Sunday 28 June 2020

ஊற்றுமுகம்

எனது நண்பர்கள் என்னை எப்போதும் நம்பிக்கையாளன் என்று சொல்வதுண்டு. நான் எது குறித்தும் அவநம்பிக்கை கொள்வதில்லை என்பதை அவர்கள் ஆச்சர்யமாக நினைப்பதுண்டு. உண்மைதான். நான் எனது முயற்சியை எப்போதும் கைவிடுவதில்லை. ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வந்து விட முடியும் என்று எப்போதும் நம்புகிறேன். என்னால் ஆகக் கூடியவற்றை நான் முயன்று பார்க்கிறேன். என் சக்திக்கு அப்பாற்பட்டு இருக்கும் விஷயங்களில் என் ஆற்றலை நான் வீணாக்குவதில்லை. பெரும் மாற்றம் என்பது ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான நுண் மாற்றங்களே. அச்சிறு நுண் அலகில் மட்டுமே எனது செயல்பாடுகளை அமைத்துக் கொள்கிறேன். 

மகாத்மா காந்தி இந்திய சுதந்திரப் போரை தலைமையேற்று வழிகாட்டி இந்தியர்களுக்கு வென்றெடுத்துக் கொடுத்தார். அவர் தலைமையேற்கவும் செய்தார் - வழிகாட்டவும் செய்தார் என்பது முக்கியமானது. அரசியல் தலைமையின் மேலும் அரசியல் அதிகாரத்தின் மேலும் காந்திக்கு பெரிய ஈடுபாடு இருக்கவில்லை. அவர் அதனைப் புறக்கணிக்கவில்லை. அவர் அதனை எல்லாமாகக் கொண்டாடவும் இல்லை.

காந்தி இந்திய கிராமம் குறித்து முற்றிலும் அறிந்திருந்தார். அன்றிருந்த கிராமத்தின் வறிய நிலையை மட்டும் அல்ல. இந்தியா மகோன்னதமாய் உலக அரங்கில் கொலு வீற்றிருந்த போது சிறப்பானதாக இருந்த இந்திய கிராமங்களின் நிலையையும் அவர் முழுமையாக அறிந்திருந்தார். அவர் அதனை மீண்டும் கொண்டு வர விரும்பினார். அதனால்தான் இந்தியாவின் படித்த மக்களின் மனசாட்சியிடம் கிராமங்கள் குறித்தும் கிராம முன்னேற்றம் குறித்தும் தொடர்ந்து பேசியவாறு இருந்தார். காந்தியின் அரசியல் என்பது கிராம முன்னேற்றமே. 

கிராமங்களில் விவசாய வேலை போக எஞ்சியிருக்கும் உபரி நேரம் காந்தியின் அவதானத்தில் இருக்கிறது. அதில் கிராம மக்கள் கைத்தொழில்களில் ஈடுபட வேண்டும் என்று காந்தி எண்ணினார். அது கோடிக்கணக்கான மக்களுக்கு இன்றும் உதவக் கூடியது. உபயோகமானது. அவர் சிறிதும் பெரிதுமான கைத்தொழில்களை கண்டுபிடித்துக் கொண்டேயிருந்தார். கிராம சுயசார்பை வற்புறுத்திக் கொண்டேயிருந்தார். கிராமத்தின் பெண்கள் இராட்டை மூலம் நூல் நூற்றலில் ஈடுபட வேண்டும் என்று அவர் எண்ணியது குறியீட்டு ரீதியில் எவ்வளவு முக்கியமானது? கிராமத்தின் ஆண்கள் வயலில் விவசாயம் செய்கின்றனர். பெண்கள் நூல் நூற்றல் என்பது இன்னும் மேலான விவசாயச் செயல்பாடு. கதர் விவசாய பொருளாதார இயக்கம். 

காந்தி இப்போது இருந்தால் என்னென்ன விஷயங்களில் செயலாற்றிக் கொண்டிருப்பார்?

1. நிச்சயமாக மதுவுக்கு எதிராகப் போராடுவார். கிராம மக்களிடம் மது உங்களை உடல்ரீதியாக மனரீதியாக பொருளியல் ரீதியாக அழிக்கிறது என்பதை எடுத்துக் கூறுவார். 

2. கிராமத்துப் பெண்களுக்கு விவசாயம் சார்ந்த விவசாயத்துக்கு இணையான பணிகளில் பயிற்சி அளிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவார்.

3. கதர் இயக்கத்தை தீவிரப்படுத்துவார்.

4. சூரிய ஒளி மின்சாரம், நீர்ப் பாதுகாப்பு ஆகிய விஷயங்கள் எல்லா கிராமங்களிலும் செயலாக்கப் பெற வேண்டும் என்று விரும்புவார்.

5. ஒவ்வொரு கிராமத்திலும் தினமும் கிராமத்தின் எல்லா பிரிவினரும் கலந்து கொள்ளும் பிராத்தனை நடக்க வேண்டும் என்பதில் உறுதியாயிருப்பார்.