Tuesday 9 June 2020

வங்கிகள் - சில கேள்விகள்

1. கிராமப்புறத்தில் இருக்கும் ஒரு வங்கிக் கிளையை எடுத்துக் கொள்வோம். அதன் வரம்புக்குள் 15 கிராமங்கள் இருக்கக் கூடும். ஏதேனும் ஒரு கிராமத்தில் அக்கிராமத்தில் உள்ள எல்லாருக்கும் ஒரு விடுபடல் கூட இன்றி வங்கிக் கணக்கு துவங்க முயற்சி எடுத்ததுண்டா? 

2. நகர்ப்புறங்களில் இருக்கும் ஒரு வங்கியை எடுத்துக் கொள்வோம். ஏதேனும் ஒரு கல்லூரிக்குச் சென்று அக்கல்லூரியில் இருக்கும் எல்லா மாணவர்களுக்கும் வங்கிக் கணக்கு துவங்க ஏற்பாடு செய்ததுண்டா?

3. வங்கியின் செயல்பாடுகள் மற்றும் இயங்குமுறை குறித்த அறிமுகத்தை பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்க வங்கிகள் முயற்சி ஏதும் மேற்கொண்டதுண்டா?

4. தங்கள் கிளையைச் சுற்றியிருக்கும் ஊரின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது தங்கள் கடமையே என வங்கிகள் உணர்வதுண்டா?

5. அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் செயல்படும் வங்கி முறைக்கும் இந்தியாவில் செயல்படும் முறைக்கும் பெரும் வேறுபாடு உண்டு என்பதை வங்கிகள் உணர்ந்திருக்கின்றனவா?

6. அஞ்சல்துறை சேமிப்புக்கு முகவர்கள் உண்டு. ஆயுள் காப்பீட்டுக்கு முகவர்கள் உண்டு. வங்கியின் வாடிக்கையாளரை அதிகப்படுத்த - டெபாசிட் அதிகப்படுத்த சிறிய அளவில் கூட முகவர்கள் இல்லையே. ஏன்?

7. ஏதேனும் ஒரு ஊரின் வீதி வணிகர்கள் முற்றிலும் வங்கியின் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர் என்ற தரவு உண்டா? ஏன் அவ்வாறான பணியை முன்னெடுக்கவில்லை?

8. அரசு ஊழியர்களின் மாத ஊதியம் வங்கிக்கணக்கில் வரவாகும் என அறிவிக்கப்பட்ட பின்னர்தான் பல அரசு ஊழியர்களே வங்கியின் வளையத்துக்குள் வந்தார்கள் என்பது உண்மைதானே?

9. பொதுமக்கள் மத்தியில் வங்கிக்குச் செல்வதற்கு ஒரு தயக்கம் இருப்பது உண்மைதானே? வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர் சேவையை பெரிதாக நினைப்பதில்லை என்பது தான் காரணமா?

10. வாடிக்கையாளரைச் சந்தித்தல் - வாடிக்கையாளர் கூட்டங்களை நடத்துதல் - வாடிக்கையாளர்களுக்கு புதிய நடைமுறைகளை அறிமுகம் செய்தல் ஆகிய மக்கள் தொடர்பு பணிகளே தங்களின் அடிப்படை என்பதை வங்கிகள் உணர்கின்றனவா?