சில மாதங்களுக்கு முன், ஒரு சேவை அமைப்பு குறித்து தற்செயலாக அறிய நேர்ந்தது. கல்வித்துறையில் அற்புதமான பணியைச் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு சிறு நன்கொடை வழங்க வேண்டும் என எண்ணினேன்.
பாரதியாரின் ‘’அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’’ என்ற வரியை அனைவரும் கேட்டிருப்போம். ‘’வெள்ளைத் தாமரை’’ என்ற கவிதையில் பாரதி எழுதிய வரி இது. திரு. மதன் மோகன் மாளவியா அவர்கள் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் உருவாக்கிய போது அதற்காக பாரதியார் எழுதிய பாடல் அது.
’நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்; நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்’’ என்ற வரியும் அக்கவிதையிலேயே வருகிறது. பாரதி கல்விப் பணியை வாணி பூசனை என்கிறார். அந்த பூசனையில் என்னையும் இணைத்துக் கொள்ள விரும்பி ரூ.500 அனுப்பி வைக்கலாம் என முடிவு செய்தேன்.
மறுநாள் காலை வங்கிக்குச் சென்று ஒரு வரைவோலை எடுத்து அவர்கள் முகவரிக்கு அனுப்பி வைத்தேன். என்னுடைய டெபிட் கார்டின் கால அவகாசம் முடிந்திருந்தது. அதை புதுப்பிக்கும் வரை நன்கொடையை தள்ளி வைக்க வேண்டாமே என்று வரைவோலையாக அனுப்பினேன். வரைவோலை எண்ணைக் குறித்துக் கொண்டேன். அஞ்சல் அலுவலகம் சென்று உறையில் அந்த வரைவோலையை வைத்து அனுப்பி விட்டு விபரம் குறிப்பிட்டு அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.
மூன்று நாட்கள் கழித்து வேறு ஒரு வேலையாக வங்கிக்குச் சென்றேன். அப்போது வரைவோலையின் எண்ணைத் தெரிவித்து அது சம்பந்தப்பட்டவர்களின் கணக்கில் சேர்ந்து விட்டதா என்று கேட்டேன். வரைவோலை எண் இருந்தால் அதனை சோதிக்க இயலும். இன்னும் அந்த வரைவோலை வங்கியில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று சொன்னார்கள். மூன்று நாட்கள் ஆகிறதே; தபால் சென்று சேர்வதில் ஏதும் சிக்கலா? வேறு சிக்கல் ஏதுமா? என்று தவிப்பாயிருந்தது. அவர்கள் பணியில் சிறு அளவில் இணைந்து கொள்ள விரும்பிய என் நோக்கம் நிறைவேறாதது எனக்கு சஞ்சலம் தந்தது. மேலும் நான்கு நாட்கள் ஆனது. வங்கிக்கு ஃபோன் செய்தேன். வரைவோலை எண்ணைக் கூறி கணக்கில் சேர்க்கப்பட்டு விட்டதா என்று கேட்டேன். இன்னும் இல்லை என்றார்கள்.
நான் அந்த அமைப்புக்கு மின்னஞ்சல் செய்தேன். விபரம் கூறி வரைவோலை அவர்களுக்கு வந்ததா என்பதை உறுதி செய்யுமாறு கேட்டேன். இரண்டு நாட்களுக்கு மேல் ஆனது. பதில் இல்லை. எனக்கு ஃபோன் செய்து கேட்க தயக்கமாக இருந்தது. அவர்கள் மகத்தான பணியைச் செய்கிறார்கள். நான் ஒரு சிறிய தொகையை மட்டுமே அனுப்பியிருக்கிறேன். அதை குறித்து மட்டும் எப்படி கேட்பது என தயங்கினேன். மேலும் இரண்டு நாட்கள் ஆனது. தடையை உடைத்து ஃபோன் செய்தேன். அது அந்த அமைப்பின் செயலாளரின் எண். நான் அமைப்பின் பெயரைச் சொன்னதும் அவர் தன்னை அந்த அமைப்பின் செயலாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். நான் அவர்கள் பணி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் எத்தனை சிறப்பானது என்பதையும் அவர்கள் சேவை நன்றிக்குரியது என்பதையும் தெரிவித்தேன். அவர் மிகவும் பக்குவமானவர். எனக்கு நன்றி தெரிவித்தார். சமீபத்தில் ஆண்டு விழா இருக்கிறது; அதற்கு அவசியம் வாருங்கள் என அழைப்பு விடுத்தார். மிகவும் மகிழ்ந்தேன். சேவை புரிபவர்கள் இயல்பில் சொற்களில் பழக்கத்தில் ஒரு மேலான தன்மையும் பெருந்தன்மையும் இயல்பாக வந்து விடுகிறது. நான் சுருக்கமாக எனது சிக்கலை விளக்கினேன். அவர் பொருளாளரின் எண்ணை அளித்தார்.
