Tuesday, 2 June 2020

காவிரி போற்றுதும்


அன்னம் பஹு குர்வித:
-தைத்ரீய உபநிஷத்

இன்றும் காவிரி வடிநில மாவட்டங்களின் (காவிரி டெல்டா) முக்கியமான தொழில் விவசாயமே. லட்சக்கணக்கான மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர். இங்கு நிகழும் அனைத்து வணிகங்களுக்குமான நுகர்வோர் விவசாயிகளே. அதாவது அவர்களின் வருவாயையும் உபரி வருவாயையும் கொண்டே எல்லா வணிகங்களும் லாபமீட்டுகின்றன. இங்கே விவசாயம் லாபமான தொழிலாக இருக்கிறதா என்ற கேள்விக்கு ‘’அப்படி கூறி விட முடியாது’’ என்பதே பதிலாக இருக்கிறது. எனக்கு எந்த பகுதியின் சமூகவியல் பொருளியல் செயல்பாடுகள் மீதும் ஆர்வமும் கவனமும் உண்டு. எல்லா பண்பாடுகளின் மீதும் ஆர்வம் உண்டு. சமூக மாற்றத்துக்கான செயல்களைப் புரிய வேண்டும் என்ற விருப்பமும் காந்திய வழிமுறைகளின் மீது நம்பிக்கையும் உண்டு.

நான் எப்போதுமே ஏதேனும் ஆக்கபூர்வமான சமூகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புவேன். என்னால் இயன்ற சிறு பணிகளை அவ்வப்போது செய்வேன்.

சமீபத்தில் நண்பர்கள் சிலர், ஒரு குழுவாக இணைந்து சில சமூகச் செயல்பாடுகளை முன்னெடுக்க விரும்பினர். அதற்கு எனது ஆலோசனைகளைக் கேட்டனர். அவர்களில் சிலர் பொறியாளர்கள். சிலர் வணிகர்கள். சிலர் விவசாயிகள். அக்குழுவுக்குள் ஒருங்கிணைப்பு இருந்தது. நான் என் யோசனைகளை முன்வைத்தேன். அவர்கள் செயல்களில் துணை புரிந்தேன். எங்கள் குழுவுக்கு ’’காவிரி போற்றுதும்’’ என்று பெயரிட்டோம்.

சிலப்பதிகாரம், ‘’திங்களைப் போற்றுதும்’’ என்று துவங்குகிறது. இளங்கோ அடிகள் நிலவைப் பெண்மைக்கான – நீதி உணர்வுக்கான – குறியீடாக ஆக்கி அதனை குடிமக்கள் காப்பியத்தின் முதல் சொல்லாக்கினார். அதிலிருந்து ‘’போற்றுதும்’’ என்ற சொல்லையும் காவிரியையும் இணைத்து ’’காவிரி போற்றுதும்’’ என்று பெயரிட்டோம்.

எங்கள் ஊரைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் இருக்கும் கல்வி பயிலும் இளைஞர்களைச் சந்தித்து அவர்களிடம் சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வை உருவாக்குவதும் அவர்களை அவர்கள் கிராமத்தில் அவர்கள் செய்யக்கூடிய செயல்பாடுகளைச் செய்வதற்கான ஊக்கத்தை அளிப்பதும் அவர்கள் செயல்களுக்கு அவர்களுக்கு கிராமத்திற்கு வெளியிலிருந்து ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அதனை ஏற்பாடு செய்து கொடுப்பதும் எங்கள் பணிகள் என வரையறுத்துக் கொண்டோம்.

பொதுவாக சமூகப் பணிகள் ஆற்றுவதில் திட்டமிடலும் திட்டமிடலுக்குப் பின் படிப்படியாக செயல்களில் முன்னேறிச் செல்வதும் அவசியமானது. சமூகப் பணி சமூகம் பற்றி நாம் மேலும் புரிந்து கொள்வதற்கான இன்னொரு வாய்ப்பே. நாம் எண்ணுவது எண்ணியவாறே நடக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது; ஆனால் எண்ணியதை எண்ணியவாறு நிறைவேற்றுவதற்குத் தேவையான உழைப்பையும் நேரத்தையும் கொடுப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். சரியான பாதையில், மிக மெதுவாக முன்னகர்ந்தால் கூட  எண்ணியதை எய்தி விடலாம்.

