Tuesday 5 May 2020

கம்பன் - கிட்கிந்தா காண்டம் - 1



தேன் படி மலரது செங்கண் வெங் கைம்மா
தான் படிகின்றது தெளிவு சான்றது
மீன் படி மேகமும் படிந்து வீங்கும் நீர்
வான் படிந்து உலகு இடைக் கிடந்த மாண்பது. (3811)

தேன்மலர்கள் படிந்த நதி
பெரும் யானைகள் மூழ்கிக் களிக்கும் நதி
விண்ணளவு விரிந்த நதி
மேகமென நீர் அடர்ந்த நதி

வண்ண நறும் தாமரை மலரும் வாசக் குவளை நாள் மலரும்
புண்ணின் எரியும் ஒரு நெஞ்சம் பொதியும் மருந்தின் தரும் பொய்காய்!
கண்ணும் முகமும் காட்டுவாய்; வடிவும் ஒருகால் காட்டாயோ?
ஒண்ணும் என்னின் அஃது உதவாது உலோவினாரும் உயர்ந்தாரோ? (3834)

விரிந்த குவளை சேதாம்பல் விரை மென் கமலம் கொடிவள்ளை
தரங்கம் நெருங்கு வரால் ஆமை என்று இத்தகையதமை நோக்கி,
மருந்தின் அனையாள் அவயவங்கள் அவை நிற்கண்டேன்; வல் அரக்கன்
அருந்தி அகல்வான் சிந்தினவோ? ஆவி! உரைத்தி ஆம் அன்றே. (3835)


வண்ணத் தாமரையே
இனிய குவளைகளே
பிரிவால் எரிகிறது என் நெஞ்சத்துயர்
பொய்கையே
உம் மலர்களில்
அவள் கண்களையும் முகத்தையும் காண்கிறேன்
அவள் முழு உரு எப்படிக் காண்பேன்?

பஞ்சு பூத்த விரல் பதுமம் பவளம் பூத்த அடியாள் என்
நெஞ்சு பூத்த தாமரையின் நிலையம் பூத்தாள், நிறம் பூத்த
மஞ்சு பூத்த மலர் பூத்த குழலாள் கண்போல் மணிக் குவளாய்!
நஞ்சு பூத்தது ஆம் அன்ன நகையால் என்னை நலிவாயோ. (3841)

காலின் மா மதலை! இவர் காண்மினோ! கறுவு உடைய
வாலி ஏவலின் வரவினார்கள் தாம்; வரிசிலையர்;
நீல மால் வரை அனையர்; நீதியா நினைமின் என,
மூலம் ஓர்கிலர், மறுகி ஓடினார், முழை அதனின். (3854)

அனுமன் ஒரு சிரஞ்சீவி. படைப்புலகில் எல்லாக் கதாபாத்திரங்களும் ஜீவனுடன் திகழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள். எனினும் அனுமன், பீமன் ஆகிய பாத்திரங்கள் காலந்தோறும் புது எழில் சூடி வளர்ந்து கொண்டேயிருக்கிறார்கள். உலகில் இந்தியக் குழந்தைகளுக்குக் கிட்டியிருக்கும் பெரும் பேறு என்பது அவர்கள் அனுமனின் சாகசங்களை தம் அன்னையர் கூறும் கதை மூலம் கேட்டறிந்து வளர்கிறார்கள் என்பதே.
சூரியனைப் பழம் என எண்ணி உண்ணப் பாய்ந்தவன், பாறைகளையும் மலைகளையும் பஞ்செனக் கையாள்பவன், காற்றில் விரைந்து பறப்பவன், எப்போதும் யோகத்தில் இருப்பவன், அறிஞன் மற்றும் உற்சாகம் அளிப்பவன் என்ற அனுமனின் சித்திரங்கள் அளிக்கும் மகிழ்ச்சியானது குழந்தைகளுக்கு கதை கேட்கும் நாளில் துவங்கி அவர்கள் இறுதி மூச்சுவரை கூடவே வருவது.

இந்தியாவில் கோட்டைவாயில்களில் அனுமன் சிலையைப் பிரதிட்டை செய்திருப்பர். எதிரிகளிடமிருந்து காப்பளிப்பவனாக அனுமன் இந்தியா முழுதும் வணங்கப்படுகிறான். பன்னெடுங்காலமாக இந்தியாவில் போர் வீரர்களால் ஆற்றல் அளிக்கும் தெய்வங்களில் ஒன்றாக அனுமன் வழிபடப்படுகிறான்.

கம்பராமாயணத்தில் அனுமனைக் காட்ட வேண்டிய இடத்தில் கம்பன் சில ஆர்வமூட்டும் யுக்திகளைக் கையாள்கிறார். அனுமப் படலத்தில் அனுமனின் தோற்றம் மூலமோ செயல் மூலமோ அனுமனைக் காட்டாமல் – சித்தரிக்காமல் – சுக்ரீவனின் விளி மூலம் அறிமுகப்படுத்துகிறான்.

