Friday 11 September 2020

ஆசான்

 

கவியுள்ளம் என்பது நுண்ணிய அரிதான மெல்லிய உணர்வுகளால் ஆனதாக இருக்கிறது. கோடானுகோடி மண் துகள்களில் ஒளி விடும் ஒரு பொன் துகளென அரிதான வாழ்க்கைத் தருணம் ஒன்றை கண்டு கொள்ளும் விழிகள் கவிஞனுக்கு அமைகிறது. அவன் அழகை ஆராதிப்பவனாக இருக்கிறான். விழுமியம் ஒன்றின் வெளிப்பாடு கண்டு உணர்ச்சி மேலிட்டு கண்ணீர் சிந்துபவனாகிறான். அநீதிக்கு எதிராக அறச்சீற்றத்துடன் முதல் குரல் எழுப்புபவனாகிறான். ஒரு தருணத்தில் வாழ்க்கையின் ஈவிரக்கமற்ற இயங்குமுறையை அச்சமின்றி அறிஞனாக எதிர்கொள்கிறான். ஞானியர் அடையும் மௌனத்தையும் உணர்ந்தவனாகிறான்.

கவிதை எழுதப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை கவிதையும் கவிஞனும் உருவாக்கும் வியப்பும் வெளிப்படுத்தும் புதுமையும் இன்னதென்றும் இவ்வாறென்றும் வகுக்கவோ கூறவோ இயலாதது. கவிதை பல காலடிகள் பட்டிடாத ஒரு மர்மப் பிராந்தியமாகவே நீடிக்கிறது.

என்னுடைய சிறு வயதிலிருந்தே திருக்குறளை வாசித்திருக்கிறேன். அப்போதே திருவள்ளுவர் ஆச்சர்யம் அளிக்கக் கூடிய ஒருவராகவே இருந்திருக்கிறார். திருக்குறள் வாசிக்கும் எவருமே வள்ளுவரின் மேதமையையும் படைப்பூக்கத்தையும் பலமுறை நேருக்கு நேராகக் காணும் அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள்.

ஆசிரியர்கள் பல வகையினர். சிறந்த ஆசிரியன் மிகப் பெரிய விஷயத்தை கற்றலின் ஆரம்ப படிநிலையில் இருக்கும் மாணவனைக் கூட ஆர்வத்துடன் தனது பிரும்மாண்டமான ஞானத்தின் வெள்ளத்தில் மாணவன் மீதான கருணையின் ஓடத்தில் பயணிக்கச் செய்பவராக இருக்கிறார். அந்த வெள்ளத்தில் சொந்த முயற்சியில் நீந்திக் கரை காணும் மாணவர்கள் உண்டு. ஓடத்தில் பயணிப்பவர்கள் உண்டு. பெரும் நாவாய்களை அதில் இயக்கியவர்கள் உண்டு. உள்ளத் தனையது உயர்வு.

பள்ளிப்பாடங்களில் திருக்குறள் படித்து, அம்மாவிடம் மனப்பாடம் செய்து ஒப்புவித்து, தேர்வுகளில் ‘’விசும்பின்’’ எனத் துவங்கும் குறளையும் ‘’தரும்’’ என முடியும் குறளையும் சரியாக எழுதி மதிப்பெண் பெற்று, இப்போது கவிதைகள் எழுதிக் கொண்டு கவிதைத் தொகுப்பு கொண்டு வரலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டம் வரையும் திருவள்ளுவர் வசீகரிக்கக் கூடியவராக இருக்கிறார்.

இப்போதும் எண்ணிப் பார்ப்பதுண்டு. ஒரு வாழ்க்கையில் எப்படி இத்தனை அனுபவங்கள். இத்தனை ஞானம். வள்ளுவரிடம் இந்த கேள்வியைக் கேட்கும் தோறும் அவர் புன்னகைக்கிறார். கங்கை ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு கைப்பிடி அள்ளிக் குடித்து தாகம் தணிந்தவர்கள் உண்டு. பல கைப்பிடிகள் அள்ளிக் குடித்து தாகத்தைத் தணித்துக் கொண்டவர்கள் உண்டு. தாகமும் கங்கையும் எப்போதும் இருக்கும். அவரவர் அவரவர் வழியில் தாகம் தணிப்பர்.

