Tuesday 30 June 2020

மக்கள் அரசு

இன்று ஒரு மருத்துவக் கல்லூரி மாணவரைச் சந்தித்தேன். அவரிடம் உரையாடிக் கொண்டிருந்தேன். அவரது தந்தை எனது நண்பர். அவரைக் காணச் சென்றிருந்தேன். அப்போது அவர் வீட்டில் இல்லை. வெளியில் சென்றிருந்தார். அவர் வரும் வரை மருத்துவ மாணவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். 

அவர் வீட்டில் ஒரு ஃபிளாட் டி.வி இருந்தது. எனக்குப் பொதுவாக எலெக்ட்ரானிக் பொருட்கள் குறித்த அறிவு குறைவு. எலெக்ட்ரானிக் பொருட்கள் மீதான ஆர்வம் அதனினும் குறைவு. 

‘’இந்த டி.வி.யில் இன்டர்நெட் கனெக்ட் ஆகுமா?’’ நான் உரையாடலைத் தொடக்கினேன். 

‘’கனெக்ட் செய்ய முடியும்’’ மாணவர் சொன்னார்.

‘’டி.வி.க்குள் ஒரு சிம் கார்டு இருக்குமா?’’

இப்படி ஒரு கேள்வியை முதல் தடவை எதிர்கொள்வது அவருக்குத் திகைப்பாக இருந்தது. 

‘’வை - ஃபை ல கனெக்ட் பண்ணலாம்’’

‘’ஓ ! அப்படி ஒரு ஆப்ஷன் இருக்குல்ல. நல்ல விஷயம்’’

டீ-பாய் மீது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் இருந்தது. நான் எடுத்து புரட்டிக் கொண்டிருந்தேன். திடீரென ஒரு ஐயம்.

’’தம்பி! இந்த நியூஸ் பேப்பரை இ-பேப்பரா இந்த ஃபிளாட் டி.வி-ல படிக்க முடியுமா?’’

அவர் சற்று குழம்பினார். 

நான் செய்தித்தாளின் இணையபக்க முகவரியைக் காண்பித்தேன். 

‘’நியூஸ் ரீடர்ஸ் தன் முன்னால இருக்கற ஸ்கிரீன் - ல பாத்து படிக்கிறாங்கள்ல. அந்த டெக்னிக்.’’

நான் சொன்னது அவருக்கு நூதனமாக இருந்திருக்க வேண்டும்.

’’அப்படி படிக்கிறதுல என்ன யூஸ்?’’

‘’என்ன தம்பி அப்படி சொல்லிட்டீங்க. காகிதப் பயன்பாட்டைக் கணிசமா குறைச்சிடலாம் இல்லையா?’’

’’எப்படி?’’

‘’பேப்பர் இண்டஸ்ட்ரீயோட அடிப்படையான மூலப்பொருளே மரக்கூழ்தான். பேப்பர் தயாரிக்க ஆயிரக்கணக்கான மரங்கள் வருடா வருடம் வெட்டப்படுது. காகிதப் பயன்பாட்டை ஹியூமானிட்டி எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்குதோ அவ்வளவுக்கு அவ்வளவு மரங்கள் காப்பாத்தப்படும்’’

அங்கே சுவரில் சில ரோமானிய அரசர்களின் பெயர்களையும் அவர்களுடைய காலங்களையும் எழுதி வைத்திருந்தார். 

‘’தம்பி! உங்களுக்கு வரலாறுல ஆர்வம் உண்டா?’’

‘’ஒரு நெட்ஃபிளிக்ஸ் தொடர் பாத்தன். அதுல இருந்து ஞாபகத்துக்காக எழுதி வைச்சன்.’’

என்னென்ன தொடர் பார்க்கிறார் என்று கேட்டேன். சில பெயர்களைச் சொன்னார். அதில் ஒன்று ஓட்டோமான் சாம்ராஜ்யம். 

‘’1453’’

வருடத்தைச் சொன்னதும் அவர் மிகவும் ஆர்வமானார். 

‘’கான்ஸ்டாண்டிநோபிள்’’

நான் கேட்டேன். ‘’Sick Man of Europe'' யார் தெரியுமா?