காலின் மா மதலை
’’கால்’’ என்றால் காற்று. பெருங்காற்று.
மதலை என்றால் குழந்தை.
காலின் மா மதலை – பெருங்காற்றின் பெருங்குழந்தை.
பாரதியின் ‘’எந்தையும் தாயும்’’ பாடலில் மதலை என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பார்.

அவ் இடத்து, அவர் மறுகி, அஞ்சி, நெஞ்சு அழி அமைதி,
வெவ் விடத்தினை மறுகு தேவர், தானவர், வெருவல்
தவ்விடத், தனி அருளு தாழ்சடைக் கடவுள் என,
இவ் இடத்து இனிது இருமின்; அஞ்சல் ‘என்று இடை உதவி. (3855)

மறுகுதல் – கலக்கமடைதல்
அஞ்சி – பயந்து
நெஞ்சு அழி அமைதி – அமைதி இழந்து, பதட்டமடைந்து

அச்சுறுதலுக்கு உள்ளாகியிருப்பவர்களின் புலன்கள் மாறுபாடான எதையும் அடையாளம் கண்டால் பலவிதங்களில் எதிர்வினையாற்றும். கலக்கமடைதல் அவற்றில் ஒன்று. கலக்கம் தெளிவுக்கு எதிரானது. தெளிந்த மனத்தால் மட்டுமே ஒன்றைப் புரிந்து கொள்ள முடியும். மதிப்பிட முடியும். தெளிவற்ற கலங்கிய மனத்தால் எதையும் அதன் தன்மையில் அறிய முடியாது.

அச்சம் என்பது நுண்ணியதாய் தொடங்கி மனமெங்கும் பேருரு கொண்டு நிறைவது.

அச்சுறுதலுக்கு உள்ளாகி பதுங்கியிருப்பவர்களுக்கு அப்போதைக்கான தற்காலிக அமைதி என்பது ஆறுதல் பரிசு போல. புதிதாக ஏதோ தென்படும் போது அந்த அமைதி அழிந்து பதட்டம் உருவாகி விடுகிறது.
சுக்ரீவனும் அவன் கூட்டத்தாரும் இராம இலக்குவரைக் கண்டதும் மேற்கண்ட மூன்று விதங்களில் துயருற்றனர் என்பதை ’’மறுகி அஞ்சி நெஞ்சு அழி அமைதி’’ என்று கம்பன் காட்டுகிறான்.

பாற்கடல் கடையப்பட்ட போது, தேவர்களும் அசுரர்களும் அதனைக் கண்டு திகைத்துச் சிவனிடம் ஓடினர். இராம இலக்குவரைக் கண்ட சுக்ரீவன் அவ்வாறே ஓடினார். அப்போது சிவன் அவர்களுக்கு அபயம் அளித்தவாறு அனுமன் சுக்ரீவனுக்கு ஆறுதல் அளித்தான்.

அடுத்த நான்கு பாடல்களில் அனுமனின் மனம் இயங்கும் விதத்தை கம்பன் காட்டுகிறான். அதன் சித்திரத்தை வாசகனுக்கு அளிப்பதன் மூலம் அனுமனின் மேதைமையையும் நுட்பத்தையும் வாசகன் கற்பனை செய்து கொள்ள அந்த இடைவெளிகளை நிரப்பிக் கொள்ள இடமளிக்கிறான்.

அஞ்சனைக்கு ஒரு சிறுவன், அஞ்சனக் கிரி அனைய
மஞ்சனைக் குறுகி, ஒரு மாணவப் படிவமொடு,
‘வெஞ்சமத் தொழிலர், தவம் மெய்யர், கைச் சிலையர் ‘என,
நெஞ்சு அயிர்த்து, அயல் மறைய நின்று, கற்பினின் நினையும். (3856)

காலின் மா மதலை இப்போது நிலைமையை அவதானிக்க எதிராளிகளை மதிப்பிட தன் பேராற்றலை சற்று விலக்கி விட்டு சூழ்நிலையின் தேவையை முன்னிறுத்தி ஓர் எளிய மாணவனின் உருவம் கொண்டு மறைந்து நின்று இராம இலக்குவர்களை அவதானிக்கிறான்.

ஒருவரைக் கண்டதும் மனதில் ஏற்படும் முதலெண்ணம் என்பது அவர்களுடனான உறவில் புரிதலில் முக்கிய இடம் வகிப்பது.

