Monday 13 July 2020

’’காவிரி போற்றுதும்’’ - ஒரு கடிதம்

அன்புள்ள பிரபு,

'காவிரி போற்றுதும்' போன்ற பதிவுகளை வாசிக்கையில் குற்றவுணர்ச்சியும் ஊக்கமும் ஒருசேர எழுகின்றன.

குற்றவுணர்ச்சி - இதெல்லாம் நடக்கும்போது (அதுவும் முன்னெடுப்பது நம் வயது ஆள் என்பதுவும் கூடுதல் விவரம்) 'நாமும் இது போல செய்யாமல் இருக்கிறோமே' என்ற உணர்வால்.
ஆனால் அதைவிட முக்கியம்  பெருமிதமும் ஊக்கமும் - நீங்கள் ஒரு அற்புதமான கதைசொல்லி என்பதை அந்த இடுகை எங்கே துவங்கி (தைத்ரீய உபநிஷத்) எப்படிச் சென்று, எதையெல்லாம் தொட்டு விரிந்து, விவரிக்கவேண்டியவைகளை துல்லியமாக விளக்கிச் செல்கிறது போன்ற விவரங்களில் உணரமுடிகிறது.

அந்த இடுகையில் இலக்கியம் இருக்கிறது, இது போன்ற விஷயங்களில் நம் அருமையான முன்னோடி காந்தி இருக்கிறார், இதையெல்லாம் விட மக்களுக்கு எளிதில் புரிகின்ற மொழியில், அவர்களுக்கு வரும் அனைத்து ஐயங்களுக்கும் விடையளிப்பதன் மூலம் நல்லதொரு மேலாண்மை கட்டுரையாகவும் திகழ்கிறது. குறிப்பாக, அவர்கள் வீட்டிலேயே அந்த மரக்கன்றுகளை நடலாம் என்பது நல்லதொரு உத்தி - இதனாலேயே, அதற்கு நீரூற்றுவதென்பது மக்களுக்கு ஒரு 'வேலையாக'த் தோன்றாது (நாள்தோறும் தண்ணீர் தேவைப்படும் தாவரங்களுக்கு இது மிக முக்கியம்). அதே சமயம் 'நம்ம வீட்டு மரம்' என்பதும் ஒரு நெருக்கத்தைக் கொடுக்கும்

சற்றே யோசித்தால் இவ்வளவு விரிவாக இல்லையெனினும் அனைவரும் அவரளவிற்கு ஏதேனும் செய்யவியலும் என்பது உறைத்தே இருந்தாலும், நம் சோம்பேறித்தனத்தாலும், எளிதில் சோர்வுறும் தன்மையாலும் நாம் இவற்றைத் தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கிறோம். இந்நிலையில் உங்கள் செயல் மிகவும் போற்றத்தக்கது.

உங்கள் மற்ற இடுகைகளையும் வாசித்தேன் - மிக முக்கியமான, அடிப்படையான விஷயங்களைத் தொட்டு எழுதியிருக்கிறீர்கள் (அறிவுரையளிப்பது யாருக்கு, தண்டுவடத்தின் முக்கியத்துவம் - அதனாலேயே நிமிர்ந்து அமர்வது எவ்வளவு எளிதான ஆனால் முக்கியமான ஒன்று).

அன்றைய நம் உரையாடலை யோசித்துக்கொண்டிருந்தேன்.

மால்கம் ஆதிசேஷய்யா, அவரின் பங்களிப்பு போன்ற விஷயங்களையெல்லாம் அவ்வளவு சீக்கிரம் ஒரு தொலைபேசி உரையாடலில் பேசக்கூடிய சாத்தியங்களே அருகி வரும் இக்காலங்களில் உங்களுடனான சம்பாஷணை ஒரு உற்சாகத்தை தந்தது (மேலும் இது போன்ற விஷயங்கள் ஊரடங்கில் முடங்கிக் கிடக்கும் சமயங்களில் நடப்பது கூடுதல் சந்தோஷம்).

மிக்க நன்றி பிரபு

அன்புடன்,
உலகநாதன்