள் இடைவெளியின்றி செயல்படுகின்றனர் என்பது ஒரு துயர். தமிழ்நாட்டில் அதன் தாக்கம் இன்னும் அதிகம் என்பது மேலதிகத் துயர்.
தமிழ்நாட்டில் இந்திய அரசாங்கத்தை எதிர்க்கும் போக்கை திராவிடக் கட்சிகள் பின்பற்றின. அவர்கள் இந்தியா சுதந்திரம் பெற்ற போது பிரிட்டிஷார் இந்த நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று தீர்மானம் போட்டார்கள். அந்த பிரிட்டிஷ் அரசாங்கம் தமிழ் நாட்டு மக்களுக்கு அந்த தீர்மானம் போடப்பட்டதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் என்ன செய்தது என்பதைப் பார்ப்போம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் தமிழ்நாட்டின் மக்கள்தொகை இன்று இருப்பதைப் போல நான்கு மடங்கு குறைவாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்து கொள்வோம். இன்றைய மக்கள் தொகை 7 கோடியே 20 லட்சம். அன்று 1 கோடியே 80 லட்சம் மக்கள் தொகை இருந்திருக்கும் என்று கற்பனை செய்து கொள்வோம். அதில் 40,00,000 மக்கள் உண்ண உணவின்றி இறந்து போயிருக்கிறார்கள். கிட்டத்தட்ட தமிழ்நாட்டு மக்கள் தொகையில் கால் பங்கு சில மாதங்களில் பிணமாகி விழுந்திருக்கின்றனர். அதனை பிரிட்டிஷ் அரசாங்கம் வேடிக்கை பார்த்தது. வரலாற்றின் குரூரமான உண்மைகளில் ஒன்று அந்த பஞ்சம் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பேராசையால் மக்கள் மீது திணிக்கப்பட்டது என்பது. அப்போது நாட்டின் பல பகுதிகளில் இருந்த உபரி விளைச்சலை பிரிட்டிஷ் அரசாங்கம் துறைமுகங்கள் மூலம் தனது நாட்டுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது. அன்று இருந்த நிலைமையில் சாகக் கிடந்த மக்கள் உணவளிக்கப்பட்டிருந்தால் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு கணக்கேயில்லாமல் தங்களால் ஆன உடல் உழைப்பை அளித்திருப்பார்கள். ஆனால் அவர்களை தங்கள் பிரஜைகளாக மனிதர்களாகக் கூட கருதாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் சாக விட்டது. இந்த அரசாங்கம் எங்களை நீங்கிச் செல்லக்கூடாது என்று தீர்மானம் போட்டது திராவிட இயக்கம்.
அந்த காலகட்டத்தில் வள்ளலார் உருவாக்கிய சத்திய ஞான சபை அன்னதானத்தை ஒரு சமயச் செயல்பாடாக முன்னெடுத்தது. இன்றும் அதன் பணி தொடர்கிறது.
இந்தியா இன்று உணவுத் தன்னிறைவைப் பெற்றிருக்கிறது என்பது ஓர் உண்மை. நாடே முடங்கியிருக்கும் நிலையிலும் தனது கையிருப்பில் உள்ள உணவு தானியத்தை இந்தியாவின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிவாரணமாக வழங்கும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறது இந்திய அரசு. இது ஒவ்வொரு இந்தியனுக்குமான பெருமிதம் இல்லையா? ஒரு உலகளாவிய நெருக்கடியை நாம் வெற்றிகரமாக எதிர்கொள்வது அறமற்ற முறையில் நம்மை ஆண்ட அன்னியர்களுக்கு நாம் ஆக்கபூர்வமாக அளிக்கும் பதில் இல்லையா?