Friday 17 July 2020

ஏகம் சத்

நான் பணி புரியும் கிராமத்தில் என்னை மக்கள் பலவிதமாக புரிந்து வைத்துள்ளார்கள். அவர்களுக்கு நான் ஒரு வனத்துறை அதிகாரி. சிலர் என்னை விவசாயத்துறையைச் சேர்ந்தவனாக எண்ணிக் கொள்கிறார்கள். தோட்டக்கலைத்துறையைச் சார்ந்தவன் என்பது இன்னும் பலரின் எண்ணம். ஊரக மேம்பாட்டுத் துறை என்றும் சிலரின் அபிப்ராயம். 

ஒவ்வொரு விவசாயியையும் அவர்கள் வீட்டில் சந்திக்கும் போது எல்லாரிடமும் நான் பேசத் துவங்குவது ‘’வணக்கம். என்னுடைய பெயர் பிரபு. கட்டிட கட்டுமானம் என்னுடைய தொழில். நண்பர்களுடன் இணைந்து மரம் நடுகிறோம். ‘’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டு தான் பேசவே துவங்குவேன். அதற்கே இப்படி. இதுநாள் வரை கிராமத்தில் யாரும் என்னை ஒரு கட்டிடப் பொறியாளனாக நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. பலருக்கு நான் ஒரு அரசு அதிகாரி தான். 

என்னுடைய அலைபேசி எண்ணை எல்லாரிடமும் தந்துள்ளேன். அவர்களிடமிருந்து அழைப்பு வரும். 

’’வணக்கங்க. நான் சுப்ரமணியன் பேசறன்’’

‘’வணக்கங்க.’’

‘’நாம நேத்து பேசிக்கிட்டிருந்தது போல ...’’ சுப்ரமணியன் கட கட என்று ஆரம்பிப்பார். 

’’அண்ணனுக்கு ஊர்ல எந்த தெருவுல வீடு’’

‘’என்ன சார்! நேத்து சாயந்திரம் நம்ம வீட்டுல டீ சாப்டீங்களே. பெரிய தெரு சார் நம்ம வீடு’’

‘’ஓ! நீங்களா! அந்த பச்சை பெயிண்ட் அடிச்ச வீடு. வீட்டு வாசல்ல ஒரு செம்பருத்தி பூ பூத்திருக்கே. அந்த வீடுதானே!’’

’’ஆமா சார் அந்த வீடுதான்’’

ஒரு ஊரில் எத்தனை சுப்ரமணியம் , எத்தனை நடராஜன், எத்தனை ராமச்சந்திரன், எத்தனை சதீஷ்.

அத்தனை பேர் எண்ணையும் அலைபேசியில் ஏற்றினால் அதன் மெமரி நிறைந்து விடும். டைரியில் குறித்து வைத்திருப்பேன். மரம் நடுதல் குறிப்புகள் தொடர்பாக தினம் சிலருக்கு ஃபோன் செய்வேன். 

‘’சார் ! இன்னைக்கு காலைல தான் சார் குளக்கரைல நாம பேசிக்கிட்டிருந்தோம்’’

‘’அதாவது நான் எல்லாருக்கும் ஃபோன் செஞ்சு ஞாபகப்படுத்துறன். அந்த வரிசைல உங்க பேரும் வந்திருக்கு.’’

அடுத்த எண்ணுக்கு அழைப்பேன். 

‘’சார் ! குளக்கரைல நானும் தான் சார் கூட இருந்தேன்’’ அடுத்த நபரும் சொல்வார். மேலும், ‘’இதுக்கு முன்னாடி நீங்க கூப்பிட நம்பர் என்னோட தம்பியோடது. அவன் இப்ப பக்கத்துல தான் இருக்கான்’’

எனக்கு எல்லாரையும் தெரியும். ஆனால் இன்னும் முழுமையாக பெயரும் முகமும் இணைந்து ஞாபகத்தில் பதிவாகவில்லை. அழைப்புகள் வந்தால் ஊரில் எந்த தெரு என்று கேட்பேன். தெருவின் பெயர் சொன்னதும் ஓரளவு ஞாபகப்படுத்திக் கொள்வேன்.

நேற்று மாலை கிராமத்துக்குச் சென்று விட்டு பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தேன். கிராமத்துக்கு ஐந்து கிலோ மீட்டர் தொலைவுள்ள இடத்தில் ஒருவர் லிஃப்ட் கேட்டார். நான் வண்டியில் ஏற்றிக் கொண்டேன்.

உற்சாகமாக பேச்சை ஆரம்பித்தார்.

‘’சார்! எனக்கு உங்களை நல்லாத் தெரியும்’’

’’அப்படியா! ரொம்ப சந்தோஷம்’’ நான் மையமாக சொல்லி வைத்தேன். மனம் இவர் யாராயிருக்கும் என்று தேடியது. சற்று பொருத்தால் அவரே சொல்வார் எனக் காத்திருந்தேன்.