அருகாமையில் உள்ள ஒரு கிராமத்துக்குச் சென்றேன். இளைஞர்கள் ஒரு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் உரையாடினேன். எங்கள் நோக்கங்களைச் சொன்னேன். அவர்கள் ஆர்வமாயிருப்பதை அறிந்து கொண்டேன். அவர்களிடம் ஒரு விஷயத்தை முன்வைத்தேன்.

நமது மண் பலவகையான தாவர வகைகள் வளரும் இயல்பு கொண்டது. மண்ணில் வேரூன்றி விண் நோக்கி வளர்ந்தவாறிருக்கும் விருட்சத்தை தெய்வ வடிவமாகவே வழிபடும் மரபு நம்முடையது. இன்றும் நம் கிராமங்களில் ஆலமரமும் அரசமரமும் இருக்கிறது. அவை உயிர் ஆலயங்கள். ஒவ்வொன்றும் ஐம்பது வருடம், அறுபது வருடம் ஆனவை. இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் நடப்பட்டவை. நம் தலைமுறையில், கிராமத்தில் ஒரு சிலரேனும் ஆல், அரசு, வில்வம், கொன்றை, வன்னி ஆகிய மரங்களை பொது இடங்களில் நட்டு பராமரிக்க வேண்டும். ஒருபுறம், சிவனை நாம் கொன்றை மலர் சூடியவன் என வணங்குகிறோம். நமது மொழி இலக்கியங்கள் இறைமையை இயற்கையின் இனிய தன்மை கொண்டதாக முன்வைக்கின்றன. அந்த மரபின் தொடர்ச்சியாக நம்மை உணர கிராமங்களில் விருட்சங்கள் பொது இடங்களில் நடப்பட வேண்டும். மரத்தின் நிழலில் அமரும் மனிதன் வாழ்வின் மீது நம்பிக்கை கொள்கிறான். பட்சிகள் சிலம்பும் ஒலி வாழ்வை இனிமையாக்குகிறது. பட்சிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் விவசாயத்துக்கு உதவுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாக நீடித்திருக்கும் மரபின் வாரிசுகளான நாம் நமது பங்களிப்பை ஆற்ற வேண்டும். இந்த விஷயங்களை அவர்களிடம் கூறினேன். அவர்கள் அதனை ஏற்றனர். எந்த நல்ல விஷயத்தையும் சமூகம் வரவேற்கிறது என்பது ஓர் உண்மை.

இந்த விஷயம் உண்மையில் நூதனமானது. மண்ணிலும் நீரிலும் நாள் முழுதும் நிறைந்து பொழுதெல்லாம் விவசாயம் செய்பவர்கள் விவசாயிகள். அவர்களுக்கு மரம் நடுவதைப் பற்றி நகரத்திலிருந்து சென்ற ஒருவர் எடுத்துக் கூறுவது என்பதில் உள்ள முரண் அந்த விஷயத்தைப் பற்றி மேலும் யோசிக்கச் செய்தது. அதற்கான காரணத்தைக் கண்டடைந்தேன். இப்பகுதியின் விவசாயிகள் நெற்பயிர் வேளாண்மைக்குப் பழகியவர்கள். பெரும்பாலானோர் இரண்டு போகம் பயிரிடுகிறார்கள். இப்போதெல்லாம் மூன்று போகம் என்பது அபூர்வம். உழவு, நாற்றங்கால் உருவாக்குதல், நடவு, களையெடுத்தல், நீர் பாய்ச்சுதல் மற்றும் அறுவடை என நூறு நாட்கள் ஒரு போகத்துக்கு வேலை இருக்கும். இன்னும் சரியாகச் சொன்னால், நூறு நாட்களில் முதல் முப்பது நாட்களுக்கு முழு நேரமாகவும் பின்னர் குறைவான நேரமும் அளிப்பதாக இருக்கும். வருடத்தின் 365 நாட்களில் கணிசமான நாட்கள் வேலையில்லாமல் இருக்கும். உளுந்து பயிர் நெல் அறுவடையை ஒட்டி விதைத்து விட்டு பெரிய பராமரிப்புகள் ஏதும் இன்றி அறுவடை செய்யக் கூடியது. நெல், உளுந்து என்பதே இப்பிராந்தியத்திய விவசாயத்தின் பொது மனநிலை. அறுவடை முடிந்த பின்னர், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்து விட்டு அடுத்த போகத்துக்கான பணியைத் துவங்கும் வரை எந்த விதமான பணியிலும் ஈடுபடாமல் இருப்பது என்பதே அவர்களின் வழமையாகி விட்டது.

