Thursday 15 October 2020

சாகர் மாதா

 எனக்கு மகத்தான செயல்களைச் செய்பவர்கள் மீது பெரும் மதிப்பும் பேரார்வமும் உண்டு. லௌகிகம் மனிதர்களில் பெரும்பாலானோருக்கு வாய்ப்புகளையும் வசதிகளையும் அளிப்பதே. எனினும் லௌகிகத்தின் சௌகர்யங்களுக்குள் மட்டும்  தங்களின் வாழ்வைக்  குறுக்கிக் கொள்ளாமல்- அதன்  எல்லைகளை மனிதர்களில் சிலர் எப்போதும் மீறிப் பார்த்த வண்ணமே இருக்கிறார்கள். சக மனிதர்களுக்கு மேலான சாத்தியங்களை அவர்கள் தங்கள் வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவாறு இருக்கிறார்கள்.

இன்று எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப் பெண்ணான பச்சேந்திரி பால் அவர்களின் சுயசரிதையை வாசித்தேன். 


இமயமலையின் மலைக்கிராமம் ஒன்றில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தை பச்சேந்திரி பால். வருடத்தின் ஆறு மாதம் பனி நிரம்பியிருக்கும் அப்பிரதேசத்தின் வாழ்க்கை அப்பகுதி மக்களை கோடைக்காலத்தில் மலையின் மேல் இருக்கும் ஒரு ஊரிலும் குளிர் காலத்தில் மலைக்குக் கீழ் இருக்கும் ஒரு ஊரிலும் வாழ்வதற்கான தேவையை உருவாக்குகிறது. ஆடு மேய்த்தல் மற்றும் விவசாயமே தொழில். ஐந்து குழந்தைகள் உள்ள குடும்பத்தில் மூன்றாவதாகப் பிறக்கிறார் பச்சேந்திரி பால். 

சின்ன வயதிலிருந்தே சுட்டிப் பெண். அபாயங்களை எதிர்கொள்ளும் சாகசம் நாடும் மனம் என்பது அவருக்கு இயல்பிலேயே இருக்கிறது. அத்துடன் எந்த இடரையும் நேர்கொண்டு எதிர்கொள்ளும் மன உறுதியை அவர் தன் சூழலிலிருந்து பெறுகிறார். 

மலைக்குன்றுகளில் அலைந்து திரிகிறார். ஒருமுறை பனிக்காலத்தில் குன்றின் உச்சி ஒன்றிலிருந்து கீழே விழுந்து முகமெல்லாம் நீலம் பாரித்து விடுகிறது. அபாயமான நிலையில் தந்தையால் காப்பாற்றப்படுகிறார். வசதி குறைவான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தையல் கற்றுக் கொண்டு தினமும் ஒரு சல்வார் கம்மீஸ் தைத்துக் கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை தனது தந்தைக்கு அளித்து அவரது வருவாயுடன் அதனைச் சேர்த்து குடும்பத்தின் நிலையை உயர்த்துகிறார். குடும்பத்தின் மற்ற குழந்தைகளின் படிப்புக்கு உதவுகிறார். 

பள்ளிப்படிப்பில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுகிறார். மருத்துவம் பயில விரும்புகிறார். ஒரு சில மதிப்பெண்கள் குறைவாக இருப்பதால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. கலைப்பாடத்தைத் தேர்ந்தெடுக்கிறார். சமஸ்கிருத மொழியில் இளங்கலை பட்டம் பெறுகிறார். அவர் சமஸ்கிருதம் பயில விரும்பியமைக்கான காரணமாகச் சொல்வது : சமஸ்கிருதம் பயில்வதன் மூலம் இமயத்தை மேலும் நெருங்கி அறிய முடியும் என்பதை. காளிதாசரின் குமார சம்பவமும் மேகதூதமும் பயில்வதற்காகவே சமஸ்கிருதத்தைத் தேர்ந்தெடுத்ததாகச் சொல்கிறார். 

பள்ளி கல்லூரிகளில் விளையாட்டுப் போட்டிகள் அனைத்திலும் கலந்து கொண்டு முதன்மை பெறுகிறார். மலை ஏறும் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டு மலை ஏற்றத்துக்கான பயிற்சியில் ஈடுபடத் துவங்குகிறார். அவரது பயிற்றுனர்கள் அவரைப் பார்த்ததுமே அவர் ‘’எவரெஸ்ட் வாலா’’ என்கின்றனர். அவரால் நம்ப முடியவில்லை. 

‘’பாகீரதியின் ஏழு சகோதரிகள்’’ என ஏழு பெண்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு ஏழு பெண்களுக்கு மலை ஏறும் பயிற்சி அளிக்கப்படுகின்றது. அதில் ஒவ்வொருவரின் திறனும் மதிப்பிடப்பட்டு எவரெஸ்டு ஏற்றத்துக்கு பச்சேந்திரி தேர்ந்தெடுக்கப்படுகிறார். 

எவரெஸ்டு ஏற தினசரி பயிற்சி என்பது சில மாதங்களுக்கு தினமும் 500மீ உயரம் உடைய ஒரு குன்றில் ஏறி இறங்க வேண்டும். மேலும் தினமும் 10 கி.மீ ஓட வேண்டும். 

உயரம் குறைவான சிகரம் ஒன்றில் இவர்களின் பயிற்சிக் குழு ஏறி பயிற்சி எடுக்கிறது. மற்றவர்கள் விரைவாக முன்னேறுகின்றனர். இவர் சீரான வேகத்தில் மிகச் சரியாக காலடிகளை வைத்து நடக்கிறார். பயிற்றுனர் இதுதான் எவரெஸ்டு நடை. இதனையே பச்சேந்திரியிடமிருந்து மற்றவர்கள் பயில வேண்டும் என்கிறார். 

காளையின் நடை மெல்ல இருக்கும். ஆனால் உறுதியானதாக இருக்கும். பெருந்தூரத்தை அதனால் தன் ஆற்றலை மிகச் சரியான சமமான அளவில் செலவிட்டு அடைய முடியும். ரிஷப நடை என்பார்கள். 

எவரெஸ்டு ஏறும் போது பனிச்சரிவு நேரிட்டு இவரது கூடாரத்தின் பெரும் பகுதி பனியில் புதைகிறது. பக்கத்துக் கூடாரத்தில் இருந்தவர் தனது ஸ்விஸ் கத்தியால் பச்சேந்திரியின் கூடாரத்தைக் கிழித்து அவரைக் காப்பாற்றுகிறார். தான் வணங்கும் துர்க்கையும் அனுமனுமே தன்னைக் காத்ததாகக் கூறுகிறார் பச்சேந்திரி. 

எவரெஸ்டை முதல் முறையாகப் பார்க்கும் போது ‘’சாகர் மாதா’’ என உணர்ச்சி மேலிட்டு அழுது மண்ணில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார். இமயப் பிராந்தியத்தில் இருப்பவர்கள் எவரெஸ்டு சிகரத்தை சாகர் மாதா என்பார்கள். 

பல நாள் கனவு நனவாகிறது. சிகரத்தின் உச்சியில் சென்று நிற்கிறார் சாகர் மாதாவின் குழந்தையான பச்சேந்திரி இந்தியப் பெண்களின் பிரதிநிதியாக. 


1984ம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்தது. 


2019ம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருது அளித்தது. 

***

எவரெஸ்ட் : எனது உச்சி யாத்திரை, பச்சேந்திரி பால், தமிழில் : தம்பி சீனிவாசன், நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு. விலை ரூ.14/-