Saturday 11 July 2020

அமர்க


உடலை லகுவாக வைத்திருப்பவர்கள் யோகாசனங்களை சொல்லித் தரும் ஆசிரியர்களாக இருப்பார்கள். இன்னொருவருக்கு சொல்லித் தர அந்த ஆசனத்தை தான் செய்து காண்பிக்க வேண்டும் என்பதால் அவர்களும் தொடர்ச்சியான பயிற்சியில் ஈடுபட்டிருப்பர். சிறுவர்களுக்கு ஆசனங்கள் சொல்லித் தருவதற்கும் பெரியவர்களுக்கு ஆசனங்கள் சொல்லித் தருவதற்கும் பாரிய வேறுபாடு உண்டு. சிறுவர்களின் உடல் வளைக்கும் முறைக்கு வளையும். பெரியவர்கள் உடல் அவ்வாறு எண்ணியவாறு வளையாது. நம் உடல் தசைகளுக்கு ஞாபகங்கள் உண்டு. மூளையின் விருப்பத்தை – கட்டளையை செயல் புரிய ஒரு முன்நிகழ்வு தசைகளுக்கு இருக்க வேண்டும். வயதான பின் அதை உடலில் உருவாக்கிக் கொள்வது சிறிது கடினம். இளம் வயதில் எளிதில் உருவாக்கி விடலாம். குழந்தைகள் ஆடிக் குதித்து விளையாடும் போது உடலின் எல்லா தசைகளும் முழுமையான ரத்த ஓட்டம் பெற்று அவை அவற்றின் செயல் சாத்தியங்களின் அதிகபட்சத்தை அடையும். அதனால் குழந்தைப் பருவத்தில் குழந்தைகள் நன்றாக விளையாடுகிறார்களா என்று பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். இன்று குழந்தைகள் கையில் ஸ்மார்ட்ஃபோனைக் கொடுத்து அவர்களை உடல் இயக்கம் இல்லாமல் ஆக்குகின்றனர் பெற்றோர்.

உடலைப் பழக்குவதன் மூலம் மனநிலையை மாற்ற முடியும். மனத்தில் ஏதேனும் ஒரு சஞ்சலம் எனில் ஐந்து கிலோமீட்டர் தூரம் நடந்தோமெனில் அந்த சஞ்சலத்தைக் கடந்து விட முடியும். பேட்மிட்டன் போன்ற விளையாட்டை ஒரு மணி நேரம் விளையாடுவோமெனில் ஒரு துயரத்தைக் கூட கடந்து விட முடியும். நமது வாழ்க்கைமுறை எல்லாவற்றையுமே பணம் சார்ந்ததாக எண்ணிக் கொள்ள பழக்கி விட்டிருக்கிறது. பொருட்செல்வம் முக்கியமானது தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதற்காக நம் ஆரோக்கியம், மனநிலை, பழக்கவழக்கங்கள் ஆகிய அனைத்தையும் பலி தரத் தேவையில்லை. லௌகிகத்துக்காக நாம் எல்லாவற்றையும் ஒத்தி வைக்கிறோம். உடலும் மனமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒன்றைப் பழக்குவதன் மூலம் மற்றொன்றை நாம் விரும்பியவாறு அமைத்துக் கொள்ள முடியும். 

