Tuesday 14 July 2020

ராஜாஜியின் கல்வித் திட்டம்


நண்பர்கள் நான் ஏன் ராஜாஜியின் கல்வித் திட்டத்தை ஆதரிக்கிறேன் எனத் தொடர்ந்து கேட்ட வண்ணமிருந்தனர். அவர்களிடம் நான் சில விஷயங்களைக் கூறி விட்டு என்னுடைய தரப்பை முன்வைத்தேன். நான் கூறுபவற்றை உள்வாங்கினால் மட்டுமே என்னுடைய தரப்பை முழுமையாகப் புரிந்து கொள்ள இயலும். 

1. நான் கல்வித்துறையில் நிபுணன் அல்ல. என்னுடைய அவதானங்கள் ஒரு படைப்பாளியாக நான் முன்வைப்பவையே. 

2. கல்வி குறித்த காந்தியின் - காந்தியவாதிகளின் பார்வை என் மனத்துக்கு மிகவும் உவப்பானது. 

3. இந்தியாவின் கல்விமுறை குறித்து திரு. தரம்பால் அவர்கள் எழுதிய ‘’தி பியூட்டிஃபுல் ட்ரீ’’ நூலை நான் வாசித்திருக்கிறேன். 

4. உலகெங்கும் மாற்றுக்கல்வி குறித்து உருவாகி வந்துள்ள சிந்தனைகள் மேல் எனக்கு மதிப்பும் ஆர்வமும் உண்டு.

5. தமிழ்நாட்டில், தமிழ் வழியில் ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறேன் என்பதும் பொறியியல் பயின்றதும் தமிழ்நாட்டில் என்பதும் தமிழ்நாட்டின் கல்வி குறித்த என்னுடைய பார்வைகளுக்கு வலு சேர்க்கும் என்று நான் கருதுகிறேன். 

6. இந்திய நிலமெங்கும் நான் பயணித்திருக்கிறேன். நான் பயணித்த இடங்களில் பள்ளி மாணவர்களிடமும் கல்லூரி மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் நான் கல்வி குறித்து உரையாடியிருக்கிறேன். 

ஒரு நாட்டின் - ஒரு மாநிலத்தின் கல்விக் கொள்கை என்பது பல்வேறு புவியியல், சமூக, பொருளியல், அரசியல் சூழ்நிலைகளைச் சார்ந்தவை. கல்வி குறித்த எந்த விஷயத்தையும் அவற்றின் பின்னணியிலேயே காண முடியும். காண வேண்டும். நமது நாடு விடுதலை பெற்ற போது நாம் 21 வயது ஆன இந்தியர்கள் அனைவருக்கும் வாக்குரிமை அளித்தோம். இந்தியர்களுக்கு கல்வியறிவு அளிப்பது என்பது தேசத்தின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் மிகவும் முக்கியமான விஷயமாக இருந்தது. ஒரு ஜனநாயக அரசு அமைந்துள்ள சூழலில், அதன் புவியியல் உலக அரசியலின் ஒரு முக்கியமான கேந்திரமாக இருக்கையில் மைய ஆட்சிக்கும் அதன் மக்களுக்கும் ஒரு தொடர்பு இருக்க வேண்டியது மிகவும் அவசியமான நிலையில் இந்தியா தன் கல்விக் கொள்கையையும் கல்வி குறித்த தன் செயல்பாடுகளையும் உருவாக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. இந்தியாவின் புவியியல் மிகவும் வேறுபட்டது. அஸ்ஸாமில் பிரம்மபுத்ரா கரையில் இருக்கும் ஒரு கிராமத்தின் பள்ளி இயங்கும் சூழலுக்கும் ஆந்திரப் பிரதேசத்தில் ராயலசீமாவில் ஒரு பள்ளி இயங்குவதற்கும் பாரிய வேற்றுமைகள் உண்டு. இருப்பினும் இழுத்துப் பிடித்தாவது நாடு முழுதுக்கும் பொதுவான சில அம்சங்களுடன் கல்விமுறையை செயலாக்க வேண்டியிருந்தது. அதிலும் நமது கொள்கை வகுப்பாளர்கள் பலர் சோவியத் ஆதரவாளர்களாக இருந்தார்கள். சோவியத் மாதிரியே அவர்கள் மனத்துக்கு ஏற்றதாக இருந்தது என்பதும் நிதர்சனம். இந்தியாவின் கல்விக் கொள்கையை வகுப்பதிலும் செயலாக்குவதிலும் காந்தியவாதிகள் முக்கிய இடம் பெறுவதை அன்றைய மைய அரசு உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் நேரு தொழில்நுட்பத்தை மித மிஞ்சி வழிபடும் நிலையில் இருந்தார். பாரம்பர்யமான கல்வி அமைப்புகள் மீது அவருக்கு பெரும் ஒவ்வாமை இருந்தது. பெரிதாக வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் காந்திய வழிமுறைகள் மீதும் அவருக்கு அந்த ஒவ்வாமை நீடித்தது. 

