Wednesday 6 May 2020

கம்பன் - கிட்கிந்தா காண்டம் - 2


இவ்வழி எண்ணி, ஆண்டு, அவ் இருவரும் எய்தலோடும்,
செவ்வழி உள்ளத்தானும், தரெிவு உற எதிர்சென்று எய்திக்
கவ்வை இன்றாக, நுங்கள் வரவு! ‘எனக், கருணையோனும்,
எவ்வழி நீங்கியோய்? நீ யார்? என, விளம்பல் உற்றான். (3866)

செம்மை மனம் கொண்டவனான அனுமன் இராம இலக்குவரின் எதிரில் சென்று வணங்கி ‘’தங்கள் வரவு துயர் நீக்குவதாக அமையட்டும்’’ எனக் கூற இராமன் அனுமனிடம் ‘’எங்கிருந்து வருகிறாய் நீ? நீ யார்?’’ என வினவினான்.

இப்பாடலில் கம்பன் ஓர் உணர்ச்சி நாடகத்தை அமைக்கிறான். அனுமன் செம்மை மனம் கொண்டவன். ஆதலால் நேரடியான அணுகுமுறை கொண்டவன். எனினும் சுக்ரீவனின் அச்சத்தால் இராம இலக்குவரை மறைந்திருந்து அவதானிக்க வேண்டியிருந்தது. அவர்களின் இயல்பை ஆற்றல் மிகு போர்த்தொழிலர்கள் என்பதிலிருந்து வேங்கையும் அரிமாவும் கனிந்து உருகும் கருணையாளர்கள் என்பது வரை உணர்ந்து கொள்கிறான். இராம இலக்குவர் எதையோ தேடுகின்றனர் என்பதையும் துயரின் சுவடுகள் அவர்கள் முகக்குறிகளில் தென்படுவதையும் அறிந்து அவர்களிடம் சென்று ‘’தங்கள் வரவு துயர் நீக்குவதாக அமையட்டும்’’ என்று சொல்கிறான். தான் யார் என வினவப்படுவோம். அப்போது சுக்ரீவனின் துயர் குறித்து கூறி அதனை நீக்க இராம இலக்குவரின் உதவியைப் பெறும் வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு அவர்கள் தங்கள் துயர் குறித்து சொல்வார்கள் எனில் அதற்கு எவ்விதத்திலாவது உதவ முடியுமா என்ற பரிசீலனையையும் உள்ளடிக்கிய நற்சொல்லை அனுமன் உரைத்தான்.
  
“இல்லாத உலகத்து எங்கும் ஈங்கு இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும், வேதக் கடலுமே ‘‘ என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே? யார்கொல் இச்சொல்லின் செல்வன்?
வில் ஆர் தோள் இளைய! வீர! விரிஞ்சனோ? விடை வலானோ? (3870)

அனைத்தும் அறிந்த அறிஞனாகவும் முற்றும் உணர்ந்த ஞானியாகவும் விளங்கும் இந்த ‘’சொல்லின் செல்வன்’’ யார்? உலகில் இவன் அறியாயதது என்றும் கற்க வேண்டியது என்றும் எதுவும் இல்லை. இவன் பிரம்மனா? இவன் சிவனா?
அனுமனைக் கண்டதும் இராமன் அனுமனைப் பற்றி கூறும் முதற்சொற்கள் இவை. இவற்றிலிருந்தே இராமன் அனுமனுக்கு மனத்தில் என்ன இடம் கொடுத்தான் என்பதை அறிய முடியும்.

‘ஒடுங்கல் இல் உலகம் யாவும் உவந்தன உதவி, வேள்வி
தொடங்கின, மற்றும், முற்றத் தொல் அறம் துணிவர் அன்றே,
கொடுங் குலப் பகைஞன் ஆகிக் கொல்லிய வந்த கூற்றை
நடுங்கினர்க்கு அபயம் நல்கும் அதனினும், நல்லது உண்டோ? ‘(3875)

வேள்வி செய்வதை விடச் சிறந்தது வலிய பகையின் நெருக்குதலால் அஞ்சியிருப்பவர்களுக்கு அபயம் அளிப்பது என அனுமன் இராமனிடம் கூறினான்.
இராம இலக்குவர் ஆற்றல் மிக்கவர்கள் என்பதை முதற்பார்வையிலேயே உணர்ந்த அனுமன் அவர்கள் தவ வடிவம் தாங்கியிருப்பதால் வேள்வியை விட அபயமளித்தல் சிறந்தது என்கிறான்.