எனக்கு ராணுவ கமாண்டோக்கள், விளையாட்டு வீரர்கள், மலையேறுபவர்கள், நடனக் கலைஞர்கள் ஆகியோர் உடலைப் பராமரிக்கும் விதம் குறித்து எப்போதுமே ஆச்சர்யம் உண்டு. கமாண்டோக்கள் 5 நிமிட பயிற்சி என ஒன்றைச் செய்வார்கள். அவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் ‘’டிரில்’’ என்ற கட்டளை வரும். ஒரு நிமிடத்துக்குள் 40 தண்டால் எடுப்பார்கள். அடுத்த ஒரு நிமிடத்துக்கு குட்டிக்கரணங்களைத் தொடர்ந்து அடிப்பார்கள். பின்னர் படுத்தவாறு பாதங்களை ஊன்றி முழுங்காலை உயர்த்தி தலையால் முழங்காலைத் தொடர்ச்சியாகத் தொடுவார்கள். பின்னர் ஒரு நிமிடம் வேகமான ஓட்டம். அடுத்து ஒரு நிமிடம் தொடர்ச்சியாகக் குதிப்பார்கள். அவர்களின் வழக்கமான பயிற்சியுடன் இதைப் போல சிலவற்றை அவ்வப்போது இணைப்பார்கள். ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும் இதைப் போல 6 லிருந்து 10 முறை செய்வது போல் இருக்கும். எனக்கு இவ்வாறான பயிற்சிகள், இவ்வாறு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் ஆகியோர் மீது பெரும் மதிப்பு உண்டு. 

என்னுடைய மோட்டார்சைக்கிள் பயணத்தில் நான் ராணுவ அதிகாரிகளைச் சந்தித்ததுண்டு. அவர்கள் தனியே நாடெங்கும் பயணம் செய்யும் செயலை மனப்பூர்வமாகப் பாராட்டுவார்கள். எனக்கு மிகவும் கூச்சமாக இருக்கும். எனது கூச்சத்தை அவர்களிடம் வெளிப்படுத்துவேன். பல நாட்கள் தொடர்ச்சியாக மோட்டார்சைக்கிள் ஓட்ட உடல் மனம் தாண்டிய சில விஷயங்கள் தேவை. அவை உங்களிடம் இருப்பதால்தான் உங்கள் பயணம் சாத்தியம் என்பார்கள். பெரிய நிலப்பரப்பை, தினமும் புதிது புதிதான மனித முகங்களை, எண்ணற்ற பறவைகளை, ஏகாந்தமான நீர்ப்பரப்புகளைக் காண்பதால் ஏற்படும் பரவசமே என்னை இட்டுச் செல்கிறது என்பேன். இது எவருக்கும் சாத்தியம் என்று அவர்களிடம் பதில் சொல்வேன்.

சில ஆண்டுகளுக்கு முன்னால், நான் ஒருவரைச் சந்தித்தேன். அவரைச் சந்திப்பது அதுவே முதல் முறை. அவர் கட்டிடப் பொறியியல் படித்திருந்தார். இந்திய ஆட்சிப் பணி தேர்வுகளுக்கானத் தயாரிப்புகளை மேற்கொண்டிருந்தார். கல்லூரி முடித்த பின் மூன்று ஆண்டுகளாக தயாரிப்புகள் செய்து கொண்டிருந்தார். ஒரு மாலைப் பொழுது முழுவதும் அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். விடை பெறும் போது உங்கள் மனநிலைக்கு மன அமைப்புக்கு ஆட்சிப்பணியை விட வணிக மேலாண்மை உங்களுக்கு சிறப்பாக இருக்கும் என்ற எனது அபிப்ராயத்தைச் சொன்னேன். அவர் ஆட்சிப்பணித் தேர்வுகளுக்கான தயாரிப்புகளை நிறுத்து விட்டார். சி. ஏ. டி தேர்வுகளுக்குத் தயார் செய்து ஐ.ஐ.எம் அகமதாபாத்தில் சேர்ந்து விட்டார். அவர் வீட்டில் அனைவருக்கும் ஆச்சர்யம்; எப்படி அவரது இந்த திறன் என் கண்ணுக்குத் தெரிந்தது என. என் மனதில் பட்டது அவ்வளவு தான். யாரிடமும் அபிப்ராயம் சொல்வதற்கு முன் இப்போதெல்லாம் ரொம்ப யோசித்துத்தான் சொல்கிறேன். 

