Wednesday 28 October 2020

ஆசான் சொல் - 5

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும். (479)

உலகியல் விஷயங்கள் பலர் தொடர்புடையவை. பலரது எண்ணங்களும் சமூகப் பழக்கங்களும் இணைந்தவை. சமூகப் பழக்கங்கள் என்பவை பன்னெடுங்காலமாக உருவாகி வந்திருப்பவை. உலகியலில் ஒருவர் செய்யும் செயல் மற்றவர்களால் எவ்வாறு உள்வாங்கப்படுகிறது என்பது மிகக் குறைந்த சதவீதமேனும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது. 

இந்த திருக்குறளில் வள்ளுவர் ஒரு வணிகனிடம் பேச வேண்டியதைப் பேசுகிறார். 

ஒரு வணிகன் தன் வணிகத்தைக் கணக்கிட்டே செய்வான். எனினும் அதனால் ஈட்டும் செல்வத்தை அவன் எவ்விதம் தனக்கும் தன் குடும்பத்துக்கும் மற்றவர்களுக்கும் செலவழிக்கிறான் என்பதைப் பொறுத்தே அவன் நிலை பெறுவது இருக்கும். வணிகத்தைப் போலவே குடும்பச் செலவையும் அவன் கறாராக மதிப்பிட்டு செய்தால் குடும்ப உறுப்பினர்கள் அதிருப்தி அடைவார்கள். பொருள் ஈட்டுவதற்கு தேவைப்படும் உழைப்பைப் போலவே அதனை எவ்விதமாக தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதிலும் வணிகனுக்கு கவனம் தேவை. 

இது வணிகர்களுக்கு மட்டும் உரியது அல்ல. அனைவருக்குமானது. எனினும் வள்ளுவர் சிறு பகடியுடன் ‘’அளவறிந்து’’ என்கிறார். பொருட்களை அளந்து நிறுத்து விற்பதில் வணிகர்களின் அணுக்கத்தை உணர்ந்தே இவ்வாறு கூறுகிறார். 

செல்வம் ஈட்டியவர்களை முகஸ்துதி செய்பவர்கள் சூழ்வார்கள். அவர்கள் சொல்லும் சொற்கள் அவன் ஆணவத்தை திருப்தி செய்யும். அதற்காக அவன் செலவழிக்கத் தொடங்குவான். இல்லாத தகுதிகள் தனக்கு இருப்பதாக எண்ண ஆரம்பிப்பான். அத்தகைய எண்ணம் ஏற்பட்டதுமே உடன் இருப்பவர்களிடம் துச்சமாக நடக்கத் தொடங்குவான். புகழ்பவர்களை பக்கத்தில் வைத்துக் கொள்வான். அவனது சரிவு அங்கிருந்து தொடங்கும். பெரும் வீழ்ச்சி நிகழும். 

இந்த திருக்குற்ளில் ’’உளபோல இல்லாகித் தோன்றா’’ என்கிறார். இருப்பது போலவும் இருக்கும்; இல்லாமல் ஆகும்; நினைத்தது நடக்காமல் நினைக்காதது நடக்கும். 

பொருள் ஈட்டுதலில் எவ்வளவு அக்கறை காட்டப்படுகிறதோ அதே அளவு அக்கறை அதனை தக்கவைத்துக் கொள்வதிலும் செலவழித்தலிலும் காட்டப்பட வேண்டும்.