Thursday 28 May 2020

மாலை உரையாடல்கள் - 11

வெகு நாட்களுக்குப் பின் , ஒரு மாலை நேரத்தில் , உரையாடுவதற்காக , நானும் நண்பரும் சந்தித்தோம். 

’’பிரபு! நீங்க தொழில்நுட்பம் உண்டாக்குற மகத்தான மாற்றங்களைக் கொஞ்சம் குறைச்சு மதிப்பிடறீங்களோ?’’

‘’அப்படீன்னு நீங்க முடிவுக்கு வர என்ன காரணம்?’’

‘’உங்களுக்கு மரபு மேல தீவிரமான பிடிப்பு இருக்கு. மரபார்ந்த விஷயங்கள்ல ஈடுபாடா இருக்கறவங்க மாற்றத்தை விரும்பாதவங்களா இருப்பாங்க”

நான் என் விரிவான பதிலைச் சொன்னேன்.

ஐரோப்பாவில், தொழிற்புரட்சியின் போது எந்திரங்கள் பெரிய அளவில் கண்டுபிடிக்கப்பட்டன. மிகப் பெரிய அளவில் உற்பத்தி நிகழ்ந்தது. அதன் விளைவாக உலகத்தில் முதலாளித்துவப் பொருளியல் ஆதிக்கம் செலுத்தத் துவங்கியது. மூலதனம் ஒட்டு மொத்த உலகப் பரப்பிலும் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதை மானுடம் கண்டு கொண்டது. அந்த முதலாளித்துவப் பொருளியல் மனித இனம் பல்வேறு நோய்களை வெற்றி கொள்ள உதவியது. ஐரோப்பாவில் பல நூறு ஆண்டுகளாக மாற்றமின்றி இருந்த சமூக அமைப்பை மாற்றம் செய்ய துணை நின்றது. உலகளாவிய வர்த்தகத்தை சாத்தியம் ஆக்கியது. இவை முதலாளித்துவம் ஏற்படுத்திய நல்விளைவுகள். ஆனால் அதனால் ஏற்பட்ட மோசமான விளைவுகள் அளவில் மிகப் பெரியவை.

முதலாளித்துவம், உலகெங்கும் ஏகாதிபத்தியத்தைக் கொண்டு வந்தது. உலக வரலாற்றில் முதலாளித்துவம் கோலோச்சத் துவங்கிய பின்னரே சுரண்டல் மிக மூர்க்கமானது. மனித உழைப்பு மிக மோசமாகச் சுரண்டப்பட்டது. இயற்கை மிக அதிக அளவில் சுரண்டப்பட்டதும் முதலாளித்துவத்திற்குப் பின்னர்தான். ஆயுதப் பெருக்கம், அணு குண்டுகள், இரண்டு உலகப் போர்கள் இவை அனைத்துமே முதலாளித்துவத்தின் விளைவுகள். 

நான் இயற்கையைச் சுரண்டும் மக்களைச் சுரண்டும் தொழில்நுட்பத்தைத் தான் எதிர்க்கிறேன். மரபின் மீது ஈடுபாடு கொண்ட எவரும் தொழில்நுட்பத்துக்கு எதிராக இருக்க மாட்டார்கள். மரபு மட்டுமே சுரண்டல் இல்லாத தொழில்நுட்பத்தை உலகுக்குத் தந்துள்ளது. 

இந்திய மரபில் ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி ஆகிய மருந்து முறைகள் உள்ளன. அவை எவராலும் தயாரிக்கப்படக் கூடியவை. எளியவை. அளப்பரிய பலன் தருபவை. அவை தொழிற்சாலைகளில் மட்டுமே தயாரிக்கப்பட்டு நோயாளியை அடைய வேண்டும் என்ற கட்டாயம் இல்லாதவை. உணவாகவும் மருந்தாகவும் பயன்படக் கூடியவை. பக்க விளைவுகள் இல்லாதவை. அவையும் அறிவியல்பூர்வமானவையே. 

இந்திய மரபில் மண்ணை வளப்படுத்த பாரம்பர்யமான இயற்கை உரங்கள் உள்ளன. விவசாயம் செய்யப்படும் மண்ணை அடுத்தடுத்த போகத்துக்குத் தயார் செய்ய பசுந்தாள் உரங்கள், கிடை, சாணம் ஆகியவை தயாரிக்க எளியவை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெரும் மகசூலைத் தந்தவை. பாரம்பர்யமான  தானிய வகைகள் இருக்கின்றன. விதை தானியங்களாக அடுத்த பயிரிடலுக்கு உதவக் கூடியவை. ஆனால் முதலாளித்துவம் ஆதரித்த விவசாயத் தொழில்நுட்பம் விவசாயிகளை எதிலும் சுயசார்பு இல்லாதவர்களாக ஆக்கியது. 

லாரி பேக்கர் என்ற ஆர்க்கிடெக்ட் ஒரு காந்தியர். அவர் இந்தியக் களிமண் வலிமை மிக்கது. அடுக்குமாடிக் கட்டிடங்களைக் கட்டுவதற்குக் கூட அவற்றைப் பயன்படுத்த முடியும். சிமெண்டின் ஆயுள் 60 ஆண்டுகள் மட்டுமே. ஐரோப்பாவில் களிமண் இல்லாததால் சிமெண்ட் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அதனை இந்தியா மீது திணிக்கின்றனர் என்று கூறுகிறார்

உலகமே வியந்த பட்டாடைகளையும் பருத்தி ஆடைகளையும் இந்திய கைத்தறி நெசவாளர்கள் நெய்தனர். இன்று அத்தகைய கோடிக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தை முதலாளித்துவம் பறித்துள்ளது. 

இயற்கையைச் சுரண்டாத - மனித உழைப்பைச் சுரண்டாத - அத்தகைய சுரண்டலுக்குத் துணை போகாத தொழில்நுட்பத்தை நான் என்றுமே வரவேற்கிறேன்.

நண்பர் யோசிக்கத் தொடங்கினார்.