Wednesday 8 April 2020

இந்திய நிலத்தின் வாய்ப்புகள்

எனது சிறுவயதில் நான் சுவாமி விவேகானந்தர் நூல்களை வாசித்திருக்கிறேன். அப்போது பத்து வயதிருக்கும். சுவாமிஜியின் சொற்கள் பெரும் மனஎழுச்சியை உண்டாக்கும். ஒவ்வொரு மனிதனும் கொள்ள வேண்டிய தன்னம்பிக்கை குறித்து சுவாமிஜி சொல்வார். இந்திய மண்ணின் பெருமைகள் குறித்து பேசுவார். இந்தியாவின் ஆன்மீகப் பாரம்பர்யம் குறித்து எடுத்துரைப்பார். இந்தியா உலகிற்கு வழிகாட்டியாய் அமையும் என்று உறுதியாகக் கூறுவார். இவை என் மனதில் பதிவாகியிருந்தன. இப்போதும் அந்த சொற்கள் அகத்தில் உள்ளன.

நான் இப்போது இந்த தருணத்தில் கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கிறேன். தமிழ்நாட்டின் பாடநூல்கள், பத்திரிக்கைகள் எவற்றிலும் இந்தியாவின் உயிரான தன்மை குறித்து முன்வைக்கப்படுகிறதா என எண்ணிப் பார்க்கிறேன்.  இல்லை என்பதே உண்மை. 



இந்தியா அரசியலை அடிப்படையாய்க் கொண்ட சமூகம் இல்லை. இந்த நிலம் இன்றும் பிரதானமாக விவசாயத்தையே அடிப்படையாய்க் கொண்டது. இன்றும் இந்த மண்ணின் கோடிக்கணக்கான மக்கள் விவசாயத்தையே நம்பியிருக்கின்றனர். தாமோதர் தர்மானந்த கோசாம்பி போன்ற இந்திய மார்க்ஸிய அறிஞர்களே இந்த உண்மையை உரைத்துள்ளனர். கோசாம்பி அரசாங்கம் கிராமங்களில் குடிமக்களிடமிருந்து பெறும் வரியை தானியமாகப் பெற வேண்டும் என்ற திட்டத்தை முன்வைக்கிறார். 



ஓர் இந்திய கிராமம் என்பது ஆயிரம் பேர் கொண்ட ஒரு ஜனத்திரளை அவர்களுக்குள் தன்னிறைவுடன் வாழும் ஒரு வாழ்க்கைமுறையை பல நூற்றாண்டுகள் பழக்கமாகக் கொண்டுள்ளது. அதில் பல சாதகமான அம்சங்கள் உள்ளன. மிகச் சில எதிர்மறையான அம்சங்கள் உள்ளன. எதிர்மறை அம்சங்களைக் குறைத்து நேர்மறையான விஷயங்களை அதிகரிப்பதே ஆக்கபூர்வமான செயல்பாடாக இருக்கும். உலகின் எந்த அரசும் மக்களின் சமூகப் பழக்கத்தையே அடித்தளமாய்க் கொண்டு எழுப்பப்படுகிறது. அது உருவாக்கும் எந்த விஷயமும் அந்த மக்களுக்கு உதவுவதாய் இருக்க வேண்டும்.



இந்தியாவின் சுதந்திரத்துக்குப் பின் நிகழும் பல்வேறு திட்டமிடல்களில் மேற்கத்திய நாடுகளின் முறைகளே பின்பற்றப்படுகின்றன. அவர்கள் மேற்கொள்ளும் திட்டமிடல்கள் அப்படியே நகலெடுக்கப்படுகின்றன. அது இந்திய கிராமங்களையும் கிராம மக்களையும் விவசாயத்தையும் சிதைத்தது என்பதே உண்மை. நான் ஒரு உதாரணம் சொல்கிறேன். இந்தியாவில் சோழர்கள், ஹொய்சாளர்கள், காகதீயர்கள், மௌரியர்கள், மராத்தியர்கள், ராஜபுத்திரர்கள், சீக்கியர்கள் அரசாங்கங்களை நடத்தியிருக்கின்றனர். அவர்கள் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நீர் மேலாண்மைத் திட்டங்களின் பயன்களை இன்றும் நாம் அனுபவிக்கிறோம். இந்த அரசுகள் அனைத்துமே கிராமங்களை - கிராமத்தின் இயங்குமுறையை வலுப்படுத்தியிருக்கின்றனர். விளைநிலங்கள், அதற்கான பாசன வசதிகள், பாசனக் கருவிகளை உருவாக்கி பழுதுபார்ப்பவர்கள், பூசகர், கல்விப் பணியாற்றும் ஆசிரியர், மருத்துவர், கால்நடைகளுக்கு வைத்தியம் செய்பவர்கள் ஆகியோரின் ஜீவனோபாயத்திற்கான பொறுப்பினை அந்தந்த கிராமங்களே எடுத்துக் கொண்டுள்ளது. அதனால் தலைமுறை தலைமுறைகளாகத் தொடரும் ஒரு பண்பாட்டுப் பாரம்பர்யத்தை நமது நாடு தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஒரு கிராமம் தன்னளவில் தனது தேவையை சமாளித்துக் கொள்ளும் எனில் அரசாங்கம் என்ற அமைப்பு மிகக் குறைவாய் இருந்தாலே போதுமானது. நிர்வாகச் செலவும் மிகவும் குறைவாக இருக்கும். 



தமிழ்நாட்டில் சித்த மருத்துவம் பாரம்பர்யமானது. பத்து கிராமத்துக்கு ஒரு சித்த மருத்துவர் இருப்பது போல ஒரு அமைப்பை உள்ளாட்சி அமைப்புகளைக் கொண்டே உருவாக்கிக் கொண்டிருக்க முடியும். மூலிகைகளின் முக்கியத்துவம் மக்களுக்கு உணர்த்தப்படும். மூலிகைகள் விளைவிக்கப்படுவது நிகழும். மக்களின் வருவாய் பெருமுதலாளிகளின் மருந்து நிறுவனங்களுக்கு செல்வது குறையும். ஒரு இந்திய பாணி சிந்தனையால் மட்டுமே சின்னஞ்சிறு அலகு குறித்து சிந்திக்க முடியும். 



முதலாளித்துவம் எப்போதுமே சிறு அலகு குறித்து சிந்திப்பதில்லை. ஒரு சிறு அலகு என்பது அதற்கு தனது விற்பனைச் சங்கிலியின் கடைசி முனை மட்டுமே. அங்கிருந்து சங்கிலியின் முதல் கண்ணியான உற்பத்தியாளனுக்கு வந்து சேரும் வருவாயை மட்டுமே அது கருதும். அந்த விற்பனைச் சங்கிலியை லாபகரமாக ஆக்கிக் கொள்ள பராமரிக்க தனது லாபத்தின் ஒரு பகுதியை எப்போதும் செலவிட்டவாறே இருக்கும். இந்தியப் பாரம்பர்வையும் இந்தியப் பார்வையும் சிதைக்கப்படுவது முதலாளித்துவத்துக்கே பயன் தரும். 



கிராமங்களை வலுவூட்டும் ஒரு பொருளாதார அமைப்பை நாம் உருவாக்க வேண்டிய நேரம் இது.