Monday 20 July 2020

மரபும் தமிழ்ச் சமூகமும்

உலகில் ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு மரபு உண்டு. அது பல்வேறு காரணிகளால் உருவாகி வருவது. எந்த சமூகமும் மானுடம் மேலான நிலையை அடைய தங்களால் ஆன முயற்சிகளை முன்னெடுத்தவாறே உள்ளன. மானுடத்துக்கு உலகின் எல்லா சமூகங்களும் தங்கள் பங்களிப்பை அளித்துள்ளன. கீழைச் சமூகங்கள், மேலைச் சமூகங்கள், அராபியா, அமெரிக்கா என பல்வேறு நிலப்பகுதிகள் வரலாற்றின் எல்லா காலகட்டங்களிலும் பங்களிப்பு அளித்துள்ளன. சமயம், ஆன்மீகம், இலக்கியம் போன்ற விஷயங்கள் தவிர மருத்துவம், வணிகம், சட்டம், தொழில்நுட்பம், விவசாயம் போன்ற உலகியல் சார்ந்தவற்றிலும் கூட எல்லாருடைய பங்களிப்பும் அடங்கியுள்ளது. மானுடம் வளர்ச்சி என்னும் நிலையை நோக்கி வரலாற்றில் மிக மெதுவாகவேனும் நகர்ந்தவாறே இருக்கிறது. பெரும் போர்கள் நிகழ்ந்திருக்கலாம். தனிமனிதர்களின் ஆதிக்க ஆசை பல்லாயிரம் சாமானியர்களை சாவின் கைகளுக்கு அளித்திருக்கலாம். நினைத்துப் பார்க்க முடியாத பயங்கரங்களை மனிதர்கள் செய்திருக்கலாம். ஆனாலும் இருளில் ஏற்றப்படும் சிறு தீபமென ஓர் ஒளி வரலாற்றின் நீண்ட பாதையில் ஏற்றப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. 

வரலாறு என்பது பெரும் பிரவாகம். நாம் எண்ணும் ஓர் எளிய வரைபடமாக அது இருக்க வேண்டிய அவசியமில்லை. அதன் மர்மங்களும் முடிச்சுகளும் எப்போதும் இருக்கும். எனினும் வரலாறு ஓர் ஆசிரியனாக நமக்கு பாடம் நடத்தியவாறே இருக்கிறது. 

ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு சமூகப் பழக்கம் இருக்கிறது. ஜப்பான் கடலால் சூழப்பட்ட நாடு. ஒரு தீவு. மலைத்தொடர்களும் எரிமலைகளும் மிகுந்த நாடு. கடலலைகளும் மலையுச்சிகளும் நிறைந்திருக்கும் நாட்டின் மக்களுடைய அகம் மௌனத்தால் நிரம்பியிருக்கும். அதன் இன்னொரு உண்மையென பெரும் கொந்தளிப்பாலும் நிரம்பியிருக்கும். ஜென், ஓவியங்கள், பகோடாக்கள், தேனீர் திருவிழாக்கள் என ஒரு ஜப்பான். உலகின் பல பகுதிகளை தன் ராணுவ வல்லமையால் மானுடம் நினைத்துப் பார்க்க முடியாத கொடுமைகளைச் செய்த இன்னொரு ஜப்பான். 

கலை, அறிவியல், தொழில்நுட்பம் என பல துறைகளில் உலகிற்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை அளித்த ஐரோப்பா. காலனி ஆதிக்கத்தால் உலக நாடுகளை நூற்றாண்டுகளாகச் சுரண்டி அவற்றில் இன்று வரை நிலவும் வறுமைக்கான மூல காரணமாக விளங்கும் இன்னொரு ஐரோப்பா. 

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா அதன் எழுதப்பட்ட வரலாறு தொடங்கும் காலத்திலிருந்தே தன்னை புதுப்பித்துக் கொண்டும் மானுடத்துக்கு தனது பங்களிப்பை வழங்கியவாறும் இருந்து கொண்டே இருக்கிறது.

