Wednesday 23 September 2020

ஜனனி ஜன்மபூமி

 சத்சங்கம் என்னும் செயல்பாடு இந்தியாவில் தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது. இந்திய கிராமங்கள் முற்றிலும் சத்சங்கங்களாக செயல்பட்டிருக்கின்றன. பயணிகளுக்கு உணவளிக்கும் அன்ன சத்திரம் அமைத்தல், கல்விச்சாலைகளை நிறுவுதல், குடிநீர்க் கிணறு வெட்டுதல், விவசாயத்துக்கு உதவும் ஆவினங்களை பராமரித்தல், தண்ணீர்ப் பந்தல் அமைத்தல் என பல்வேறு செயல்பாடுகள் குமரியிலிருந்து காஷ்மீரம் வரை நிகழ்ந்திருக்கின்றன. நிகழ்கின்றன. இணைந்து ஆற்றப்படும் ஒரு நற்செயல் நாம் அறியாமலேயே நம்மை பல்வேறு விதமான தளைகளிலிருந்து விடுவிக்கிறது. யோகம் என்பது யாவும் ஒன்றாய் இருப்பதை உணரும் நிலையே. 

இன்று ஒரு சத்சங்கம் குறித்து யோசித்தேன். 

பிறந்தநாளைக் கொண்டாடுவது இப்போது பெரிய அளவில் நடக்கிறது. ஒருவரின் பிறந்தநாளை ஒரு நல்நிமித்தமாகக் கொண்டு அன்றைய தினத்தில் சில நற்செயல்களை முன்னெடுக்க இந்த சத்சங்கத்தின் மூலம் முயலலாம் எனத் திட்டமிட்டேன். 

இதில் குறைந்தபட்சம் 365 உறுப்பினர்கள் இணைக்கப்படுவார்கள். அனைவருக்கும் எளிதான ஒரு தொடர்பு வலைக்குள் அவர்கள் கொண்டு வரப்படுவார்கள்.  வருடத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்குப் பிறந்த நாள் எனக் கொள்வோம். சத்சங்கம் சார்பாக ஒவ்வொரு நாளும் கீழ்க்காணும் செயல்கள் நடக்கும். 

1. பிறந்தநாள் கொண்டாடுபவருக்கு அன்று காலை சத்சங்கம் சார்பாக வாழ்த்து தெரிவிக்கப்படும். இரண்டு நாட்கள் முன்னதாகவே அவருடைய பிறந்தநாள் நெருங்குவது சத்சங்க உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்படும். 

2. ஒவ்வொரு தினமும் இராமாயணத்திலிருந்து ஒரு சுலோகம் சத்சங்கத்தில் வெளியிடப்படும். இராமாயணம், பாகவதம், பகவத் கீதை, தேவாரம், பிரபந்தம், திருவாசகம் என ஒரு பாடல் அல்லது சுலோகம் வெளியிடலாம். 

3. அன்றைய தினத்தில் பிறந்த தேசத் தலைவர்களின் பிறந்த நாள் பகிரப்படும். 

4. தினமும் வறியவர் ஒருவருக்கு குறைந்தபட்சம் ஒருவேளை உணவு வழங்கப்படும். 

5. நாட்டுப் பசுமாடு ஒன்றுக்கு இரண்டு கட்டு கீரை வழங்கப்படும். 

6. காக்கை குருவிகளுக்கு தினமும் தானியங்கள் வழங்கப்படும். 

7. திருக்குளத்தின் மீன்களுக்கு ஒரு கைப்பிடி அவல் போடப்படும்.

8. ஆலயம் ஒன்றில் ஒரு தீபம் ஏற்றப்படும். 

9. பொது இடத்திலோ அல்லது ஒரு விவசாயின் தோட்டத்திலோ நெல்லி, கொய்யா, பலா, மா என ஏதேனும் ஒரு மரக்கன்று வழங்கப்படும். 

உறுப்பினர் சத்சங்கத்தில் இணைத்துக் கொள்ள ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்) நன்கொடையாக அளிக்க வேண்டும். தினம் ஒருவரின் பிறந்தநாள் எனக் கொண்டால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் தினமாகிறது. அவரது நன்கொடை அன்றைய தினத்தில் மேலே குறிப்பிட்ட நற்செயல்கள் மூலம் அவரது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக அமையும். அவரது நன்கொடை மூலம் அவரது பிறந்தநாளில் ஒரு மரம் நடப்படுகிறது. ஆலயம் ஒன்றில் தீபம் ஏற்றப்படுகிறது. மீன்களும் காக்கை குருவிகளும் ஆவினமும் உணவு பெறுகிறது. வறியவர் ஒருவர் ஒருவேளை உணவு பெறுகிறார். 