கிராமத்தின் மக்கள்தொகையில் மிகப் பெரும் பகுதி விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களுமே. அவர்கள் ஈட்டும் வருமானத்தை நகர்ப்பகுதிகளில் உள்ள வணிக அங்காடியில் செலவு செய்து விடுகின்றனர். நகர்ப்பகுதியிலிருந்து கிராமத்துக்கு வரும் செல்வம் என்பது ஒப்பீட்டளவில் மிகக் குறைவே. கொங்கு மண்டலம் மஞ்சள் பயிரிடுவதன் மூலம் –பருத்தி பயிரிடுவதன் மூலம் – பணப்பயிர்கள் பயிரிடுவதன் மூலம் தன்னை வலுவான விவசாயப் பகுதியாக மாற்றிக் கொண்டுள்ளது.

கிராமங்களிலேயே இந்தியாவின் ஆன்மா உறைந்துள்ளது என்றார் மகாத்மா காந்தி. இந்திய நிலத்தில் பயணித்த ஒரு மோட்டார்சைக்கிள் பயணியாக நான் அதனை உணர்ந்திருக்கிறேன். இந்தியா மாற்றம் பெற வேண்டும் எனில் அம்மாற்றத்துக்கான பணி இந்திய கிராமங்களிலேயே நிகழ வேண்டும். ஒரு இந்திய கிராமத்தில் செயலாக்கப்படும் அல்லது நிகழ்த்தப்படும் அல்லது செய்யப்படும் சோதனை எல்லா இந்திய கிராமங்களுக்கும் பொருந்தும் என்பது ஒரு நடைமுறை உண்மை.

’’காவிரி போற்றுதும்’’ நண்பர்கள் கூடி எவ்விதமான பணிகளை முன்னெடுக்கலாம் என்று சிந்தித்தோம். விவாதித்தோம். அவற்றின் விளைவாக சில செயல்களை முன்னெடுக்க முடிவு செய்தோம். நண்பர்களில் சிலர் பொறியாளர்கள். சிலர் வணிகர்கள். சிலர் விவசாயிகள். இணைந்து செயல்படுவதற்கான ஒருங்கிணைப்பை உருவாக்கிக் கொண்டோம். எவ்விதமான சமூகப் பணியும் ஒருங்கிணைப்பைக் கோரும் என்பது ஒரு முக்கியமான புரிதல். பல விதமான பணிகள் இருக்கின்றன. நாம் எவ்விதமான பணிகளை மேற்கொள்ள உள்ளோம்; அதற்கு எவ்விதமான வேலை முறை உபயோகமாக இருக்கும் என்று முடிவு செய்து கொள்வது அவசியம் என்பதை நண்பர்களுக்கு விளக்கினேன்.

காந்திய வழிமுறைகளில் ஒன்றான ‘’நுண் செயல்பாடு’’ என்பதை எங்களுக்கான வழிமுறையாக ஏற்றோம். நுண் செயல்பாடு அளவில் சிறியது. எனினும் பெருவலு கொண்டது. செயல்பாட்டாளர்களினுள்ளும் விரிவான புரிதலையும் ஆழமான ஈடுபாட்டையும் உருவாக்கக் கூடியது. ’’உருள் பெருந்தேரின் அச்சாணி’’ போன்றது.