இந்தியாவின் சிறப்பு அதன் மரபு. மறைகள் இறைத் துதிகளிலிருந்து இறைமை, யாவும் எங்கும் நிறைந்திருக்கிறது என்னும் புரிதல் வரை நீளக் கூடியவை. சமணம் அஹிம்சையை இறைமையை உணர்வதற்கான ஒரு வாயிலாகக் காண்கிறது. சமணம் புலால் மறுத்தலை ஓர் உணவுப் பழக்கமாக மட்டும் எண்ணவில்லை. அதை கருணைக்கான ஒரு பாதையாக அமைக்கிறது. சமணம் இந்தியாவின் எல்லா சமூகங்களையும் அணுகிய போது புலால் மறுத்தலை போதித்தது. பல சமூகங்கள் வேட்டைச் சமூகங்களாக இருந்த போது புலால் மறுத்தலை தத்துவார்த்தமாக ஏற்றுக் கொண்டு வாரத்தின் சில நாட்கள் புலால் உண்ணாமல் இருக்குமாறும் வருடத்தின் சில குறிப்பிட்ட மாதங்கள் புலால் தவிர்க்குமாறும் சமணம் கேட்டுக் கொண்டது. பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னாலும் நாட்டின் வெவேறு சமூகங்கள் இந்த பழக்கத்தைப் பின்பற்றுகின்றன. அவர்கள் இப்போது சமண நெறியைப் பின்பற்றவில்லையெனினும். பௌத்தம் மனிதனின் உச்சபட்ச சாத்தியமான புத்த நிலையை எடுத்துரைத்தது. உயிர்களின் துயருக்கு மருந்தாக இருந்தது புத்தரின் சொற்கள்.

இந்தியாவில் எல்லா சமயங்களுமே அறத்தை வலியுறுத்தின. வன்முறையை தவிர்க்கக் கூறின. நீதி எங்கும் நிலை பெற விரும்பின. மருத்துவம், பயிர்த் தொழில், வானியல் ஆகியவற்றில் தங்கள் பங்களிப்பை அளித்துள்ளன.

தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக இந்த மண்ணில் உயிர்த்திருந்த சாரமான ஒரு மரபு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. மேலைச் சமூகங்களில் மத அதிகாரம் என்பது அவை உருவான கூறுகளில் முதன்மையானது. பெரும்பான்மையானதும் அதுவே. ஒரு கிராமம் நிலச் சுவான்தாருக்கு உரியது. அங்கே இருக்கும் வழிப்பாட்டு இடத்தை அவர் பேணுவார். வழிபாட்டு இடம் மதத் தலைமை அமைப்பால் நிர்வகிக்கப்படும். மன்னரின் முடியாட்சியை மதத் தலைமை பீடமே முடிவு செய்யும். இந்தியா இன்று வரையுமே எந்த ஒரு மதத் தலைமையாலும் கட்டுப்படுத்தப் பட்டதில்லை. விஜயநகர சாம்ராஜ்யம்  இந்த மண்ணின் மரபை மீட்டெடுக்க ஒரு துறவியின்  வழிகாட்டுதலால் உருவாக்கப்பட்டது. அவர்கள் மாத்வர்களை, வீர சைவர்களை, சைவர்களை, சமணர்களை ஆதரித்திருக்கிறார்கள். சமூகங்களை அமைதிப்படுத்தவும் நல்வழிக்கு இட்டுச் செல்லவுமே சமயங்கள்.

இந்தியாவின் எல்லா சமயங்களுமே இயற்கையின் ஒரு பகுதியே மனிதன் என எடுத்துரைக்கின்றன. அறமே எல்லா சமூகங்களும் பொதுவாக இருக்க முடியும் என அறுதியிடுகின்றன. தியாகத்தை மேலான விழுமியமாக முன்வைக்கின்றன.

அவை வெவ்வேறு விதமான பழக்கங்களாக இங்கே பதிந்து போய் உள்ளன. அந்த பல்லாயிரம் ஆண்டு விருட்சம் எப்போதும் உயிர்ப்புடன் திகழ வேண்டும்.