‘’வணக்கம். பிரபு பேசுகிறேன். மயிலாடுதுறையிலிருந்து.’’
‘’வணக்கம். ஓ! நீங்கள் தானா அது. நீங்கள் அனுப்பிய டி.டி யை வங்கியில் செலுத்தினோம். அந்த டி.டி.யில் வங்கி மேலாளரின் கையொப்பமில்லை என்று கூறிவிட்டார்கள்.’’
வரைவோலையில் இப்படி ஒரு சிக்கல் இருக்க முடியும் என்பது எனக்கு மிகவும் புதிதாக இருந்தது. பொருளாளருக்கும் அப்படியே இருந்திருக்கக் கூடும்.
எனக்கு சட்டென ஒன்று தோன்றியது.
‘’ வங்கியின் கவனக்குறைவால் ஒரு பிழை நிகழ்ந்துள்ளது. நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இன்றைக்கே நான் ரூ.1000 க்கான வங்கி வரைவோலையை எடுத்து அனுப்பி வைக்கிறேன். சிரமத்துக்கு வருந்துகிறேன்’’ என்றேன்.
பொருளாளர் ‘’இந்த டி.டி.யை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.’’ என்றார்.
சரி என்று சம்மதித்தேன்.
உடனடியாக வேறு ஒரு வங்கிக் கிளைக்குச் சென்று ரூ.1000 க்கான வரைவோலையை எடுத்து - வங்கி ஊழியர் மற்றும் மேலாளர் சரியாகக் கையெழுத்திட்டுள்ளனரா என உறுதி செய்து கொண்டு- தபாலில் அனுப்பினேன்.
இரண்டு நாட்களில் பொருளாளரிடமிருந்து ரூ.500 வரைவோலை வந்தது. அதை எடுத்துக் கொண்டு வங்கிக்குச் சென்றேன்.
மேலாளரிடம் கொடுத்தேன். நிகழ்ந்தது அனைத்தையும் சொன்னேன்.
‘’எங்க மிஸ்டேக் தான் சார்.’’
’’கொஞ்சம் கவனமா இருங்க சார். பணம் எப்போதுமே ஹியூமன் எமோஷன்ஸோட குளோஸான தொடர்பு உள்ளது. சந்தோஷம் துக்கம் பெருமிதம் பணிவு பாசம் நீதி நல்லது கெட்டது எல்லாத்துக்குமே பணம் சாட்சியா இருக்கும். ஒரு பேங்க் கஸ்டமர் ஒரு சாரிட்டிக்கு டொனேட் பண்றது ரெகுலர் ரொடீன். அதுல எவ்வளவு டிரபிள் பண்ணிட்டீங்க பாருங்க’’
‘’சாரி சார். இந்த டி.டி யை கேன்சல் செஞ்சுடவா’’
‘’ஏன் கேன்சல் செய்யப் போறீங்க. செஞ்ச தப்பைத் திருத்திக்கீங்க. கையெழுத்துப் போட்டுக் கொடுங்க.’’
மேலாளர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.
அன்றே சேவை அமைப்புக்கு மேலாளர் கையெழுத்திட்ட வரைவோலையை அனுப்பி வைத்தேன்.
மூன்று நாட்கள் கழித்து பொருளாளருக்கு ஃபோன் செய்தேன்.
‘’பிரபு! வணக்கம். எப்படி இருக்கீங்க?’’
நான் வரைவோலைகள் குறித்து விசாரித்தேன்.
‘’ரெண்டுமே கணக்குல சேந்துடுச்சு. உங்களுக்கு இப்ப ஹேப்பி தானே?’’
நான் நன்றி தெரிவித்தேன்.
‘’பிரபு! ஒரு டவுட்.’’
கேட்கச் சொன்னேன்.
