Sunday 28 June 2020

விருட்ச பூஜை - நாள் 12

இன்று கிராமத்துக்குச் சென்றிருந்தோம். ஞாயிற்றுக்கிழமை என்பதால் நண்பருக்குக் கடை விடுமுறை. காலை 6.30 மணிக்கு மயிலாடுதுறையிலிருந்து கிளம்பினோம். இரண்டு நாட்களாகவே விவசாயிகள் தொடர்பு கொண்டு வருகின்றனர். ’குழி எடுத்து விட்டோம்; பார்வையிட வாருங்கள்’ என அழைத்த வண்ணம் இருந்தனர். சில நாட்களுக்கு முன்னால், ஆடுதுறை அரசாங்க நர்சரிக்குச் சென்றிருந்தேன். அங்கேயிருந்த ஊழியர், மரம் நடும் போது 3 அடிக்கு 3 அடி குழி எடுக்குமாறு சொன்னேன். ஆழம் 3 அடி வைத்துக் கொள்ளுங்கள் என்றார். கட்டிட அஸ்திவாரத்துக்கு குழி எடுப்பதைப் போல சொல்வீர்கள் போல் உள்ளதே என்றேன். குறைந்தபட்சம் 2 அடிக்கு 2 அடி குழி எடுங்கள் 2 அடி ஆழத்துக்கு எடுங்கள் என்றார். அதில் மக்கிய எருவை இட்டு வையுங்கள் என்று கூறி விட்டு ஒரு விளக்கம் அளித்தார். 

ஒரு குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள் எப்படி அதன் மூளை வளர்ச்சி 90 சதவீதம் நிறைவு பெற்று விடுகிறதோ அதே போல ஒரு மரம் நடப்பட்டு வேர் பிடிக்கும் போதே ஊட்டமாகக் கிளம்பி வர வேண்டும். அதன் வளர்ச்சி அப்போதே தீர்மானிக்கப்பட்டு விடும். ஆதலால் இது மிகவும் அவசியம் என்றார். கிராமத்தின் ஒவ்வொரு விவசாயியின் தொடர்பு எண்  என்னிடம் இருந்தது. ஒவ்வொருவராகத் தொடர்பு கொண்டு குழியின் அளவுகளைக் கூறினேன். குறிப்புகளை அளித்தேன். எவ்வாறு பணிகள் நடந்துள்ளன என்பதைப் பார்ப்பதற்காக இன்று சென்றிருந்தேன். பணிகளை விரைவுபடுத்தவும் விவசாயிகளை ஊக்கம் கொள்ளச் செய்யவும் அது உதவும் என எண்ணினேன்.

குழி எடுத்திருந்த விவசாயிகளின் நிலங்களையும் தோட்டத்தையும் பார்வையிட்டோம். ஒரு மரத்துக்கும் இன்னொரு மரத்துக்கும் இடையில் 10 அடி இடைவெளி இருக்க வேண்டும். மரம் பருத்து வளர அது உதவும். அது பின்பற்ற வேண்டிய முக்கியமான குறிப்பு. ஒரு மரத்துக்கும் இன்னொரு மரத்துக்கும் இடையே 12 அடி இடைவெளி இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 10 அடியாவது இருப்பது அவசியம். அதனை வலியுறுத்தினோம். 

சாலையில் நடந்து செல்லும் போது ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களும் என்னிடம் நலம் விசாரித்தார்கள். மரக்கன்றுகள் என்று வரும் என்று கேட்டார்கள். பத்து நாட்களில் உங்களுக்குக் கிடைக்கும்; குழி எடுப்பதை துரிதப்படுத்துங்கள் என்று சொன்னேன். ஒவ்வொரு வீட்டிலும் அவர்கள் வீட்டில் விளைந்த காய்கறிகளை எனக்கும் நண்பருக்கும் கொடுத்தார்கள். எல்லாரும் அளிப்பதை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் நான் ஒரு டாடா ஏஸில் தான் எடுத்துச் செல்ல வேண்டும். மக்களின் அன்பு எங்களை நெகிழச் செய்தது. 

பொது இடத்தில் மரக்கன்றுகள் நடும் ஒருவர் எங்களிடம் வந்தார். ஊரின் சில ஆலமரங்கள் அவரால் பொது இடத்தில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டிருக்கின்றன. தான் சிறுவனாயிருந்ததிலிருந்தே  பொது இடத்தில் மரக்கன்றுகள் நடுவதில் ஆர்வமாயிருந்ததாகக் கூறினார். ஊரில் தோட்டங்களில் வயல்களில் நடப்படும் 18,000 மரக்கன்றுகள் போக பொது இடங்களில் முழுமையாக 7000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் பணி நம் முன்னால் உள்ளது என்று சொன்னேன். உள்ளூர் இளைஞர்களை ஒருங்கிணைத்து அப்பணியை சிறப்பாக நிறைவேற்றித் தருகிறேன் என்றார். 

எனது கணக்கெடுப்பின் போது ஒரு பெண்மணி கோயிலில் விளக்கேற்ற கையில் தீபத்தட்டுடன் சென்று கொண்டிருந்தார். இன்றும் அவர் தீபத்தட்டுடன் கோயிலுக்குச் செல்லும் போது பார்த்தேன். அடையாளம் கண்டு என்னிடம் வந்து பேசினார். ஆலய பூஜைக்கு உகந்த மலர் மரக்கன்றுகளைத் தனக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டார். 

இந்த மக்களின் தூய அன்புக்கு என்னால் என்ன கைம்மாறு செய்ய முடியும் என்று தெரியவில்லை.