அவர் யோசித்துப் பார்த்தார். 

’’தெரியலையே’’

‘’துருக்கி’’

‘’அப்படியா?’’

நாங்கள் உரையாடிக் கொண்டிருந்த போதே நண்பர் வந்து விட்டார். எங்கள் உரையாடலில் நண்பரும் இணைந்து கொண்டார். நான் நண்பரிடம் தெரிவிக்க வேண்டிய விஷயத்தைத் தெரிவித்து விட்டு கிளம்ப ஆயத்தமானேன். 

‘’தம்பி! பிரபு ஒரு கிராமத்தில நிறைய மரக்கன்றுகள் நடற முயற்சியில இருக்காரு. ஒரு கிராமத்தை எடுத்து அதுல 25,000 மரக்கன்று நடறாரு.’’ அவர் மேலும் அவர் சொற்களில் விளக்கினார். மருத்துவ மாணவருக்கு அவர் சொன்னது முழுமையாகச் சென்று சேரவில்லை. நண்பர் என்னையே விளக்கச் சொன்னார்.

‘’அதாவது தம்பி! ‘’ என்று நான் ஆரம்பித்தேன். 

‘’நாம ஒரு சின்ன டீம் தம்பி. ஒரு ஏழு பேர்னு கணக்குக்கு வச்சுக்கங்க. நாங்க எல்லாரும் ஃபிரண்ட்ஸ். என்விரான்மெண்ட் சம்பந்தமா ஏதாச்சும் செய்யணும்னு பிரியப்பட்டு என்ன செய்யலாம்னு என்கிட்ட ஆலோசனை கேட்டாங்க. நான் யோசிச்சுப் பார்த்தேன். அதுல நாம கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கு. பொது வேலைல ஒருத்தரால என்ன செய்ய முடியுமோ அந்த வேலையைத் தான் நாம அவருக்குக் கொடுக்கணும். அதிகமா கொடுத்தா அவங்களால தொடர்ந்து செய்ய முடியுமாப் போயிடும். குவாண்டம் மெக்கானிக்ஸ்-ல குவாண்டம்னு சொல்றாங்கள்ல. அந்த மாதிரி சிறுசு. ஒரு கிராமத்துக்குப் போய் அந்த ஊரோட யங்க்ஸ்டர்ஸ்-க்கு சுற்றுச்சூழல் சம்பந்தமான விஷயங்கள்-ல ஆக்டிவிட்டிஸ் செய்ய சப்போர்ட் பண்றது எங்க இனிஷியல் பிளான். அப்புறம் அதை யோசிச்சு யோசிச்சு விரிவாக்குணோம். கிராமத்துல ஒவ்வொரு வீட்டுக்கும் நேராப் போய் உங்களுக்கு என்ன மரக்கன்னு வேணும்னு கேட்டு கணக்கெடுத்தோம். அந்த கிராமத்துல மொத்தம் 400 வீடு. எல்லா வீட்டையும் நேரா பாத்தோம். உங்களுக்குத் தேவையான மரக்கன்னு தர்ரோம். நட்டு வளத்துக்கங்கன்னு ரெக்வெஸ்ட் செஞ்சோம். நாங்க என்ன சொல்றோம்ங்றது விவசாயிகளுக்குப் புரிஞ்சுது. அவங்க வார்ம் ரிசப்ஷன் கொடுத்தாங்க. இப்ப கிராமத்துல இருக்கற வீடுகளுக்கு 18,000 மரக்கன்னு தர்ரோம். கிராமத்துல இருக்கற பொது இடங்கள்ல 7,000 மரக்கன்னு நடரோம். மொத்தம் 25,000. ஃபர்ஸ்ட் பிளான் மாதிரி ஒரு கிராமத்துல 100 மரக்கன்னு வீதம் முயற்சி செஞ்சிருப்போம்னா இந்த 25,000ங்ற நம்பரைத் தொட 250 கிராமங்கள்ல வேலை செஞ்சிருக்கணும். இதை ஒரு விதமான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்-னு சொல்லலாம். இல்லன்னா டார்கெட் மெடிசன்னு சொல்லலாம்.’’