‘’ நீங்க ரூ.500 முதல்ல அனுப்புனீங்க. அது கணக்குல சேரலை. உடனே ரூ.1000 அனுப்பிட்டீங்க. அப்புறம் அந்த டி.டி யையும் மேனேஜர் கையெழுத்தோட திரும்ப அனுப்புனீங்களே அது ஏன்?
‘’அந்த டி.டி உங்களோட சேவை அமைப்புக்கானதுன்னு முடிவானது. ஒரு பிழையால உங்க கணக்குல சேர தாமதம் ஆனதால பிழைக்கு ஈடா நான் அனுப்பிய தொகை தான் ரூ.1000. அந்த டி.டி திரும்பி வந்தாலும் அது உங்களோடதுதான். அதனால சரி செய்து திருப்பி அனுப்பினேன்.’’
‘’உங்களுக்குத்தான் ரொம்ப சிரமம்’’
பரஸ்பரம் நன்றி கூறி ஃபோனை வைத்தோம்.
எனது நண்பர் ஒருவர் ஊரின் சிறந்த வணிகர். வங்கியொன்றில் எழுபத்து ஐந்து லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். கடனை சரியாக திருப்பிச் செலுத்தி வந்தார். அவருக்கு மேலும் பத்து லட்ச ரூபாய் கடன் தேவைப்பட்டது. முன்னர் கடன் பெற்றிருந்த வங்கியிடம் விண்ணப்பம் செய்தார்.
நடையாக நடந்தார். அவருக்கு கடன் மறுக்கிறோம் என்றும் சொல்லவில்லை. கடன் தொகையை அளிக்கவும் இல்லை. மூன்று மாதத்துக்கு மேல் ஆனது. அவர்கள் தாமதம் செய்வதைக் கூட அவர் பெரிதாக நினைக்கவில்லை. ஏன் சரியான பதில் கொடுக்காமல் இருக்கிறார்கள் என என்னிடம் வருத்தப்பட்டார்.
அப்போது அவர் நிறுவனத்துக்கு அருகாமையில் இருக்கும் வங்கியின் மேலாளர் மாறுதலாகிப் பணியில் சேர்ந்திருந்தார். அவர் வங்கிக்கு அருகில் இருக்கும் பெரிய நிறுவனமாயிற்றே என்று மரியாதை நிமித்தம் சந்திக்க வந்தார். அப்போது நானும் அங்கிருந்தேன். நண்பர் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் ஏற்பட்ட அனுபவத்தை நான் சொன்னேன். உங்கள் நிறுவன ஐ.டி ரிடர்ன் பார்க்கலாமா என்றார். நண்பர் தந்தார். பேங்க் ஸ்டேட்மெண்ட் இருக்கிறதா என்று கேட்டார். ஃபைல் அவரிடம் தரப்பட்டது. தலைமை அலுவலகத்துக்கு ஃபோனில் பேசினார். உங்கள் கடனை எங்கள் வங்கிக்கு மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் டர்ன் ஓவருக்கு ஒரு கோடி வரை எளிதாகக் கடன் தரலாம் என்றார். இரண்டுமே தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்.
நண்பருக்குத் தயக்கம். மேலாளரிடம் நன்றி கூறி அனுப்பி வைத்து விட்டு என்னிடம் ஆலோசித்தார்.
‘’பிரபு! இப்ப இருக்கற வங்கியில சில அசௌகர்யங்கள் இருக்கு. உண்மைதான். இருந்தாலும் ரொம்ப நாள் பழக்கம் இல்லையா? மனசு சங்கடமா இருக்கு.’’
‘’சார்! இந்த மேனேஜரை இன்னைக்குத் தான் சந்திக்கிறோம். நம்ம இடத்துக்கு அவர் வந்திருக்கார். நம்ம பேப்பர்ஸ் வைச்சு நம்ம டர்ன் ஓவர் வச்சு எவ்வளவு லோன் தர முடியும்னு சொல்றார். நாம எதிர்பார்க்கிற லோனுக்கு மேலேயே தர்ரார். பழைய பேங்க்-ல ஆஃபர் பண்ற ரேட் ஆஃப் இண்ட்ரஸ்ட் விட குறைவா தர்ரார். இதை நாம ஏத்துக்கலனைன்னா நாம ஒரு தப்பு இல்ல; ரெண்டு தப்பு பண்றோம். முதல் விஷயம் புறக்கணிக்க வேண்டிய ஒன்னை சப்போர்ட் பண்றோம். ரெண்டாவது, சப்போர்ட் பண்ண வேண்டிய ஒன்னை புறக்கணிக்கிறோம்.’’