இன்று இணையம் நூல்களை கணிணி மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு வந்து சேர்க்கும் காலகட்டத்தில் வாழ்கிறோம். 1950கள் எப்படி இருந்திருக்கும்? அச்சுப்புத்தகம் மட்டுமே ஒரே வழி. கிராமம் நகரம் வேறுபாட்டை சரி செய்ய வேண்டும். நாட்டின் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். தொழில்துறையில் செயல் புரியக் கூடிய திறன் வாய்ந்த தொழிலாளர்கள் தேவை. உலக அரசியல் நெருக்கடிகள். இந்த நிலையில் நம் நாட்டுக்கான ஒரு முறையை - நம் மாநிலங்களுக்கான ஒரு முறையை நாம் உருவாக்கியிருக்க வேண்டும். ராஜாஜி உருவாக்க முயன்றது அவ்வாறான ஒன்று.

ராஜாஜியின் கல்வித் திட்டம் எவ்வாறு இந்தியத் தன்மையிலானது?

1. நாளின் பெரும் பகுதியை ஒரே பணிக்குச் செலவிடும் முறை என்பது ஐரோப்பாவுக்கானது. இந்தியாவில் விவசாயிகளின் வாழ்க்கை காலைப்பொழுதில் கருக்கலிலேயே துவங்குவது. பின்னர் மாலை அந்தியில் சில பணிகளுடன் நிறைவு பெறுவது. 

ராஜாஜி பள்ளி நேரத்தை காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை என்று ஆக்கினார். அதை இரண்டு ‘’ஷிஃப்ட்’’ ஆகப் பிரித்தார். காலை 9-1 என ஒரு ஷிஃப்ட். மதியம் 1-5 என இன்னொரு ஷிஃப்ட். 

தமிழ்ச்சமூகத்தில் பெரும்பாலானோர் விவசாயிகள். இரண்டு ஷிஃப்ட் இருக்குமெனில் அவர்கள் காலையிலோ மாலையிலோ தங்கள் வாழ்க்கைக்கல்வியாக அவர்கள் பெற்றோர் மேற்கொள்ளும் தொழில்களில் அவர்களுக்கு உதவவும் கூடும்; அதன் மூலம் அவர்கள் கல்வியின் ஒரு பகுதியாக ஒரு தொழிலைக் கற்கவும் கூடும் என்ற வாய்ப்பை உருவாக்க விரும்பினார். 

ராஜாஜி காந்திய வழிமுறைகளில் நம்பிக்கை கொண்டவர் என்பதையும் காந்தியம் விவசாயம், நெசவு, தூய்மைப் பணி, தோல் பதனிடும் பணி, தையல், காகித பைண்டிங், தச்சுப்பணி என அனைத்திலும் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டது என்பதையும் இதனுடன் சேர்த்து யோசிக்க வேண்டும். 

2. எந்த காலகட்டத்திலும் ஒரு சமூகத்தின் பொருளியலில் மாற்றம் ஏற்படுத்துவதும் கல்வியில் மாற்றம் ஏற்படுத்துவதும் நேரடியான மற்றும் மறைமுகமானத் தொடர்புகளுடனே இருந்திருக்கிறது. வளைகுடா நாடுகளில் வேலை வாய்ப்பு உருவான போது கேரள மாநிலத்தவர் பலர் அங்கு சென்றனர். ஒப்பு நோக்க மகாராஷ்ட்ரா கேரளாவை விட வளைகுடாவுக்கு பக்கம். அங்கேயிருந்து சென்றவர்கள் கேரளாவை விடக் குறைவு. ஆனால் மும்பை நகருக்கும் வளைகுடா நாடுகளுக்கும் தொடர்பு அதிகம். 

3.  சமூகத்தின் எல்லா பிரிவினரும் பொருளியல் நலன்கள் பெற வேண்டும் என்று எண்ணுவதும் அதற்காகச் செயல்படுவதுமே உண்மையான சமூகநீதி. ராஜாஜி நேரு நம்பிய சோஷலிசம் இந்தியாவின் சிக்கல்களைத் தீர்க்காது என உணர்ந்து லைசன்ஸ் - பர்மிட் - கோட்டா ராஜ்யத்தை எதிர்த்து தனது சித்தாந்தத்தை முன்வைத்தார்.

மாணவர்களுக்கு சமூகக் கல்வி பெற வாய்ப்பையும் மேலும் கூடுதலான நேரத்தையும் அளித்தல், மொழிக்கல்வியையும் தொழிற்கல்வியையும் பள்ளியில் அளித்தல்,  ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமலேயே மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக்குதல், சமூகக் கல்வியும் தொழிற்கல்வியும் மொழிக்கல்வியும் உடைய மாணவர்கள் மூலம் சமூகத்தின் பொருளியல் நிலையை உயர்த்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டதே ராஜாஜியின் கல்வித் திட்டம். இன்றைக்கும் இத்தகைய முறைக்கான ஒரு தேவை இருக்கிறது என்பதே யதார்த்தம்.