Thursday 23 April 2020

இந்தியா என்னும் அற்புதம்

இந்தியா அடிப்படையில் ஒரே பண்பாடு கொண்ட தேசம். இதனை இந்தியாவெங்கும் பயணித்தவர்களால் உணர முடியும். இந்திய மக்கள் பேசும் மொழியால் அணியும் ஆடைகளால் உண்ணும் உணவால் உணவுப்பழக்கங்களால் நிகழ்த்திக் கொள்ளும் சமயச் சடங்குகளால் கூட வேறுபட்டே இருக்கிறார்கள். ஒரு மாநிலத்தில் ஒவ்வொரு நூறு கிலோமீட்டருக்கும் இந்த மாற்றம் இருந்து கொண்டேயிருக்கிறது. அவ்வாறெனில் நம்மால் எப்படி இந்தியா அடிப்படையில் ஒரே பண்பாடு கொண்ட தேசம் என்று கூறமுடிகிறது? அதனை இயற்கையுடன் ஒத்திசையும் தன்மை என்று சொல்ல முடியும். 

ஐரோப்பாவை - உலகைப் புரட்டிப் போட்ட அரசியல் சித்தாந்தங்கள் மனித மைய சிந்தனை கொண்டவை. இயற்கையை எப்படிச் சுரண்டி மனிதன் வளம் பெறுவது என்பதற்கான வாய்ப்புகளை முன்வைப்பவை. அவை பேருரு கொண்டு எழுந்த போது மனித உழைப்பே சுரண்டப்பட்டது. தொழிற்புரட்சியை ஒட்டிய ஐரோப்பாவின் காலகட்டம் மனித உழைப்பு உலக வரலாற்றில் உச்சமாக சுரண்டப்பட்ட காலம். 

இந்திய சிந்தனை இந்திய நிலமெங்கும் ஒரே அடிப்படையை உருவாக்கியுள்ளது. அச்சிந்தனையின் அடிப்படையிலிருந்தே ஒவ்வொரு இந்திய சமூகத்தின் பழக்கவழக்கங்கள் உருவாகி வந்துள்ளன. இந்தியாவின் பொதுவான பண்பாடு என ஒன்றைக் கூற முடியுமானால் அது இயற்கையை தெய்வமாக வழிபடுதல் என்பதாகும். நதி, மலை, மண் ஆகிய அனைத்தையும் தெய்வ வடிவமாகப் பார்ப்பது என்பது இந்தியாவின் பழங்குடிகள், விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள் என அனைவருக்குமான பழக்கமாக இன்று வரை இருந்து வருகிறது. இந்தியத் தன்மை என்பது இந்த அடிப்படையிலிருந்து உருவாகி வரும் ஒன்றே.

இங்கே ஞானிகளின் யோகிகளின் பெருநிரை எப்போதும் உருவாகி வந்து கொண்டேயிருப்பதின் ரகசியமும் இதுவே. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்திய மனம் இயற்கையை வழிபடுகிறது. இயற்கையுடன் இயைந்து இருக்கிறது. தானும் தான் வாழும் சூழலும் வேறல்ல என்பதே இந்தியனின் ஆழ்மனதில் பதிந்திருக்கும் உண்மை. உலகின் எந்த சமூகத்துக்கும் இல்லாத தனித்துவம் இது. ஐரோப்பாவின் நுகர்வுத் தன்மை இந்தியத்தன்மை மீது பலவிதங்களில் தாக்குதல் தொடுக்கிறது. அதனைக் கடந்து மேலெழும் அற்புதத்தை இந்தியா நிகழ்த்தும்.