Saturday 29 August 2020

விவசாயக் கல்வி

 இந்திய விவசாயத்தைப் புரிந்து கொள்ள நாம் வரலாறு, புவியியல், வானியல், சமயம், மானுடவியல், உயிரியல், கால்நடை அறிவியல், பொருளாதாரம், வணிகம், சமூகவியல் என பல்வேறு அறிவுத்துறைகளை அறிந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டு விவசாயம் கூட எளிய வரையறைகளுக்குள் உட்படும் ஒன்றல்ல. இந்த முரண்பாடான தன்மையே தமிழ் வாழ்க்கையின் பல்வேறு கூறுகளைத் தீர்மானிக்கிறது. 

நான் எப்போதுமே பத்தொன்பதாம் நூற்றாண்டின் தாது வருஷப் பஞ்சத்தை தமிழ் சமூக மனத்தைக் கட்டமைத்த கூறுகளில் முக்கியமானதாக எண்ணுவதுண்டு. கிட்டத்தட்ட 40 லட்சம் மக்கள் உயிரிழந்த மானுடத் துயர் அது. பிரிட்டிஷ் அரசாங்கமே அதற்கு முழுப் பொறுப்பு. 

தமிழ்நாட்டின் பாரம்பர்யமான நெல் வகைகளை பின்னுக்குத் தள்ளி புதிய ரகங்கள் வந்தன. அவற்றை சமூகவியல், பொருளியல் நோக்கில் ஆய்வு செய்து மதிப்பிடும் அளவீடுகள் தமிழ்ச் சமூகத்திடம் இல்லை. நீர் மேலாண்மையில் இயந்திரங்களை விட மனித உழைப்பை அதிக அளவில் ஈடுபடுத்தும் பழக்கம் பெரிய அளவில் குறைய ஆரம்பித்து இன்று அனேகமாக இல்லாமலேயே போய்விட்டது. கால்நடைகளின் சாணம் மண்ணை வளப்படுத்தும் உரமாக பயன்படுவது இல்லாமல் ஆனது. ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மாடுகளால் நாட்டு மாட்டு இனங்கள் அழிவின் விளிம்பிற்குச் சென்றன. இவை அனைத்தையும் விட பெரிய இழப்பு விவசாயம் குறித்த பாரம்பர்ய அறிவை விவசாயிகள் இழந்துள்ளனர்.

இந்திய சுதந்திரத்துக்குப் பின், அதுவரை வேளாண்மை செய்யப்படாத நிலப்பரப்புகள், செயற்கை ரசாயன உரங்களின் துணையோடு விளைநிலம் ஆயின. இன்று, உர நிறுவனங்கள் ஒரு ஏக்கர் நிலத்தில் கொட்டப்படும் உரத்தால் அடையும் லாபத்தை ஒரு ஏக்கர் விளைச்சல் நிகர லாபமாக விவசாயி பெற்று விட முடியாது என்பதே யதார்த்தம். 

பாரம்பர்யமான விவசாய முறைகள் மீண்டும் பலவிதங்களில் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.