சில ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு பத்திரப்பதிவுக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தேன். பதிவுச்செலவுக்குப் பணம் தேவைப்பட்டது. என் கைக்கு வந்திருக்க வேண்டிய தொகை சில நாட்கள் தள்ளிப் போனது. எனது உடனடித் தேவை ஒரு லட்ச ரூபாய். இரண்டே நாளில் பதிவு முடிந்ததும் திருப்பித் தந்து விடலாம். கைக்கு உடனடியாக பணம் வேண்டும். வெளிநாட்டில் பணி புரிந்த எனது நண்பருக்குத் தகவல் சொன்னேன். அவர் ‘’மணி டிரான்ஸ்ஃபர்’’ முறையில் பணம் அனுப்பி விட்டார். எனது அடையாள அட்டையையும் குறிப்பு எண்ணையும் தெரிவித்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று அலைபேசியில் கூப்பிட்டுச் சொன்னார். நான் அதனை என் கைவசமாக்குவதற்கு ‘’மணி டிரான்ஸ்ஃபர்’’ மையத்திற்குச் சென்றேன். அவர்கள் ரூ. 50,000க்குள் என்றால் ரொக்கமாகத் தருவோம். அதற்கு மேல் என்றால் கோடிட்ட காசோலையாகவே தர முடியும் என்றனர். அவ்வாறு அளிக்குமாறு சொன்னேன். எங்கள் வங்கிக் கணக்கில் அவ்வளவு தொகை இல்லை. மாலை 3 மணிக்கு மேல் எங்கள் கணக்கில் பணம் சேர்ந்திருக்கும்; அப்போது தருகிறோம் என்றார்கள். நான் அடுத்த மையத்துக்குச் சென்றேன். அதே பதில். அடுத்தடுத்து மூன்று மையங்கள். சொல்லி வைத்தாற் போல ஒரே பதில். எனது தேவையையும் அவசரமும் யார் கவனத்திலும் இல்லை. இந்த ‘’மணி டிரான்ஸ்ஃபர்’’ வசதி தலைமை அஞ்சல் நிலையத்தில் இருப்பது என் நினைவுக்கு வந்தது. அங்கே சென்றேன்.
ஒரு நடுத்தர வயது பெண்மணி ‘’மணி டிரான்ஸ்ஃபர்’’ சாளரத்தின் பொறுப்பில் இருந்தார். என்னுடைய தேவையையும் நிலையையும் சொன்னேன். நான்கு இடங்களுக்குச் சென்று விட்டு இங்கே வந்திருப்பதைத் தெரிவித்தேன். அவரும் காசோலையாகவே வழங்க முடியும்; ஆனால் உடன் பெற்றுக் கொள்ளலாம் என்றார். அப்போதே நேரம் காலை பத்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. காசோலையில் மேலதிகாரி கையெழுத்திட வேண்டும்; நீங்கள் 11 மணிக்கு வாருங்கள் என்றார். அதன் பின் சென்று வங்கியில் கொடுத்தால் அவர்கள் தங்கள் காசோலைகளை கலெக்ஷனுக்கு அனுப்பி இருப்பார்களே என்றேன். அவர் இதனை எப்படி அணுகுவது என்பது குறித்து யோசித்தார்.
‘’உங்களுக்கு அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு இருக்கிறதா’’ என்று கேட்டார். நான் என்னுடைய சிறு வயதில் முதல் சேமிப்புக் கணக்கை அஞ்சல் அலுவலகத்தில் தான் துவக்கினேன். ஆனால் இப்போது அஞ்சலகக் கணக்கு இல்லை; வங்கிக் கணக்கு மட்டுமே இருக்கிறது என்றேன். வீட்டுக்குச் சென்று உங்கள் புகைப்படமும் அடையாள அட்டை ஒன்றும் கொண்டு வாருங்கள்; நாம் இங்கே ஒரு கணக்கை இன்றே துவக்கி உங்கள் கணக்கில் ‘’மணி டிரான்ஸ்ஃபர்’’ தொகையை டெபாசிட் செய்து உடனே எடுத்து விடலாம் என்றார். சரி என்று நான் புறப்பட்டேன். ‘’ஒரு நிமிடம்’’ என்று காத்திருக்கச் சொன்னார். அவருக்கு இரண்டு சாளரம் தள்ளியிருந்த கணக்கு துவங்கும் பிரிவுக்குச் சென்று கணக்கு துவங்கும் படிவமும் பணம் எடுக்கும் படிவத்தையும் கொடுத்து நிரப்பச் சொன்னார். நிரப்பிக் கொடுத்தேன். வீட்டுக்குச் சென்று அவர் கேட்டதை எடுத்து வந்து தந்தேன். என் கையில் மொத்த ரொக்கத்தையும் அவர் கொடுத்த போது நேரம் காலை 10.15. பாஸ் புத்தகத்தை மதியம் மூன்று மணிக்கு மேல் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்.
நான் நன்றி தெரிவித்தேன்.
‘’என்னுடைய அனுபவத்தில் நான் எளிய பணியைக் கூட சிக்கலாக்கி வாடிக்கையாளர்களைச் சிரமப்படுத்தும் வங்கி ஊழியர்களையே பெரும்பாலும் கண்டிருக்கிறேன். உங்களைப் போன்றவர்கள் அபூர்வமானவர்கள்’’ என்றேன்.
அவர் மெலிதாகப் புன்னகைக்க மட்டுமே செய்தார்.