Friday 10 July 2020

சப்கோ சன்மதி தே பகவான்

நகரை ஒட்டியிருக்கும் ஒரு கிராமப் பகுதிக்கு இன்று மாலை சென்றிருந்தேன். அது நகரில் பல ஆண்டுகளுக்கு முன்னால் போடப்பட்ட மனைப்பிரிவு. அதனை ஒட்டி ஒரு வாய்க்கால் ஓடுகிறது. வாய்க்காலிலிருந்து கண்ணிகள் மனைப்பிரிவைத் தாண்டி இருக்கும் வயல்களுக்குச் செல்கிறது. கண்ணி பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் கிடக்கிறது. காவிரி வடிநிலம் என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக ( இந்த பகுதியில் குறைந்தபட்சம் 10,000 ஆண்டுகளாக விவசாயம் நிகழ்ந்துள்ளதை நிலவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன) விவசாயம் நிகழ்ந்துள்ள பகுதி. காவிரி குடகு மலைகளில் பாறைகளை உருட்டிப் பிரட்டிக் கொண்டு சேர்க்கும் வளமான வண்டல் மண்ணால் உருவான பிரதேசம். முற்காலச் சோழர்கள், முத்தரையர்கள், பல்லவர்கள், பிற்காலச் சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் என பல்வேறு மன்னர்களால் பாசனக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு விவசாயம் செழித்த பிரதேசம் இது. பிரிட்டிஷார் கூட பல்வேறு பாசனத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தியிருக்கிறார்கள். இந்த பிரதேசத்தின் விவசாயத்தின் உபரியே பேராலயங்களாகவும் தேவார இலக்கியமாகவும் அற்புதமான சிற்பங்களாகவும் இசையாகவும் உருமாறியுள்ளது. உலகப் பண்பாட்டுக்கு ஒரு சாரமான பகுதியை பங்களிப்பாய் வழங்கிய பிரதேசம் இது. எந்தரோ மகானு பாவுலு என்கிறார் தியாகராஜர். எத்தனை மாமனிதர்கள்! கண்ணகி, மணிமேகலை, திருஞான சம்பந்தர், காரைக்கால் அம்மையார், பரஞ்சோதி முனிவர், ராஜராஜன், குந்தவை நாச்சியார், ராஜேந்திரன், கம்பன், தியாகராஜர், முத்துச்சாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள், அபிராமி பட்டர், உ.வே.சாமிநாத ஐயர், மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ... இன்னும் எத்தனை எத்தனை பேர். 

தமிழ்நாட்டிலேயே எத்தனையோ பகுதிகள் வானம் பார்த்த பூமிகள். வட கிழக்குப் பருவ மழைக்காக ஆண்டு முழுதும் ஏங்கிக் கிடப்பவை. தங்கள் ஆற்றல் முழுவதையும் திரட்டி வறட்சி தாங்கி வளரும் சோளத்தை விதைத்து உலர்ந்த தோகைகளுக்குள் உயிர்த்திரட்டிக் கொள்ளும் சோளக்கதிரை அறுவடை செய்வதற்காகக் காத்திருக்கும் பெரும் ஜனத்திரள் தமிழ்நாட்டிலேயே வாழ்கிறார்கள். 

காவிரி உற்பத்தியாகும் பகுதிகளில் ஒவ்வொரு ஊரிலும் கால்வாய்கள் வழியாக ஆற்று நீரை குளங்களில் தேக்கி விட முடியாது. அவை பாறைப் பகுதிகள். மலையை ஒட்டியிருப்பதால் ஊர் உயரத்தில் இருக்கும். ஊரின் தாழ்வான பகுதிகளை இணைத்தவாறு நதி பாய்ந்து வெளியேறி விடும். அண்டை ஊர்களுக்குக் கால்வாய் அமைப்பது என்பது பெரும் செலவேறிய பணி. காவிரி வடிநிலம் மேட்டிலிருந்து மெல்ல மெல்ல அளந்து வைக்கப்பட்டாற் போல தாழ்வான இடத்துக்கு வந்து நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் நீளத்தை ஆறுகளாகவும், கிளை ஆறுகளாகவும், வாய்க்கால்களாகவும் பிரிந்து பாசன வசதி தந்து கடலில் சென்று கலப்பது. பாய்ச்சல் காலாகவும் வடிகாலாகவும் ஒரே கால்வாயே செயல்படும் என்பது ஒரு பொறியியல் அற்புதம்.  அமெரிக்காவின் மிசிசிபி - மிசௌரி படுகையுடன் ஒப்பிடக் கூடியது காவிரி வடிநிலம். 

நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிவது போல காவிரி கைவிடப்பட்டுள்ளது. மேட்டூரில் தண்ணீர் திறந்து நான்கு வாரங்கள் ஆகி விட்டது. இன்னும் கடைமடைக்கு நீர் சென்று சேரவில்லை. மேட்டூரில் தண்ணீர் திறந்து ஒரே வாரத்தில் கடைமடைக்கு நீர் சென்று சேர வேண்டும். இது இயற்பியல் அடிப்படையிலானது. கால்வாய்களும் கண்ணிகளும் ஆக்கிரமிப்புகள் இன்றி முறையாகப் பராமரிக்கப்பட்டு இருக்குமானால் மேட்டூரில் தண்ணீர் திறந்து ஒரே வாரத்தில் கடைமடையில் நீர் பாயும். எந்த குளத்திலும் காவிரி நிரம்பவில்லை. இன்னும் ஜே.சி.பி எந்திரங்கள் கிளை ஆறுகளில் வேலை செய்து கொண்டிருக்கின்றன. 

நலம் நிறைய பிராத்தனை செய்து கொள்வது ஒரு நல்ல வழி. 

சப்கோ சன்மதி தே பகவான் என்பது மகாத்மாவின் பிராத்தனை.