நல்லன நிமித்தம் பெற்றேம்; நம்பியைப் பெற்றேம்; நம்பால்
இல்லையே துன்பம் ஆனது; இன்பமும் எய்திற்று; இன்னும்,
வில்லினாய்! இவனைப் போலாம் கவிக்குலக் குரிசில் வீரன்
சொல்லினால் ஏவல் செய்வான்; அவன் நிலை சொல்லற் பாற்றோ? (3886)

துயருற்றிருந்த நாம் நம் துயர் நீங்கப் போவதன் கட்டியமாக நன்நிமித்தங்களைப் பெற்றோம். இனியவனாகிய அனுமனைப் பெற்றோம். அனுமனின் தலைவனாகிய சுக்ரீவனின் துணையும் நம்முடன் சேரும்.

 ‘மண் உளார், விண்ணுளார், மாறு உளார், வேறு உளார்,
எண் உளார், இயலுளார், இசை உளார், திசை உளார்
கண் உளார் ஆயினார்; பகை உளார், கழிநெடும்
புண் உளார் ஆருயிர்க்கு அமிழ்தமே போல் உளார். (3890)

சுக்ரீவனுக்கும் அவன் கூட்டத்தாருக்கும் இராம இலக்குவர் யார் என்பதை உரைக்க வரும் அனுமன் ஆனந்தக் கூத்தாடி வருகிறான். ஆனந்தத்தில் உள்ளவர் மனதில் இருந்து வெளிப்படும் சொற்பெருக்கு விரைவானதாக இருக்கும். அவ்வாறான விரைவில் இராம இலக்குவர் குறித்து உணர்ச்சி மேலிட வர்ணிக்கிறான்.

மண்ணில் இருக்கும் மனிதர்களில் மகத்தானவர்கள். விண்ணில் வாழும் தேவர்களில் சிறந்தவர்கள். பாதாளங்களில் வாழும் நாகர்களினும் திறன் கொண்டவர்கள். யக்‌ஷர் கந்தர்வர்களினும் மேம்பட்டவர்கள். எண்திசையையும் காப்பவர்கள். இவர்கள் அனைவராலும் மனத்தால் எண்ணப்படுபவர்கள். இவர்கள் அனைவரும் இயங்கும் முறைக்கு எடுத்துக்காட்டாய் விளங்குபவர்கள். இவர்களால் துதிக்கப்படுபவர்கள். பகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமுதமாய் விளங்குபவர்கள்.


தேறினன் அமரர்க்கு எல்லாம் தேவராம் தேவர் அன்றே,
மாறி, இப் பிறப்பில் வந்தார் மானுடர் ஆகி மன்னோ;
ஆறுகொள் சடிலத்தானும், அயனும் என்று இவர்கள் ஆதி
வேறு உள குழுவை எல்லாம், மானுடம் வென்றது ‘என்றே. (3906)

பிரம்மம் மண்ணுக்கு மானுட வடிவம் தாங்கி வந்தது. இதனால் பிரபஞ்சத்தின் மற்ற உயிர்களை மானுடம் வென்றது.
அனுமன் சொற்களால் இராமனைக் குறித்து கேட்டறிந்த சுக்ரீவன் இராமனைக் கண்டதுமே இராமனை பிரம்ம சொரூபமாய் உணர்ந்து இச்சொற்களைக் கூறுகிறான்.

கூட்டம் உற்று இருந்த வீரர், குறித்தது ஓர் பொருட்டு முன்னாள்
ஈட்டிய தவமும், பின்னர் முயற்சியும் இயைந்தது ஒத்தார்;
வீட்டு வாள் அரக்கர் என்னும் தீவினை வேரின் வாங்கக்,
கேட்டு உணர் கல்வியோடு ஞானமும் கிடைத்தது ஒத்தார். (3909)

இராம சுக்ரீவர் இணைந்து இருப்பது தவமும் முயற்சியும் இணைந்து இருப்பது போலவும் கல்வியும் ஞானமும் இணைந்து இருப்பது போலவும் இருந்தது என்கிறான் கம்பன்.
தவம் என்பது ஒன்றை மட்டுமே மனத்தில் உணர்வில் எண்ணத்தில் பற்றி பிற அனைத்திலிருந்தும் விலகியிருப்பது. கருதும் ஒன்றாகவே தான் ஆவது. முயற்சி என்பது எல்லா வகையிலும் முயல்வது. எல்லாமாகவும் தான் ஆவது. இரண்டுமே பெரியவை. தவம் கைகூடினால் எண்ணியதை எண்ணியாங்கு எய்த முடியும். தெய்வத்தால் ஆகாததையும் முயற்சி சாத்தியமாக்கும். அத்தகைய தவமும் முயற்சியும் ஒரு செயலில் ஒன்றிணையுமானால் எத்தகைய வலிமையோ அத்தகைய வலிமையை இராம சுக்ரீவர் இணை கொண்டிருந்தது என்கிறான் கம்பன்.