இளம் வயதில் ஒரு வணிகனாக திருவள்ளுவரை நான் மிகவும் நெருங்கினேன்.

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று

உண்டாகச் செய்வான் வினை. (பொருள் செயல்வகை)

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்ல தில்லை பொருள் (பொருள் செயல்வகை)

ஒரு வணிகன் இதன் பொருளை எத்தனை அணுக்கமாக அறிந்திருப்பான்.

வர இருக்கும் பொருளை நம்பி ஒரு வணிகச் செயலைத் துவக்குவது எத்தனை ஆபத்தானது என்பதை வணிகர்கள் அறிவார்கள். எதிர்பாராத இடையூறுகள் வரும். தொழிலில் சகஜமாக உறவைப் பேணியவர்கள் வேறு குரலில் பேசத் துவங்குவார்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு குறையலாம். எதிர்பாராத ஏதேனும் திடீரென முளைத்து வரலாம். எதிராளியிடம் ஒன்றை எதிர்பார்த்து செயல் செய்வது என்பது உண்மையில் சண்டையிடும் இரண்டு யானைகளுக்கு அருகில் நின்று சண்டையைப் பார்ப்பது போன்றதே. நம் கையில் இருக்கும் பொருள் இருக்கும் போது செயல் புரிந்தால் அனைத்தும் நம் கட்டுப்பாட்டில் இருக்கும். கட்டுப்பாட்டை மீறும் எவற்றையும் சீரமைக்க மாற்றியமைக்க முடியும். நினைப்பதை நடத்திக் கொள்ள முடியும். கையில் பொருள் இல்லாமல் வினை ஆற்றுவது யானைகளுக்கு அருகிலிருந்து யானைச்சண்டையைப் பார்ப்பது. கையில் இருக்கும் பொருளுடன் வினை ஆற்றுவது என்பது குன்றின் மேல் நின்று அபாய உணர்வின்றி யானைச் சண்டையை அவதானிப்பது. ஒரு வணிகனிடம் சொல்ல வேண்டியதை எப்படி இவ்வளவு நுட்பமாக வள்ளுவர் சொன்னார்?

எனக்கு மிகவும் நெருக்கமான குறள்களில் ஒன்று.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து. (வினைத்திட்பம்)

அளவினாலோ அனுபவத்தினாலோ சிறியதாக இருந்தாலும் மிக முக்கியமான பணியை எவராலும் ஆற்ற முடியும் என்ற நம்பிக்கையை இந்த திருக்குறள் வழங்கியது. அளவில் பெரிய தேரில் மிக அவசியமான பணியை அச்சாணி ஆற்றுகிறது. உலகில் எதையும் பெரிது சிறிது என வகைப்படுத்திக் கொள்வது பகுதி அறிதலே. முழுமையான அறிதலும் புரிதலும் அனைத்தையும் உள்ளடிக்கியதாகவே இருக்கும்.

முயற்சியின் சிறப்பைக் கூறும்

கான முயலெய்த அம்பினில் யானைபிழைத்த

வேல் ஏந்தல் இனிது

என்ற திருக்குறளை எனது ஒவ்வொரு முயற்சிகளிலும் எண்ணிக் கொள்வது உண்டு.

ஆசான் அருகமர்ந்து மேலும் கற்பதற்கான விருப்பம் கூடிக் கொண்டே இருக்கிறது. திருவள்ளுவர் இனிமையாகக் கற்பிப்பவர். இனிதாகக் கற்பிக்கும் ஆசான் வாய்ப்பது ஓர் நல்லூழ்.