பசியை வேள்வித்தீ என்றும் அதில் இடப்படும் உணவை அவி என்றும் அன்னமளித்தலை ஒரு வேள்வி என்றும் கூறுகிறது இந்திய மரபு. ஒருவரின் பிறந்த தினத்தில் பல உயிர்களுக்கு உணவளிக்கும் நிறைவான செயல் மேற்கொள்ளப்படுகிறது. 

365 உறுப்பினர்களில் 7 நபர்கள் சத்சங்கத்தின் செயல்பாடுகளை ஆற்றுவர். ஒருவர் வருடம் முழுதும் தினமும் சென்று ஆலயத்தில் தீபம் ஏற்றுவார். அது அவர் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் விநாயகர் கோவிலாக இருக்கலாம். ஒரு கிராமக் கோவிலாக இருக்கலாம். ஒரு தொன்மையான ஆலயமாக இருக்கலாம். இன்னொரு நபர் தன்னுடைய வீட்டில் உணவு தயாரித்துக் கொடுப்பார். அதனை ஒருவர் எடுத்துச் சென்று வறியவர் ஒருவருக்கு வழங்குவார். பசு மாட்டுக்கு உணவளிப்பதை ஒருவர் செய்வார். பட்சிகளுக்கு உணவளிப்பதை இன்னொருவர் செய்வார். மரக்கன்றை ஒருவர் வழங்குவார். சத்சங்கத்தின் மின்னணுத் தளத்தை ஒருவர் மேற்பார்வை செய்வார். ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் ஒருவர் ஒருங்கிணைப்பார். 

கூடுதலாக, செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் பண்டிகை தினங்கள் ஆகியவற்றில் உறுப்பினர்கள் சிலரோ பலரோ கந்த சஷ்டி கவசம், கோளறு பதிகம், திருப்பாவை, லலிதா சஹஸ்ர நாமம் ஆகியவை பாராயணம் செய்தால் அத்தகவல் அன்றைய தினம் பிறந்தநாள் கொண்டாடுபவருக்குத் தெரிவிக்கப்படும். 

ரூ. 100 என்பது இன்றைய தேதியில் எளிய தொகையே. எனினும் உறுதியும் அர்ப்பணிப்பும் அதனுடன் இணையும் போது அது பல நற்செயல்களை நல்விளைவுகளை உண்டாக்குகிறது. 

ரூ.100 பிரிக்கப்படும் விதம்:

உணவு - ரூ.60

பசுவுக்கான கீரை - ரூ.10

பறவைகளுக்கான தானியம் - ரூ.10

மீனுக்கான பொரி - ரூ. 10

மரக்கன்று - ரூ. 5

தீபம் ஏற்றுதல் - ரூ. 5


தினமும் உணவு தயாரிக்க சத்சங்கம் மூலம் ஏற்பாடு செய்யப்படும். உணவு விலைக்கு வாங்கப்படாது.

இந்த சத்சங்கத்துக்கு ’’ஜனனி ஜன்மபூமி’’ எனப் பெயரிடலாம் என இருக்கிறேன். இவ்வாறு இராமாயணத்தில் இராமன் கூறுகிறார். இதனை பாரதி ‘’பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்’’ எனக் குறிப்பிடுகிறார்.

நண்பர்களுடன் பேசியுள்ளேன். ஆர்வமாயிருக்கின்றனர். 

நண்பர்களுடன் விவாதித்த போது அவர்கள் ஒரு வினாவை எழுப்பினர். 365 நபர்களின் பிறந்த நாள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாளாக இருக்குமா? ஒரே பிறந்தநாள் கொண்ட பலர் இருப்பார்களே என்றனர். சத்சங்கத்தின் குறைந்தபட்ச எண்ணிக்கை மட்டுமே 365. உறுப்பினர் எண்ணிக்கையை அதிகமானால் ஆண்டின் நாள் ஒவ்வொன்றுக்கும் ஒருவர் என்ற வீதம் வரும் என்று பதில் சொன்னேன். முயற்சித்து அவ்வாறு செய்து கொள்ளலாம் என்று சொன்னேன். ஒரே நாளில் நான்கு பேரின் பிறந்தநாள் வந்தால் நான்கு மரக்கன்று நடலாம்; நால்வருக்கு உணவளிக்கலாம். ஆவின் உணவை அதிகமாக்கலாம்.

இந்த செயல்பாடு குறித்து மேலும் ஏதேனும் ஆலோசனைகளை வழங்க விரும்புபவர்கள் ulagelam(at)gmail(dot)com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு  கேட்டுக் கொள்கிறேன்.