‘’சார்! நீங்க இந்த பக்கம் அடிக்கடி வருவீங்க. தினமும் நீங்க போறதை நான் பாத்துருக்கன். உங்களை எனக்கு நல்லா தெரியும்’’

‘’நீங்க விவசாயம் செய்யறீங்களா அண்ணன்?’’

‘’ஆமா சார். ஒரு ஏக்கர் நிலம் இருக்கு. மோட்டார் ரீவைண்டிங் கடை வச்சிருக்கன்’’

‘’பிஸினஸ் எப்படி போகுது?’’

‘’நமக்கு தினம் ரெண்டு மோட்டாராவது வந்துரும் சார். நல்லா போய்ட்டிருக்கு’’

‘’சார் நீங்க எல்லாருக்கும் மரக்கன்னு தர்ரீங்களா?’’

‘’ஆமாம்’’

‘’என்னோட சொந்தக்காரர் ஒருத்தர் நீங்க கணக்கெடுக்கற கிராமத்துல இருக்கார். அவர் சொன்னார். என் வயல்லயும் மரம் நடலாம்னு ரொம்ப நாளா நினைச்சுட்டிருக்கன். எனக்கும் தருவீங்களா?’’

‘’முதல்ல அந்த கிராமத்தை முழுமையா முடிச்சுட்டு அடுத்த கிராமத்துக்கு வர்ரதா இருக்கோம். பரவாயில்லை. நீங்க ரொம்ப ஆர்வமா இருக்கீங்க. உங்களுக்கு எத்தனை மரம் வேணும்?’’

’’எனக்கு 40 தேக்கங்கன்னு தாங்க சார்”

’’என் நம்பர் குறிச்சுக்கங்க. அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை அந்த கிராமத்துல கொடுக்கறோம். அப்ப அங்க வந்து என்ன்னைப் பாருங்க. இல்லன்னா ஃபோன் செய்ங்க. வாங்கிக்கலாம்’’

‘’சார்! எனக்கு ஒரு சந்தேகம்?’’

‘’கேளுங்க’’

‘’நீங்க கிராமத்துல ஓ.சி, பி.சி, எம்.பி.சி, எஸ்.சி எல்லாருக்கும் மரம் கொடுக்கறீங்களா?’’

’’அண்ணன்! நாங்க ஒரு கிராமத்துக்கு சில விஷயங்களை முழுமையா செய்ய நினைக்கறோம். ஒரு தாலுக்காங்கறது அளவுல ரொம்ப பெருசு. மாவட்டம் அதை விடப் பெருசு. மாநிலம் இன்னும் பெருசு. நாங்க ஒரு சின்ன டீம். எங்களால ஒரு கிராமத்துல முழுமையா வேலை செய்ய முடியும். அதனால இப்ப ஒரு கிராமத்தை எடுத்துருக்கோம். அதுல இருக்கற ஒவ்வொரு வீட்டுக்கும் போயிருக்கோம். விவசாயம் பல பேரோட பசியைப் போக்குற தொழில். அதனால அதுல ஈடுபட்டிருக்கற அத்தனை பேரும் விவசாயிகள் தான். எல்லாரும் சேந்து வேலை செய்யறதாலதான் உலகமே பசியாற முடியுது. அதனால வயல்ல வேலை செய்யற எல்லார் மேலயும் எங்களுக்கு பெரிய மரியாதை இருக்கு. கிராமத்துல 100க்கு 96 வீட்டுக்கு நான் நேரா போயிருப்பன். அவங்க ஊர்ல இல்லாம இருந்தாதான் கணக்கெடுப்பு விட்டிருக்கும்.’’

‘’மேல்ஜாதி கீழ்ஜாதி இருக்கத்தானே சார் செய்யுது’’

‘’அண்ணன்! மனுஷங்க எல்லாரும் ஒன்னு தான். ஒரு மரம் இருக்கு. அதுல வேர் இருக்கு. கிளை இருக்கு. இலை இருக்கு. காய் இருக்கு. பழம் இருக்கு. பூ இருக்கு. இது எல்லாம் சேந்து தான் மரம். இதுல ஒன்னு இல்லன்னா இன்னொன்னு இல்ல. ஒன்னு பெருசு இன்னொன்னு சிறுசுன்னு சொல்ல முடியுமா? இது எல்லாம் ஒன்னுன்னு பாக்கறதுதான்ன அறிவு. பிரிச்சுப் பாத்து மேல கீழன்னு சொல்றது அறியாமை.’’

’’யோசிச்சுப் பாத்தா நீங்க சொல்றது உண்மை தான் சார். மரத்தை வச்சே விளக்கமா சொல்லீட்டீங்க.’’

‘’மரத்தை உவமையா வச்சு இப்படி விளக்கினவர் ஒரு ஞானி. அவர் பேரு நாராயண குரு’’