கல்வி என்பது ஆசிரியனால் கற்பிக்கப்படுவது. ஆசான் தான் கற்றவற்றை மாணவனுக்குக் கற்பித்திருப்பான். ஆசான் தான் கற்றதையும் தனது அனுபவங்களையும் மாணவனுக்கு அளித்திருப்பான். எனினும் மாணவன் தான் ஆசானிடமிருந்து அடைந்த கல்வியை தனது செயல்பாடுகள் வழியே அனுபவமாக மாற்றிக் கொள்ளும் போதே ஞானம் பெறுகிறான். அது எவ்வகையான ஞானமானாலும் சரி. உலகியல் ஞானத்திலிருந்து ஆத்ம ஞானம் வரை. ஆசானிடமிருந்து பெற்ற கல்வியும் தான் அடைந்த அனுபவமும் இணையும் போது முழுமை ஞானம் கைகூடும். இராம சுக்ரீவர் இணைவு என்பது கல்வியும் ஞானமும் இணைந்தது போல் இருந்தது.

ஆர்த்தது குரக்குச் சேனை; அஞ்சனை சிறுவன் மேனி,
போர்த்தன, பொடித்த ரோமப் புளகங்கள்; பூவின் மாரி
தூர்த்தனர் விண்ணோர்; மேகம் சொரிந்தன; அனகன் சொன்ன
வார்த்தை எக் குலத்து உளோர்க்கும், மறையினும் மெய் என்று உன்னா. (3915)

ஆர்ப்பரித்தது வானரப் படை. இராமனின் கனிவையும் உன்னதமான அச்சூழலையும் எண்ணி மேனி சிலிர்த்தான் அனுமன். தூறலிட்டன மேகங்கள். பூமழை பொழிந்தனர் விண்ணவர்.

ஏழு வேலையும், உலகம் மேல் உயர்ந்தன ஏழும்,
ஏழு குன்றமும், இருடிகள் எழுவரும், புரவி
ஏழும், மங்கையர் எழுவரும், நடுங்கின என்ப,
ஏழு பெற்றதோ இக் கணைக்கு இலக்கம்? “ என்று எண்ணி. (3983)

ஏழு மராமரங்களை இலக்காகக் கொண்ட இராம பாணத்தைக் கண்டு ஏழு கடல்கள் அஞ்சின. ஏழு உலகங்களும் அஞ்சின. ஏழு மலைகளும் அஞ்சின. ஏழு முனிவர்களும் அஞ்சினர். ஏழு குதிரைகள் அஞ்சின. ஏழு கன்னிகள் அஞ்சினர். இராம பாணம் ஏழை இலக்காகக் கொண்டுள்ளதே என்று!

இப்பாடல் ஒரு மிகுபுனைவு. இருப்பினும் இந்திய புராணங்களில் ஏழு கடல்கள் எவை என்றும் அவை உருவானது குறித்த கதைகளும் ஏழு உலகங்கள் யார் யாருக்கு உரியன என்பது குறித்த கதைகளும் எவை ஏழு மலைகளாக தொகுக்கப்பட்டன என்ற வரிசைப்படுத்தலும் ஏழு முனிவர்களின் தவ முறைகளும் ஏழு குதிரைகள் குறித்த வர்ணனைகளையும் ஏழு மாதர் வழிபாடு உருவாகி வந்த முறை குறித்தும் வாசகன் இப்பாடலிலிருந்து மேலதிக வாசிப்பின் மூலம் அறிய முடியும். அது இப்பாடலுக்கு மேலும் பொருள் தரும். அத்துடன் இப்பாடலின் மிகுபுனைவு அம்சத்தை மேலும் பெரிதாக்கும்.