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், டார்கெட் மெடிஸன் ஆகிய சொற்கள் அவர் மருத்துவ மாணவர் என்பதால் அவர் மனத்துக்கு நெருக்கமாக இருந்திருக்கக் கூடும். நான் புறப்படும் நேரம் வந்தது. 

‘’தம்பி! இந்தியாவுல எத்தனையோ பேரரசர்கள் இருந்திருக்காங்க. அவங்களை இன்னைக்கும் நாம அவங்க செஞ்ச மக்கள் நலப் பணிகளால தான் நாம நினைச்சுப் பார்க்கறோம். அசோகர் இந்தியா முழுக்க சாலையோரமா மரங்கள் நட்டார்னு பாடப்புத்தகத்துல இருக்கு. ஏன்னு நினைச்சுப் பாருங்க. அன்னைக்கு பெரிய அளவில டிரான்ஸ்போர்ட் ஃபெஸிலிட்டி கிடையாது. ஆனா ஒவ்வொரு கிராமமும் தேசத்தோட முழுமையான தொடர்புல இருக்கணும்னு சாலை ஓரங்கள்ல மரங்களை நட்டு நிழற்சாலையா ஆக்கனாரு. நடந்து போறவங்க ஒரு நாளைக்கு மேக்ஸிமம் 25 கி.மீ தூரம் நடக்க முடியுமா. அந்த நடைல அவங்க சோர்ந்துடக் கூடாதுங்கற நல்லெண்ணத்துல மரம் நட்டார். வட இந்தியாவுல இருக்கறவங்க ராமேஸ்வரத்துக்கும் தென் இந்தியாவுல இருக்கறவங்க காசிக்கும் போய்ட்டு வந்தாங்க. சோழர்கள் காலத்துல வீர நாராயண ஏரி வெட்டுனாங்க. நம்ம ஊர்ல இருந்து முக்கால் மணி நேர பைக் பயண தூரத்துல இருக்கு தம்பி. போய்ப் பாருங்க. ஊருக்குள்ள கடல் வந்துட்ட மாதிரி இருக்கும். இன்னைக்கும் சென்னை காரங்களுக்கு அந்த ஏரிதான் தண்ணீர் தருது. காகதீயப் பேரரசு வெட்டி வச்சிருக்க ஏரிகளைப் பாருங்க. அசந்துடுவீங்க.’’

அவர் இந்திய சாம்ராஜ்யங்களின் பெயர்களைக் கேட்பது அனேகமாக முதல் தடவையாக இருக்கக் கூடும். அவருக்கு இவை ஆச்சர்யம் அளித்தது. 

‘’பிரிட்டிஷ் நம்ம நாட்டுக்கு வர்ர வரைக்கும் உலகத்தோட ஜி.டி.பி.- ல நாம 50 சதவீதத்துக்கும் அதிகமா பங்களிப்பு கொடுத்திருக்கோம். தெரியுமா?’’

‘’என்ன உலகத்தோட மொத்த புரடக்‌ஷன் - ல இந்தியா பாதிக்குப் பாதியைக் கொடுத்திருக்கா”

‘’நான் சொல்றது எல்லாத்துக்குமே டாகுமெண்டல் எவிடெண்ஸ் இருக்கு தம்பி.’’ 

மருத்துவ மாணவரின் திகைப்பு நீங்கவில்லை.

‘’வெல்ஃபேர் ஸ்டேட்-ங்ற கருத்துக்கு ஐரோப்பா ஜனநாயகத்துக்கு வந்தப்றதாம் வந்து சேந்தாங்க’’

அவர் ஆமாம் என்பது போல பார்த்தார்.

‘’இந்தியாவுல 3000 வருஷமாவே அந்த கான்செப்ட் இருக்கு தம்பி’’

அவர் பல எண்ணங்களால் சூழப்பட்டிருந்தார். 

‘’சார்! இந்த வாரம் நீங்க ஒர்க் பண்ற கிராமத்துக்குப் போகும் போது எனக்கு கால் பண்ணுங்க. நானும் வர்ரேன்.’’