போர்த்தொழில் புரிபவர்கள், தவ உருவம் தாங்கியுள்ளனர், கையில் வில் ஏந்தியிருக்கும் வில்லாளிகள் என மனதில் அடுக்கிக் கொள்கிறான். போர்த்தொழில் புரிபவர்கள் அறத்துக்காகப் போராடும் இயல்பு கொண்டவர்கள். ஆகவே அறம் அறிந்தவர்கள் என முடிவு செய்து கொள்கிறான் அனுமன். ஷத்ரியர்கள் ஆயினும் தவ உருவம் தாங்கியுள்ளனர் என்பதை உணர்ந்து கொள்கிறான். எல்லா விதமான போர்த்தொழிலையும் புரிபவர்களாயினும் விற்திறன் கொண்டவர்கள் என அடுத்த நிலைக்கு வருகிறான்.

இப்பாடலில் அனுமனை கம்பன் ‘’அஞ்சனைக்கு ஒரு சிறுவன்’’ என்கிறார். சிறுவன் எப்போதும் ஆர்வமானவன். துணிந்து முனைபவன். அனுமன் சிறுவனும் மேதையும் ஆனவன்.

கற்பினின் நினையும் – இங்கே கற்பு என்பது ஒழுங்கு என்றும் கல்வி என்றும் பொருள்படும்.

வெஞ்சமத் தொழிலர் – கம்பன்
போர்த்தொழில் விந்தைகள் காண்பாய் – பாரதி (பாஞ்சாலி சபதம்)
போர்த்தொழில் பழகு – பாரதி (புதிய ஆத்திசூடி)

‘தேவருக்கு ஒருதலைவர் ஆம் முதல் தேவர் எனின்,
மூவர்; மற்று, இவர் இருவர்; மூரிவில் கரர்; இவரை
யாவர் ஒப்பவர், உலகின்? யாது இவர்க்கு அரிய பொருள்?
கேவலத்து இவர் நிலைமை தேர்வது எக் கிழமை கொடு? ‘ (3857)

முதலெண்ணத்துக்குப் பின் அனுமனுக்கு அடுத்த எண்ணம் ஏற்படுகிறது: மும்மூர்த்திகள் என்றால் இவர்கள் இருவர்தான் இருக்கிறார்கள். அவர்களைப் போல் வேதம். நேமி, சூலம் ஏந்தாமல் வில் ஏந்தியிருக்கிறார்கள். இவர்களுக்கு ஒப்பானவர் எவருமில்லை என்ற விதத்தில் தோற்றம் கொண்டுள்ளனர்.

சிந்தையில் சிறிது துயர் சேர்வுறத், தரெுமரலின்
நொந்து அயர்த்தவர் அனையர்; நோவுறச் சிறியர் அலர்;
அந்தரத்து அமரர் அலர்; மானிடப் படிவர்; மயர்
சிந்தனைக்கு உரிய பொருள் தேடுதற்கு உறும் நிலையர். (3858)

தொடர்ந்து அனுமன் சிந்திக்கிறான்:
அவர்கள் மனத்தில் சிறிதளவு துயர் இருக்கிறது. அத்துயரால் துன்பம் அடைந்திருக்கிறார்கள். எனினும் துயர் கண்டு துவள்பவர்கள் இல்லை.வானத்து தேவர்களும் அல்லர். மானிடர்கள். அரிய ஒன்றைத் தேடும் நிலையில் உள்ளனர்.

மேற்படி பாடல்களில் தொலைவிலிருந்து நோக்கியே இராம இலக்குவர் குறித்த மனப்பதிவை அனுமன் அடைவதைக் காணலாம். பேராற்றல் கொண்டவனாக ‘’காலின் மா மதலை’’ என்ற விளி மூலம் காட்டிய கம்பன் இராம இலக்குவர்களைக் கண்டதும் அனுமன் மனதில் ஓடும் எண்ணங்களைக் காட்டி அவன் தெளிந்த அறிஞன் என்பதை நிறுவுகிறார்.

‘தன் கன்று கண்ட அன்ன தன்மைய, தறுகண் பேழ்வாய்
மின் கன்றும் எயிற்றுக் கோள்மா, வேங்கை என்று இனையவேயும்,
பின் சென்று, காதல் கூரப் பேழ்கணித்து இரங்குகின்ற;
என் கன்றுகின்றது எண்ணிப் பற்பல இவரை? அம்மா! ‘(3862)

வேட்டைவெறி கொண்ட கண்களையும் இரையைக் கிழித்துக் குதறும் பெரிய வாயினையும் உடைய சிம்மங்களும் புலிகளும் கூட தம் குருளைகளைக் கண்டால் அமைதியும் கனிவும் கொண்டிருப்பது போன்ற உணர்வுடன் இராம இலக்குவரை அகத்தில் அன்புடன் பார்க்கின்றன. விலங்குகளும் உணரத்தக்க அன்பைத் தம் தோற்றமாகவும் இயல்பாகவும் கொண்டுள்ள இராம இலக்குவரைக் கண்டு எவரேனும் அஞ்சுவரோ?

இராம இலக்குவரின் ஆற்றலை மதிப்பிட்ட மாருதி பின்னர் அவர்களின் கருணை கொண்ட இயல்பை உணர்ந்து கொள்கிறான்.

(தொடரும்)