தெரிவுற நோக்கினன் தெரிவை மெய் அணி;
எரி கனல் எய்திய மெழுகின் யாக்கை போல்
உருகினன் என்கிலம்; உயிருக்கு ஊற்றம் ஆய்ப்
பருகினன் என்கிலம் பகர்வது என்கொல் ஆம்? (4008)

தன் சீதையின் ஆபரணங்களைக் கண்ணால் நோக்கினான் இராமன். எரியும் தீயில் இடப்பட்ட மெழுகைப் போல அவற்றைக் கண்டதும் உருகினான். துயருற்றிருந்த இராமன் துயர் நீக்கும் அமுதம் போன்ற அவற்றை கண்களால் பருகினான்.

காதல் கனிந்த மனம் கொண்ட காதலன் தன் காதலியின் அணிகளையும் காதலியாகவே கருதுவான். காணும் எல்லா பொருளிலும் அவளின் தோற்றத்தையும் அசைவையும் அழகையும் காண்பான். பெண்கள் அணி கொள்ளுதல் என்பதே தம்மை விரிவுபடுத்திக் கொள்ளும் ஒரு செயலே. உடலுக்கும் அணிகளுக்கும் இடையே ஓர் ஒத்திசைவை உருவாக்குவது என்பதே அணிக்கலை. சீதையின் நகைகளைக் கண்ட இராமன் அவற்றின் மூலம் சீதையையே கண்டான். எனவே நெகிழ்ந்த அன்பால் உருகினான்.

‘கொற்றவ, நின்பெருங் குவவுத் தோள் வலிக்கு
இற்றனன், முன்னை நாள், ஈடு உண்டு ஏகினான்;
பெற்றிலன் பெருந்திறல்; பெயர்த்தும் போர்செயற்கு
உற்றது, நெடுந் துணை உடைமையால் ‘என்றாள். (4061)

ஓர் இடர் ஏற்படும் போது அவ்விடர் குறித்து சிந்திப்பதும் ஆலோசிப்பதும் உத்தமமானது. சினமெழுந்தவர்கள் சீண்டப்பட்டு சிந்திக்கும் திறனை இழக்கிறார்கள். வாலி அவ்வாறு சினந்து எழுகிறான். அவன் மனைவி தாரை நிலைமை குறித்து சிந்தித்தவளாய் அவனுக்கு அறிவுரை கூறுகிறாள்.
‘’மன்னா! தங்கள் வலிமையைக் கண்டு அஞ்சி ஓடிய சுக்ரீவன் தங்களை வெல்லும் ஆற்றலை அடைந்திருக்க முடியாது. தங்களை எதிர்க்கத் துணிகிறான் எனில் அவன் ஆற்றல் கொண்ட ஒரு துணையைப் பெற்றிருக்கிறான். அதனாலேயே தங்களை எதிர்க்கும் துணிவு அவனுக்கு வந்திருக்கிறது.’’
’’மன்னா’’ என விளிப்பது அவன் எந்த யோசனையையும் ஆலோசிக்க வேண்டியவன் என்பதால்.

 மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை, ‘இராமன் ‘என்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களின் தெரியக் கண்டான். (4117)

மூவுலகங்களுக்கும் அடிப்படையான மந்திரச் சொல்லை, தம்மை வழிபடுபவர்களுக்கு தம்மையே அளிக்கும் ஒப்பில்லாத சொல்லை, இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்குமான அருமருந்தை, ‘’ராம’’ என்ற சிறந்த பெயரை தன்னைத் துளைத்த அம்பினில் கண்டான் வாலி.

வாலி வதைப் படலம் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் விவாதிக்கப்பட்டது. மறைந்திருந்து அம்பு எய்தியது சரியா தவறா என இப்போதும் பேசப்பட்டு வருகிறது. காப்பிய அமைப்பில் கிட்கிந்தை காண்டத்தின் துவக்கத்திலேயே இராமனும் அனுமனும் சந்தித்து விடுகின்றனர். அனுமன் கற்க வேண்டிய கல்வியோ அடைய வேண்டிய ஞானமோ இவ்வுலகில் இல்லை என்பது அனுமனைப் பற்றிய இராமனின் அவதானம். வாலி அறம் பிழைத்தவன். வாலி அறம் பிழைத்தவன் என்பதற்கு அனுமன் கூறும் சான்றே போதுமானது. அதன் அடிப்படையிலேயே இராமன் வாலியை வீழ்த்துகிறான். தாடகை வதத்தின் போது அரக்கியாயினும் பெண் என்பதால் பாணம் செலுத்த இராமன் தயங்குகிறான். விசுவாமித்திரர் சொல்ல அம்பை ஏவுகிறான். இம்முறை அனுமன் சான்றுரைத்ததால் இராமன் வாலியை வீழ்த்துகிறான்.


(தொடரும்)