கிராமங்களில் உள்ள பொது இடங்களில் மரக்கன்றுகள் நடுவது என்பதை எங்கள் செயல்பாடாகத் தேர்ந்தெடுத்தோம். ஒரு கிராமத்தில் 6 லிருந்து 7 தெருக்கள் இருக்கும். அதிகபட்சம் 250 மரக்கன்றுகள் வரை நட முடியும். ஆடு மாடுகள் மேயாமல் இருக்க அவற்றுக்கு நாமே வேலி அமைத்துக் கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம். செய்யக்கூடிய எளிய பணியைத் தான் திட்டமிட்டிருந்தோம் என்றாலும் எனது மனம் முழு நிறைவடையவில்லை. நான் அது குறித்து எப்போதும் யோசித்தவண்ணம் இருந்தேன். விவசாயிகள் தங்கள் ஆயுள் முழுவதும் பயிரை வளர்ப்பதில் ஈடுபட்டிருப்பவர்கள்; மரம் செடி கொடிகளுக்கு மத்தியிலேயே எப்போதும் இருப்பவர்கள்; எங்கள் சிறிய குழுவுக்கு இது திருப்தியளிக்கும் பணி என்றாலும் மேலும் பெரிய அளவில் அந்த கிராமத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உறுதியாக இருந்தது. அப்போது என் மனத்தில் புதிதாக ஓர் எண்ணம் உதித்தது. எங்கள் குழுவின் நோக்கம் மரம் வளர்ப்பது; அது பொது இடத்தில் இருந்தால் என்ன அல்லது விவசாயிகளின் வீட்டுத் தோட்டத்தில் இருந்தால் என்ன என்று யோசித்தேன். பயன் தரக்கூடிய மரக்கன்றுகளை விவசாயிகளிடம் அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் நட்டுக் கொள்ளுமாறு வழங்கி விடலாம்; மரத்தை ஆர்வத்துடன் அவர்கள் பராமரிப்பார்கள். நம்மாலும் ஒரு கிராமத்துக்கு பெரிய எண்ணிக்கையில் மரக்கன்றுகளை வழங்க முடியும் என எண்ணினேன். விவசாயியான எனது நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்து அவர் வீட்டுத் தோட்டத்தின் பரப்பளவு என்ன என்று கேட்டேன். 10,000 சதுர அடி என்றார். உங்கள் வீட்டுத் தோட்டத்தில் எத்தனை மரங்கள் உள்ளன என்று கேட்டேன். நான்கு வாழைமரங்கள் உள்ளன என்றார். அவர் தோட்டத்தின் பரப்பளவுக்கு கிட்டத்தட்ட நூறு மரங்கள் நட்டு வளர்க்க முடியும். மழைக்காலத்தில் நட்டால் பருவமழை பொழியும் நான்கு மாதங்களுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் கூட இருக்காது. தானாக வளர்ந்து விடும். அதன் பின் கோடையில் கூட தன் பாட்டை தான் பார்த்துக் கொள்ளும். கிராமத்தில் மற்ற வீடுகளில் அதிக அளவில் மரம் நட்டிருப்பார்களா என்று கேட்டேன். ஏறக்குறைய எல்லா வீடுகளிலும் இப்படித்தான் என்றார். ஒரு கிராமத்தில் 400 வீடுகள் இருக்கும் எனில் ஒரு வீட்டுக்கு 10 மரக்கன்றுகள் வழங்கினால் மொத்தம் 4000 மரக்கன்றுகளை அக்கிராமத்துக்கு வழங்க முடியும் என்பது எங்களுக்கு பேரார்வம் அளித்தது. 250 என்ற சிறிய எண்ணிக்கையிலிருந்து 4250 என்ற சற்றே பெரிய எண்ணிக்கைக்கு எங்கள் திட்டமிடல் சென்றது எங்களுக்கு உற்சாகம் தந்தது. என் மனம் மட்டும் இன்னும் ஏதோ இருக்கிறது என்பதைக் கூறியவாறு இருந்தது. நான் யோசித்துக் கொண்டேயிருந்தேன். ஒரு வருவாய் கிராமத்தின் பரப்பளவு சராசரியாக 1000 ஏக்கர். அதில் விளைநிலம் 500 ஏக்கர் இருக்கும். அதன் வரப்புகளில் அடர்ந்து வளராது உயரமாக வளரும் மரக்கன்றுகளை குறைந்தபட்சம் ஏக்கருக்கு 40 என்ற எண்ணிக்கையில் நட முடியும். இருவருக்கு பொதுவாக இருக்கும் வரப்பில் நடத் தேவையில்லை; ஒருவரின் சொந்த நிலத்தின் உள்வரப்பில் நட்டுக் கொண்டாலே போதும்; 500 ஏக்கர் நிலத்தின் வரப்புகளில் 20,000 மரக்கன்றுகளை நட முடியும். எங்கள் எண்ணிக்கை 24,250 க்குச் சென்றது. மியாவாக்கி என்ற ஜப்பானிய முறை ஒன்று உள்ளது. அரை ஏக்கர் பரப்பளவில் இரண்டடிக்கு இரண்டடி என்ற இடைவெளியில் அடர்த்தியாக பல்வேறு மரங்களை நட்டு பராமரிக்கும் முறை அது. அரை ஏக்கர் பரப்பளவில் 5000 மரக்கன்றுகள் நட முடியும். அதனையும் சேர்த்த போது மொத்த எண்ணிக்கை 29,250 ஆனது. 250லிருந்து 29,250. கிட்டத்தட்ட நூறு மடங்கு. நண்பர்கள் உற்சாகமானார்கள். இந்த எண்ணிக்கையை ஒரு கிராமத்தில் செயல்படுத்துவோம் என்றார்கள். நான் செயலாக்கத்துக்கான வழிமுறைகளை யோசிக்கலானேன்.