அறிவுரை கூறுவதில் ஒரு சூட்சுமம் உள்ளது. யார் நாம் சொல்வதைக் கேட்பார்களோ அவர்களிடமே அறிவுரை சொல்ல வேண்டும். இந்த பின்னணியில் எனக்கு யோகா மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் எவ்வாறு எவ்விதமான உடற்பயிற்சியும் இல்லாதவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள் என நினைத்துக் கொள்வேன். தன்னைப் பற்றி அறிந்தவர்களால் பிறரைப் பற்றியும் அறிய முடியும்.

இன்று காலை எனது நண்பர் ஒருவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர் என் நண்பரின் சிறிய தந்தை. அதனால் நானும் அவரை சித்தப்பா என அழைப்பேன். அவர் வீட்டில் அனைவருமே என் நண்பர்கள். அவருக்கு  சமீபத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இப்போது உடல்நிலை சீராகி வீட்டில் இருக்கிறார். 

என்னைக் கண்டதும் மகிழ்ந்தார். 

‘’பிரபு! உயிர் பிழைத்தது பெரிய காரியமாயிடுச்சு.’’

‘’சித்தப்பா! ஏன் இப்படி சொல்றீங்க. உங்களுக்கு நெஞ்சு வலி வந்ததுண்ணு உங்களுக்குத் தெரியும். இப்ப உடம்பு சரியாயிடுச்சுன்னு தெரியும். அது தெரிஞ்சா போதும் உங்களுக்கு. இல்லாததெல்லாம் மனசுல நினைக்காதீங்க.’’

‘’வெயிட் எதுவும் தூக்கக் கூடாதுன்னு சொல்றாங்களே?’’

‘’ஆமாம் சித்தப்பா. சட்டென ஒரு வெயிட்டை தூக்குனீங்கன்னா ரத்த ஓட்டம் மாறுபடும். அதனால தூக்கக் கூடாது. நீங்க வெயிட் லிஃப்டிங் காம்படிஷன் போகப் போறீங்களா? வெயிட் தூக்கறது மேல ஏன் இவ்வளவு ஆர்வம்?’’

‘’பைக் ஓட்டக் கூடாதுன்னு சொல்றாங்களே?’’

‘’ரோட்ல மேடு பள்ளம் இருக்கும். அதனால’’

‘’இன்னொருத்தரை எதிர்பார்த்து இருக்கறாப் போல இருக்கு’’

‘’லௌகிக வாழ்க்கையில எல்லாருமே ஒருத்தர் இன்னொருத்தரை சார்ந்து தான் சித்தப்பா இருக்கோம்.’’

சித்தி வந்தார்கள். 

‘’எப்பவும் இதே புலம்பல் தான் பிரபு. சித்தப்பாவை ஃபிரீயா இருக்கச் சொல்லுங்க’’

‘’சித்தப்பா! பகல் பொழுதுல என்ன செய்யறீங்க?’’

‘’இந்த சோஃபால படுத்துக்கறன். டி.வி பார்த்துக் கிட்டு இருக்கன்.’’

‘’சதா சர்வ நேரமும் டி.வி தான்’’ சித்தியின் குரல் சமையலறையிலிருந்து வந்தது. 

‘’சித்தப்பா உங்களுக்கு நான் ஒரு யோகாசனம் சொல்லித் தரேன். அதைச் செய்ங்க’’

‘’பிராணாயாமமா?’’

‘’அதெல்லாம் இல்லை. ரொம்ப சிம்பிளான பயிற்சி.’’

அடுப்பங்கரையில் இருந்து ஒரு தடுக்கை எடுத்து வந்து போட்டு அதில் அமர்ந்தேன். 

