Saturday, 12 September 2020

உண்ணா நோன்பு

சஷ்டி விரதம் இருந்த அனுபவம் எனக்கு உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்னால். ஆறு நாட்கள். ஆறு நாட்களும் தண்ணீர் மட்டுமே அருந்தினேன். வேறு எவ்வகையான திட உணவோ திரவ உணவோ அருந்தவில்லை. அதன் பின்னர் மேலும் ஒருமுறை முயன்றேன்.

எனது மன அமைப்புக்கு உண்ணா நோன்புகள் மேற்கொள்வது கடினம். அதனை நான் அறிவேன்.

அடுத்த சில நாட்கள் உண்ணா நோன்பிருக்க எண்ணியுள்ளேன்.

தண்ணீர் மட்டுமே அருந்துவது. வேறு எந்த உணவும் உடலுக்கு அளிப்பதில்லை.

நமது வாழ்க்கைமுறை நமது தேவையைத் தாண்டிய உபரியை நம் முன் குவிக்கிறது. நமக்குத் தேவையானதைத் தேர்வதில் நாம் மிகுந்த எச்சரிக்கை கொள்ள வேண்டியிருக்கிறது.

பால் நம் உடலுக்கு மிகவும் கடினமான உணவு. மனிதக் குடல் பாலைச் செரிக்க மிகவும் சிரமப்படும். பால், தேனீர், காஃபி ஆகியவை நாம் தவிர்க்க வேண்டியவை. எண்ணெய் மிகக் குறைவாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். பச்சைக் காய்கறிகள், பழங்கள், முளை கட்டிய தானியங்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் பயன்படுத்துவது உடலுக்கு நல்லது. அதனைச் செயல்படுத்துவது மிகவும் கடினமானது.

நாம் பழக்கத்தின் அடிப்படையிலேயே நம் உணவுப் பழக்கத்தை மேற்கொள்கிறோம். நமது உடல் உழைப்பு சார்ந்த பணிகளும் பழக்கத்தை அடிப்படையாய்க் கொண்டவையே.

இந்திய மரபு வாழ்க்கையை ஒரு வளையம் அல்லது சுழற்சி என்கிறது. அதிலிருந்து வெளியேறுவதற்கான வழி அதனுள்ளேயே இருக்கிறது என்பதையும் நம் மரபு சொல்கிறது. நோன்புகள் அதற்கான வழிகள். நாம் விரும்பும் நிலைக்கு நம்மை இட்டுச் செல்லும் மார்க்கங்கள்.

இம்முறை மேற்கொள்ளும் உண்ணா நோன்பை உடல் இயக்கத்தை மன இயக்கத்தை உற்று நோக்குவதற்கான ஒரு வழிமுறையாகப் பயன்படுத்தலாம் என இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கைமுறையில் ஆக்கபூர்வமான சில மாற்றங்களைக் கொண்டு வரவும் இதனைப் பயன்படுத்த விரும்புகிறேன்.

இந்தியாவில் சமணர்கள் உண்ணா நோன்பின் முன்னோடிகள். மகாத்மா உண்ணா நோன்பை மிக முக்கியமான வாழ்க்கைச் சாதனமாகக் கையாண்டார்.