நாங்கள் விவாதித்து உருவாகிய வழிமுறைகள்:

1. கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களிடம் விஷயத்தை எடுத்துரைக்க வேண்டும்.

2. அவர்கள் கேட்கும் மரக்கன்றுகளை வழங்க வேண்டும். அவர்கள் கேட்கும் எண்ணிக்கையில் அளிக்க வேண்டும்.

3. ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் வழங்கப்படும் எல்லா மரக்கன்றுகளும் நடப்பட வேண்டும்.

4. சொந்தமாக தரப்படும் மரக்கன்றுகளையும் பொது இடங்களில் நடப்படும் மரக்கன்றுகளையும் நல்ல முறையில் பராமரிப்போம் என்ற சொல்லுறுதியை கிராமத்தினர் அனைவரிடமும் பெற வேண்டும்.

5. அவர்கள் கேட்ட மரக்கன்றுகளை அவர்கள் வீட்டுக்கே கொண்டு சென்று வழங்க வேண்டும்.

6. மரம் வளர்ப்பதில் அவர்களுக்கு வல்லுனர்களின் ஆலோசனை தேவைப்பட்டால் அதை ஏற்பாடு செய்து தர வேண்டும்.

7. நீர்நிலைகளைச் சுற்றியுள்ள பகுதிகள், பள்ளி, கோவில் என வாய்ப்புள்ள அத்தனை இடங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும். எந்த விடுபடலும் இருக்கக் கூடாது.

கள ஆய்வு

வேளாண்மையில் ஆர்வம் உடைய விவசாயிகள் சிலர் எனது நண்பர்கள். அவர்களிடம் இது குறித்து விவாதித்தேன். அவர்கள் ஊக்கப்படுத்தினார்கள். கிராமத்தில் ஒவ்வொரு குடும்பமாகச் சென்று கணக்கெடுக்கும் பணியை நான் மேற்கொண்டேன். ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு எங்கள் குழு குறித்து சொல்லி மரக்கன்றுகள் நடுதலை ஒரு சமூகச் செயல்பாடாக மேற்கொள்கிறோம்; உங்களுக்குத் தேவையான எத்தனை மரக்கன்றுகள் வேண்டுமானாலும் வழங்குகிறோம்; இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு எங்கள் நோக்கம் சிறப்பாக நிறைவேற உதவுங்கள் என்று கேட்டு அவர்கள் கூறிய மரக்கன்றுகளையும் எண்ணிக்கையையும் குறித்துக் கொண்டேன். கிராம மக்கள் பேரார்வத்துடன் பெரும் வரவேற்பு அளித்தனர். சிலர் சில ஐயங்களை எழுப்பினர். அவர்கள் எழுப்பிய கேள்விகளும் அதற்கு நான் அளித்த விளக்கங்களும்:

1. நீங்கள் யார்? உங்கள் தொழில் என்ன? உங்கள் நண்பர்கள் யார்? அவர்கள் என்ன செய்கிறார்கள்?
எனது பெயர் பிரபு. மயிலாடுதுறையில் வசிக்கிறேன். எனது தொழில் கட்டிட கட்டுமானம். எனது நண்பர்களும் மயிலாடுதுறையில் வசிக்கிறார்கள். சிலர் பொறியாளர்கள். சிலர் வணிகர்கள். சிலர் விவசாயிகள்.

2. நீங்கள் ஏன் எங்களுக்கு மரக்கன்றுகள் வழங்க வேண்டும்?
மரம் வளர்த்தலை ஒரு சமூகச் செயல்பாடாகவும் பண்பாட்டுச் செயல்பாடாகவும் நாங்கள் காண்கிறோம். உங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி அம்மரங்கள் வளர்வதால் நிகழும் நன்மைகளுக்காக நாங்கள் இதனைச் செய்கிறோம்.

3. இதனால் உங்களுக்கு என்ன லாபம்?
இதனால் சமூகம் பயன் பெறும். அதுவே எங்கள் நோக்கம். எங்களுக்குத் தனிப்பட்ட லாபம் ஏதும் இதில் இல்லை.

4. மரக்கன்றுகள் தரும் போது பணம் கேட்பீர்களா?
எங்களுக்கு நீங்கள் எந்த பணமும் தர வேண்டாம். வழங்கப்படும் மரக்கன்றுகளை நல்லவிதமாகப் பராமரித்து வளர்த்துக் கொண்டாலே போதும்.

5. மரக்கன்றுகள் வளர்ந்து பயன் தரும் போது உரிமை கோருவீர்களா?
எப்போதும் எந்த விதமான உரிமையும் கோர மாட்டோம். எங்களுக்கு சுற்றுச்சூழலுக்கும் பல்லுயிர்ப் பெருக்கத்துக்கும் உதவும் விதத்தில் மரக்கன்றுகளை அதிக அளவில் நட ஆசை. பொது இடத்தில் இருப்பதை விட தேவைப்படும் விவசாயிகளின் தோட்டத்திலோ அல்லது வயலிலோ இருந்தால் சிறப்பான பராமரிப்பு அவற்றுக்குக் கிடைக்கும் என்பதால் இவ்வாறு செயல்படுகிறோம். உங்களுக்கும் பலன் ; சமூகத்துக்கும் பலன். இதுவே எங்கள் நோக்கம். மரக்கன்றுக்கு சாலையில் வளர்கிறோமோ அல்லது தோட்டத்தில் வளர்கிறோமோ என்ற பேதம் இல்லை. சாலையில் இருப்பதை விட தனிப்பட்ட ஒரு குடும்பத்துக்கு அது பயன்படும் எனில் எங்களுக்கு மேலும் மகிழ்ச்சியே.

கள ஆய்வின் போது நாங்கள் விவசாயிகளின் பரிசீலனைக்கு முன்வைத்த சில யோசனைகள்:

1. ஒரு கிராமத்தில் 400 வீடுகள் இருக்கிறது என எடுத்துக் கொள்வோம். இப்போது 10லிருந்து 15 வீடுகளில் எலுமிச்சை மரம் இருக்கக் கூடும். அதில் உருவாகும் பழங்கள் கிராமத்துக்குள் அவர்கள் அண்டை வீட்டாருக்குள்ளும் நண்பர்களுக்குள்ளும் உறவினர்களுக்குள்ளும் பகிரப்படும். 400 வீட்டிலும் ஒரு எலுமிச்சை மரம் இருக்குமாயின் அவை ஒவ்வொன்றும் ஆண்டுக்கு சீசனில் 300 பழங்கள் காய்க்குமெனில் அக்கிராமத்தில் 1,20,000 பழங்கள் உற்பத்தியாகும். அக்கிராமத்திலேயே இருக்கும் ஒருவர் அருகில் இருக்கும் பெரிய சந்தை ஒன்றில் விற்பனை செய்ய முடியும். ஆநிரைகளுக்கு தீவனமாகும் மர வகைகள் ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்கப்படும் போது அதன் உற்பத்தி ஊரின் பசுந்தீவனத் தேவையில் பெருமளவை பூர்த்தி செய்யும். மலர் மரங்கள் மூலம் சேகரமாகும் மலர்களை ஆலயங்களில் மாலைகளாக விற்பனை செய்ய முடியும்.
 
2. ஒரு ஏக்கர் நிலம் உள்ள ஒருவர் தன் உள் வரப்பில் 40 தேக்கு மரக்கன்றுகள் நடுவாரெனில் 15 ஆண்டுகளில் அவர் அதன் மூலம் ரூ.20,00,000 வருமானம் பெறுவார். இது அவர் அந்த ஒரு ஏக்கர் பரப்பில் 15 ஆண்டுகளாக இரண்டு போகம் நெல் பயிரிட்டு அடையும் வருமானத்தை விட அதிகம்.

3. இவற்றை எல்லா விவசாயிகளும் பலமுறை சிந்தித்திருப்பார்கள். பெரிய லாபம் இல்லாத ஒரு விஷயத்தை மீள மீளச் செய்வதன் சோர்வால் அவர்கள் ஆர்வம் குன்றியிருக்கின்றனர். ஒரு வெளிப்புற ஆர்வத்தை அவர்களுக்கு அளிப்பதன் மூலம் அவர்களை அவர்கள் நன்மைக்காக அவர்களாக செயல் புரியும் ஒரு வாய்ப்பு உருவாக்கப்படுகிறது.

4. இவற்றுடன் மரம் நடுவதால் நிகழும் சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் பலன்கள் எப்போதும் இருக்கவே செய்கின்றன.

5. தமிழ்நாட்டின் சராசரி மழைப்பொழிவைப் பயன்படுத்தி ஒரு கிராமத்தில் இத்தனை மரங்களை வளர்த்து விட முடியும். ஆவணி மாதத்தை ஒட்டி நடப்படும் கன்றுகள் அந்த ஆண்டின் பருவமழையைப் பயன்படுத்தியே வேர் பிடித்து நிலை பெற்று விடும். அதன் பின் தன் வளர்ச்சியைத் தானே பார்த்துக் கொள்ளும். அந்த சாத்தியத்தைப் பயன்படுத்திக் கொள்வது நம் கடமை.

6. ஒரே நாளில் ஊரின் எல்லா குடும்பங்களும் ஒரே நேரத்தில் மரம் நடுதல் என்பது மிக முக்கியமான ஒரு பண்பாட்டுச் செயல்பாடாக ஆகும். அக்கிராமத்தின் வரலாற்றில் அது ஒரு மிக முக்கிய நிகழ்வாக ஆகும்.

இந்தியாவுக்கென ஒரு பாரம்பர்யமான வாழ்க்கை முறை பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. இம்முறையில் சமூகத்தில் அனைத்து பிரிவினருக்குமான இடமும் நீதியும் உறுதி செய்யப்படுகிறது. முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்பு அனைவருக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. வெவ்வேறு விதமான வெளிப்புறத் தாக்குதலுக்கு ஆளான பின்னரும் இந்தியா தன்னை தகவமைத்துக் கொண்டு எழுந்துள்ளது. இந்தியா தன் பண்பாட்டுக் கூறுகளை மீட்டு எழுவது என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல; ஒட்டு மொத்த உலகுக்குமே நன்மை பயக்கும்.

தொடர்புக்கு:
ulagelam(at)gmail(dot)com