‘’சித்தப்பா நாம தரையில ஒக்காந்து சாப்பிடுவோம்ல அந்த மாதிரி ஒக்காரணும். கைகளை மேல் முகமா வச்சுக்கங்க. உடம்பை டைட் பண்ண வேண்டாம். ரிலாக்ஸா ஒக்காருங்க. முதுகை வளைக்காதீங்க. நேரா வச்சுக்கங்க. முதுகுத் தண்டுல மட்டும் கவனம் இருக்கட்டும். வளைய வேண்டாம். குனிய வேண்டாம். நேரா வைங்க. கண்ணை மூட வேண்டிய அவசியம் இல்லை. இது தியானம் இல்லை. டி.வி மட்டும் பாக்க வேண்டாம். இப்படியே ஒக்காந்திருங்க. உங்களைச் சுத்தி இருக்கற எல்லா சத்தமும் கேட்கும். கேட்கட்டும். கவனம் ஸ்பைனல் மேல மட்டும்’’

நான் எழுந்து விட்டேன். தடுக்கை எடுத்த இடத்தில் கொண்டு போய் வைத்து விட்டு சோஃபாவில் அமர்ந்து கொண்டேன். பலரிடம் தினமும் நடைப்பயிற்சி செல்லுமாறு கூறியிருக்கிறேன். யோகா டெமோ செய்வது அனேகமாக முதல் முறை. தவழும் குழந்தை கூட சில நாட்களில் அமர்ந்து விடுகிறது. நான் சொல்லிக் கொடுத்தது ஒட்டு மொத்த மனித குலத்துக்கும் தெரிந்த ஒன்றைத் தானோ? உலகின் 700 கோடி மனிதர்களும் அறிந்த ஒன்றில் சித்தப்பாவுக்கு அறிமுகம் தர வேண்டுமா? என் மனதில் பல கேள்விகள் எழுந்தன. 

ஐந்து நிமிடம் ஆனது. சித்தப்பா தடுக்கை கொண்டு வந்து போட்டு அமர்ந்தார். எனக்கு பெரிய குதூகலமாகி விட்டது. நான் அளித்த பயிற்சி மீது அவருக்கு நம்பிக்கை வந்து விட்டது. 

தடுக்கின் மேல் உடலை இறுக்கி உட்கார்ந்தார். தோள்களில் இறுக்கம். கழுத்தில் இறுக்கம். கைகளையும் இழுத்துப் பிடித்தது போல வைத்திருந்தார். முதுகை வளைத்தார். 

நான் முதுகை நேராக்கினேன். அவரது இரு உள்ளங்கைகளையும் மேல் நோக்கி வைத்தேன். உடல் இறுக்கத்தை சற்று தளர்த்தினார். நான் மேலும் தளர்த்தச் சொன்னேன். சற்று லகுவாக அமர்ந்து விட்டார். சில நிமிடங்களுக்குப் பின் எழுந்தார். 

‘’சித்தப்பா! தண்டுவடம் தான் மூளையோட கட்டளையை உடம்பு முழுசுக்கும் கொண்டு போகுது. நீங்க அதுல கவனம் வச்சா அது ஸ்டாராங் ஆகும். தண்டுவடம் ஸ்டாராங்கா இருந்தா உடம்போட எல்லா சிக்கலும் தீர்ந்திடும்’’

‘’சும்மா ஒக்காரது தான் பயிற்சியா?’’ 

‘’சித்தப்பா! நாம ஒரு லட்சம் ரூபாய்னு நினைக்கறோம். ஆனா அது ஒரு விஷயம் கிடையாது. அதில ஒரு லட்சம் ஒரு ரூபாய் இருக்கு. இது அந்த மாதிரிதான். டெய்லி நீங்க இந்த பயிற்சியை கொஞ்சம் கொஞ்சமா செஞ்சா ஒரு ஒரு ரூபாயா சேத்து ஒரு லட்சம் ரூபாய் ஆக்கறாப்புல. படுத்துட்டு டி.வி பாத்துக்கிட்டு இருந்தா ஒரு லட்ச ரூபாயை ஒரு ரூபாய்க்கு கொண்டு வர்ராப் போல’’ 

சித்தப்பா ஒரு சந்தேகம் கேட்டார். 

‘’இந்த பயிற்சியை சாப்பிட்ட பிறகு செய்யலாமா?’’

நான் யோகா ஆசிரியர்களின் அர்ப்பணிப்பை எண்ணிப் பார்த்தேன்.