Monday 29 June 2020

மௌனமான பாதை - பி.வி. நரசிம்ம ராவ்

1991ம் ஆண்டு நான் சிறுவனாயிருந்தேன். அது அச்சிதழ்களின் காலம். தினசரிகள், வார இதழ்கள், பட்ச இதழ்கள் ( Fort Night) ஆகியவை கோலோச்சிக் கொண்டிருந்த காலம். தினமணி, துக்ளக், இந்தியா டுடே ஆகிய பத்திரிக்கைகளை அப்போது வாசிப்பேன். நடுப்பக்க கட்டுரைகள், தலையங்கம் ஆகியவற்றை ஒரு சிறுவனாக ஆர்வமாக வாசிப்பேன். அப்போது மிக அதிகமாக பிரதமரின் செயல்பாடுகள் குறித்து தமிழ் பத்திரிக்கைகளில் விவாதிக்கப்படும். டங்கல் திட்டம், காட் ஒப்பந்தம் ஆகியவை பரவலான சர்ச்சைகளை உருவாக்கிக் கொண்டிருந்த காலம். 

சில ஆண்டுகளுக்கு முன்னால், வினய் சீதாபதி எழுதிய ’’Half - Lion : How  P.V. Narasimha Rao transformed India'' என்ற நூலை வாசித்தேன். அது தமிழிலும் வெளியாகியுள்ளது. ஓர் அரசியல் செயல்பாட்டாளனின் பெரும் பயணத்தை எடுத்துக் கூறும் நூல். 

பொதுவாக இந்தியாவில் மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து கவனிக்காத பரவலான விவாதத்துக்குள் வராத ஒரு விஷயம் உண்டு. அது என்னவெனில் தம் கடமையை சரிவரச் செய்யாத அரசு ஊழியர்கள். இவர்கள் ஆட்சி நிர்வாகத்தின் பெரிய சவால். ஆயினும் இவர்களே ஆட்சி நிர்வாகத்தின் பெரும் பகுதி என்பது தவிர்க்க இயலாத முரண். நரசிம்ம ராவ் முதன்மையாக அதனை எதிர்கொண்டார். பலவிதங்களில் தேங்கிப் போன அந்த அமைப்பை நேரடியாகவும் மறைமுகமாகவும் அவர் உலுக்கினார். அது ஒரு தொடக்கம். 

அவரது சொந்த மாவட்டமான கரீம் நகர் பகுதிகளில் நான் மோட்டார் சைக்கிளில் சுற்றியிருக்கிறேன். 1991-1996ம் ஆண்டுகளில் இந்தியாவில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை பெருகியது. குறிப்பாக இரு சக்கர வாகனங்கள். மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு அரசு ஆதரவு அளித்து உற்பத்தியைப் பெருக்கியது. ஒரு கிராமத்து விவசாயி தனது கிராமத்திலிருந்து வெளியே சென்று தனது பணியை முடித்துக் கொண்டு அவன் நினைத்த நேரத்தில் திரும்பி வர அது உதவியது. பொதுப் போக்குவரத்துக்காக காத்திருக்க வேண்டிய தேவை குறைந்தது. அவனது உலகம் மேலும் பெரிதானது. நான் வட இந்தியாவில் இந்த காட்சியை அதிகம் பார்த்திருக்கிறேன். காலை 8 மணியிலிருந்து காலை 10 மணிக்குள் 40லிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவுள்ள கிராமங்களில் டூ-வீலர்கள் விரைந்து செல்லும். பின்னர் நெடுஞ்சாலை அமைதியாகும். அதே போல் மாலை 5 மணியிலிருந்து 7 மணி வரை. இன்று உலகில் மிக அதிகம் டூ-வீலரைப் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 

ஒரு வறண்ட நிலத்திலிருந்து ஒரு மாணவனாகக் கிளம்பி பல மொழிகள் கற்று மாநில அரசியலிலும் தேசிய அரசியலிலும் முக்கியமான தலைவராக உருவெடுத்து கொந்தளிப்பான ஒரு காலகட்டத்தில் துணிச்சலுடன் தேசத்தை வழிநடத்தியது என்பது மிகப் பெரிய செயல். அதை அவர் மௌனமாகச் செய்தார்.