Sunday 24 May 2020

ஒரு கிராமம் - சில அவதானங்கள்

காவிரி டெல்டா கிராமம் ஒன்றில் பத்து நாட்களாக ஒரு சமூக ஆய்வை மேற்கொண்டிருந்தேன். நாளின் பெரும் பகுதி அங்கேயே இருந்தேன். அப்போது என் மனம் கண்ட உணர்ந்த விஷயங்களை இங்கே பதிவு செய்கிறேன். 

1. எல்லா இந்திய கிராமங்களுக்கும் ஒத்த விஷயங்கள் பல இருக்கின்றன. பெரிய சிறிய வேறுபாடுகளும் உள்ளன. மழைப்பொழிவும் பாசன வசதியுமே ஒரு இந்திய கிராமத்தின் அடிப்படையை உருவாக்குகிறது. எனினும் இந்தியாவின் வறண்ட நிலப்பகுதியில் உள்ள எத்தனையோ கிராமங்கள் எவ்வளவோ சாதித்துள்ளன.

2. ஒவ்வொரு கிராமத்துக்கும் பாரம்பர்யமான அறிவு என்பது இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்துள்ளது. அந்த நுண்ணறிவே அவற்றை வாழ வைத்துள்ளது. அந்த அறிவு நம் பண்பாட்டிற்கு அடிப்படையானது. அது முழுமையாக மீட்டெடுக்கப்பட வேண்டும். 

3. நவீனத் தொழில்நுட்பம் தேவையானது. ஆனால் பாரம்பர்யமான எந்த அறிவை நவீனத் தொழில்நுட்பம் பதிலீடு செய்கிறது என்பது மிக கவனத்துடன் உற்று நோக்கப்பட வேண்டியது. 

4. ஒரு கிராமம் எல்லா விதமான உயிர்களுக்கும் வாழிடமாயிருப்பது என்பது இந்தியாவின் பண்பு. பூச்சிகள், பறவைகள், பிராணிகள், பட்சிகள் என அனைத்தும் அடங்கிய உயிர்ச்சூழல் ஒரு இந்திய கிராமத்தின் அடிப்படை. 

5. நுண்ணுயிர்கள் செறிந்த கிராமத்தின் மண் என்பது இந்தியாவின் மிகப் பெரிய சொத்து. கிராமத்து மண்ணைச் செறிவூட்ட பாரம்பர்யமான பல முறைகள் உள்ளன. ரசாயன உரங்களே கதி என நினைப்பதும் செயல்படுவதும் கிராம வருவாயின் உபரியை கிராமத்துக்கு வெளியே வாரிக் கொடுப்பதே. 

6. இந்திய கிராமங்களுக்கான செயல்முறைகளை மகாத்மா காந்தியின் சொற்களிலிருந்தே முற்றும் அறிய முடியும். உடல் உழைப்பை அவர் அனைவருக்கும் கட்டாயமாக்கியது என்பது இந்திய கிராமங்கள் பற்றிய புரிதலிலிருந்தே. 

7. பிரிட்டிஷ் ஆட்சியின் பொருத்தமற்ற வரி முறைகள் இந்திய விவசாயத்தையும் நெசவையும் பெரும் இடரில் தள்ளின. அதன் கருநிழல் இன்றளவும் தொடர்கிறது. 

8. மெக்காலே கல்வி முறைக்கும் இந்திய கிராமத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அதுவே கல்வி என ஒவ்வொரு இந்திய கிராமத்தினரும் எண்ணுகின்றனர். அதுவே தங்கள் வாழ்வை மாற்றும் என நம்புகின்றனர். அது அழிவையே கொண்டு வந்துள்ளது. அது சாதித்தது சொற்பமே.

9. சமயம், வாழ்க்கைமுறை, வழிபாடு ஆகியவை சார்ந்த கல்வி கிராமங்களுக்குக் கிடைக்க வேண்டும். ஒரு தொன்மையான சிவாலயம் திகழும் கிராமம் ஒன்றில் நிச்சயமாக தேவாரமும் திருவாசகமும் திருப்பாவையும் பயிற்றுவிக்கப்பட வேண்டும். அவை கிராமங்களிலிருந்தே எழுந்தன. அவற்றின் உணர்வுகளை ஒரு கிராமத்தைச் சேர்ந்த மனத்தால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். 

10. கிராமங்களில் உற்பத்தியைப் பெருக்க தேவையான உதவிகளைச் செய்வதே அரசாங்கத்தின் பணி. பிரிட்டிஷ் நிர்வாக முறை என்பது இந்திய கிராமங்களைச் சுரண்டுவதற்காக உருவாக்கப்பட்டது. அதன் அரசூழியர் வேலைமுறைக்கு மாற்றாக - கிராமத் தன்னிறைவுக்காக உதவும்- ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

11. உழைக்கும் கரங்களே இந்திய கிராமத்தின் பலம். அவர்கள் உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் சமூக இயங்குமுறையே இந்தியாவுக்கானது. 

12. ஒரு கிராமத்தில் வாழும் மக்கள் ஒற்றுமைப்படுத்தப்படுவதே ஒரு அரசு கிராமத்துக்குத் தரும் நல்ல ஆட்சியாக இருக்க முடியும்.