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்
என்ற திருக்குறளை அவரிடம் சொன்னேன்.
அன்றே புதிய வங்கிக்குச் சென்று கடன் விண்ணப்பம் பெற்று பழைய வங்கியில் பெற்றிருக்கும் கடன் விபரத்தைக் குறிப்பிட்டு தேவையான ஆவணங்களை இணைத்து சமர்ப்பித்தோம். அவர் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பினார். ஒரு வாரத்தில் ஒப்புதல் வந்தது. பழைய வங்கிக்கு ஃபோன் செய்து கடன் நிலுவைத் தொகை எவ்வளவு என்றோம். தொகையைச் சொன்னார்கள். புதிய வங்கியிடம் அந்த தொகையைக் கூறினோம். அத்தொகைக்கு ஒரு காசோலை வழங்கி விட்டார்கள். நிறுவனத்தின் ஊழியர் ஒருவரை அனுப்பி அக்காசோலையை பழைய வங்கியின் கடன் கணக்கில் செலுத்தி விட்டு வரச் சொன்னோம். தொகை பெரிது என்பதாலும் முழுமையாகக் கடன் தீர்க்கப்படுகிறது என்பதாலும் காசாளர் காசோலை விபரத்தை மேலாளரிடம் தெரிவித்திருக்கிறார். மேலாளர் அலறியடித்து ஃபோன் செய்தார்.
ஃபோனை எடுத்து நண்பர் காலை வணக்கம் சொல்லி நிறுவனத்தின் பெயரைச் சொன்னார்.
‘’நான் மேனேஜர் பேசறன்’’
‘’சொல்லுங்க சார்’’
‘’ஏன் லோன் குளோஸ் பண்றீங்க’’
‘’நான் எதிர்பார்த்த லோனை விட அதிகமாவும் குறைவான ரேட் ஆஃப் இண்ட்ரஸ்டலயும் எங்களுக்கு இன்னொரு லோன் கிடைச்சிருக்கு’’
‘’இவ்வளவு பெரிய லோன் ஏன் குளோஸ் ஆகி இன்னொரு பேங்குக்கு போகுதுன்னு ஹெட் ஆஃபிஸ்ல கேப்பாங்க”
‘’அவங்களுக்கு நடந்ததைச் சொல்லுங்க’’
‘’உங்களை நேரில் பாக்க இப்ப வரலாமா?’’
‘’யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம் சார்’’
மேலாளர் இரண்டு துணை மேலாளர்களை அழைத்துக் கொண்டு நிறுவனத்துக்கு வந்தார். நாங்கள் ஒரு பணியாளரை அனுப்பி நகரின் சிறந்த கடையிலிருந்து தேனீரை ஃபிளாஸ்கில் வாங்கி வைத்திருந்தோம். மேலாளர்களுக்குத் தேனீர் பறிமாறினோம்.
‘’ஹெட் ஆஃபிஸ்ல கேள்வி மேல கேள்வி கேப்பாங்க”
நண்பர் பொறுமையாகப் பதில் சொன்னார்.
‘’எனக்கு லோன் அவசரமா வேணும் சார். நூறு நாளைக்கு மேல நான் வெயிட் பண்ணிட்டேன். ஏன் தாமதம் ஆகுதுன்னு காரணமாவது சொல்லியிருக்கலாம்.’’
‘’நான் ஸோனல் மேனேஜர் கிட்ட பேசறன். அவங்க கொடுக்கற ரேட் ஆஃப் இண்ட்ரஸ்ட்ல அவங்க சாங்ஷன் பண்ற தொகையை தர்ரேன்.’’
‘’சார்! புது பேங்க்-ல ஒரு வாரத்துல செக் கொடுத்துட்டாங்க. அது உறுதிப்படுத்தப்பட்ட ஒண்ணு. நீங்க கொடுக்கறது வாக்குறுதி. இந்த ரெண்டுல எதை தேர்ந்தெடுக்கறது. நீங்களே சொல்லுங்க. 'Known Devil is better than Unknown Angel' இல்லையா?’’
மேலாளர் குழு திரும்பிச் சென்றது.
அரை மணி நேரத்தில் காசோலை வரவு வைக்கப்பட்ட விபரம் நண்பரின் அலைபேசிக்கு வந்தது. நண்பர் புதிய வங்கி மேலாளருக்கு ஃபோன் செய்தார்.