Monday 25 May 2020

ஒரு கிராமம் - சில அவதானங்கள் (2)

மகாத்மா காந்தி இந்திய சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்த போது கிராமங்களை புனர் நிர்மாணம் செய்யும் முயற்சிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டார். கதர், கைத்தொழில், சுகாதாரம் ஆகியவற்றையே அவர் வாழ்நாள் முழுவதும் பரப்புரை செய்தார். இந்திய கிராமம் என்பது மிகவும் பொதுவான ஒரு சொல். அதில் எண்ணற்ற நுண்ணிய வேறுபாடுகள் உண்டு. ஒரு நதியின் வடகரையில் இருக்கும் கிராமங்களின் வாழ்க்கைமுறைக்கும் தென்கரையில் இருக்கும் கிராமங்களின் வாழ்க்கைமுறைக்குமே வேறுபாடுகள் உண்டு. அந்த வெவ்வேறு வண்ணங்களே இந்தியாவின் ஆதார சுருதி. அந்த கிராமங்களை ஒருங்கிணைத்ததன் மூலமே உலகின் மகத்தான பல சாம்ராஜ்யங்கள் இந்த மண்ணில் உருவாகி மக்கள் நலம் பேணும் ஆட்சியை - திட்டங்களை வழங்கின. 

பல்வேறு காரணங்களால், இந்திய விடுதலைக்குப் பின், எந்திரப் பெருக்கத்தின் மீது தீவிரமான நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே பெருமளவில் அதிகாரத்தில் இருந்தனர். அவர்களுக்குத் தொழிற்சாலைகள், பெரும் நுகர்வு, பண்ட உற்பத்தி ஆகியவற்றின் மீதே நம்பிக்கை இருந்தது. முற்றிலும் ஐரோப்பிய பாணியிலான திட்டங்களையே அவர்களால் சிந்திக்க முடிந்தது. ஆச்சார்ய வினோபாவே, ஜே.சி.குமரப்பா போன்ற காந்தியவாதிகள் திட்டமிடும் இடத்திலும் வழிகாட்டும் இடத்திலும் இருந்திருக்கவில்லை என்பது இந்தியாவின் துரதிர்ஷ்டங்களில் பெரியது. 

நாம் சுதந்திரம் அடைந்த போது, பிரிட்டிஷாரால் முற்றிலுமாக பொருளாதார ரீதியில் சுரண்டப்பட்டிருந்தோம். வறுமை அரசாங்கத்தின் ஆகப் பெரிய சிக்கலாக இருந்தது. மக்களை மதம், சாதி, இனம் ஆகியவை பிரித்திருந்தன. இவற்றிலிருந்து நாட்டை மீட்க எந்திரப் பெருக்கமே ஒரே வழி என அரசாங்கம் நம்பியது. அதனை பிரச்சாரம் செய்யவும் செய்தது. தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் எந்திரங்கள் அதன் முதலாளிகளுக்கும் விற்பனை வலைப்பின்னலுக்குமே பெரும் பயன் தரும். அதன் கடைசி முனையில் இருக்கும் நுகர்வோருக்கு அது பயனை மட்டுமே தருமா என்பது உறுதியில்லாத ஒன்று. 

இந்திய கிராமங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கியவை. அவற்றின் பாரம்பர்யமான முறைகள் மீண்டும் புழக்கத்துக்கு வர வேண்டும். மரபுக்குத் துணை நிற்கும் வலு சேர்க்கும் தொழில்நுட்பமே இன்றைய இந்தியத் தேவை.