Friday 9 October 2020

வீடணன் அடைக்கலப் படலம்

 
ஆயவன் வளர்த்த தன் தாதை ஆகத்தை

மாயவன் பிளந்திட மகிழ்ந்த மைந்தனும்

ஏயும் நம் பகைவனுக்கு இனிய நண்பு செய்

நீயுமே நிகர்; பிறர் நிகர்க்க நேர்வரோ (6494)


தனது தந்தையின் உடலை (ஆகம்) (அகம் – உள்ளம், ஆகம் – உடல்) மாயவன் பிளந்திட மகிழ்ந்திட்ட பிரகலாதனும் எனது பகைவனைக்கு அன்பு செய்யும் நீயும் சமம். என் அழிவை விரும்பும் எவரும் உனக்கு நிகரானவர்கள் இல்லை.

சினத்துடன் இராவணன் கூறினாலும் வீடணன் பிரகலாதன் நிலைக்கு ஒப்பானவன் என்பதை கம்பன் இராவணன் கூற்று மூலமே வெளிப்படுத்துகிறார்.

வீடணன் இன்னும் இராமனைச் சந்திக்கவில்லை.

இராவணனுக்கே புரிந்தது இராமனுக்கு எளிதில் புரியும் என்பது உப- பிரதி.

 

நண்ணினை மனிதரை; நண்பு பூண்டனை;

எண்ணினை செய்வினை; என்னை வெல்லுமாறு

உன்னினை; அரசின்மேல் ஆசை ஊன்றினை;

திண்ணிது உன் செயல்; பிறர் செறுநர் வேண்டுமோ? (6497)

 

நீ ஒரு மனிதனுக்குச் சார்பாக இருக்கின்றாய். அவனுடன் நட்புணர்வு கொள்கிறாய். உனக்கு அரச பதவி மீது ஆசை வந்து விட்டது.

 

பழியினை உணர்ந்து யான் படுக்கிலேன் உனை;

ஒழி சில புகலுதல் : ஒல்லை நீங்குதி;

விழி எதிர் நிற்றியேல் விளிதிஎன்றனன்

அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான் (6500)


சகோதரனை அழித்த பழி எனக்கு வேண்டாம் என்பதால் உன்னை உயிருடன் விடுகிறேன். என் கண் முன் நிற்காமல் நீங்கிச் செல்.

அழிவை அடைய இருப்பவன் அறிவிலிருந்து நீங்கி இருக்கிறான்.

அழிவை அடையப் போகும் இராவணன் வீடணனை நீங்கச் சொல்கிறான்.

 

அனலனும் அனிலனும் அரன் சம்பாதியும்

வினையவர் நால்வரும் விரைவின் வந்தனர்;

கனைகழல் காலினர் கருமச் சூழ்ச்சியர்

இனைவரும் வீடணனோடும் ஏயினார். (6505)

 

வீடணனின் நம்பிக்கைக்குரியவர்களான அனலன், அனிலன், அரன், சம்பாதி நால்வரும் வீடணனுடன் இலங்கையை நீங்கிச் சென்றனர்.

 

மாட்சியின் அமைந்தது வேறு மற்று இலை;

தாட்சி இல் பொருள்தரும் தரும மூர்த்தியைக்

காட்சியே இனிக் கடன்என்று கல்வி சால்

சூட்சியின் கிழவரும் துணிந்து சொல்லினார். (6510)

 

அறத்தின் வடிவான ஸ்ரீராமனை நாம் காண்போம் என்றனர்.

 

முன்புறக் கண்டிலேன்; கேள்வி முன்பு இலேன்;

அன்பு உறக் காரணம் அறிய கிற்றிலேன்;

என்பு உறக் குளிரும்; நெஞ்சு உருகுமேல் அவன்

புன்புறப் பிறவியின் பகைஞன் போலுமால். (6512)

 

நான் ஸ்ரீராமனை இதற்கு முன்பு கண்டதில்லை. கேள்விப்பட்டதில்லை. எனினும் என் அகம் அவர் மேல் அன்பு கொள்கிறது. என் உடல் உருகும் வண்ணம் அவர் நினைவு இருக்கிறது. பிறப்பு இறப்பு என்னும் சுழல் கொண்ட பிறவியை இல்லாமல் விடுவிப்பவனோ அவன்.

 

அருந்துதற்கு இனிய மீன் கொணர அன்பினால்

பெருந்தடங் கொம்பிடைப் பிரிந்த சேவலை

வரும் திசை நோக்கி ஓர் மழலை வெண் குருகு

இருந்தது கண்டு நின்று இரக்கம் எய்தினான். (6521)

 

பெண் குருகொன்று தன் இணைக்காக காத்திருப்பதை ஸ்ரீராமன் இரக்கத்துடன் கண்டான்.

 

யார்? இவண் எய்திய கருமம் யாவது?

போர் அது புரிதிரோ? புறத்து ஓர் எண்ணமோ?

சார்வு உற நின்ற நீர் சமைந்தவாறு எலாம்

சோர்விலீர் மெய்ம் முறை சொல்லுவீர் என்றான். (6533)

நீவிர் யார்? வருகைக்கான காரணம் என்ன? போருக்கு வந்திருக்கிறீர்களா? வேறு காரணங்களா? உண்மையைக் கூறுங்கள்.

 

சுடு தியைத் துகில் இடை பொதிந்த துன்மதி!

இடுதியே சிறையிடை இறைவன் தேவியை;

விடுதியேல் உய்குதி; விடாது வேட்டியேல்

படுதிஎன்று உறுதிகள் பலவும் பன்னினான். (6536)

 

தீயை ஆடையில் இட்டுக் கொள்வது போல சீதையை சிறையில் அடைத்துள்ளாய் என இராவணனை எச்சரித்தவர் .

 

விளைவினை அறிந்திலம்; வீடணப் பெயர்

நளிமலை யாக்கையன் நால்வரோடு உடன்

களவு இயல் வஞ்சனை இலங்கை காவலற்கு

இளவல் நம் சேனையின் நடுவண் எய்தினான். (6541)

 

மலையென உடல்வலு கொண்டவன். அவன் பெயர் வீடணன். இராவணனின் தம்பி. நம் சேனையின் நடுவே வந்துள்ளான். வருகையின் காரணத்தை எங்களால் முழுமையாக அறிய முடியவில்லை.

 

“‘கற்புடைத் தேவியை விடாது காத்தியேல்

எற்புடைக் குன்றம் ஆம் இலங்கை; ஏழை! நின்

பொற்பு உடை முடித்தலை புரளும் என்று ஒரு

நற் பொருள் உணர்த்தினன்என்றும் நாட்டினான். (6545)

 

சீதாப் பிராட்டியை விடுவிக்கா விட்டால் இலங்கை எலும்புக் கூடுகள் குவிந்து கிடக்கும் நகராகக் கிடக்கும். உனது பத்து தலைகளும் மண்ணில் உருளும் என இராவணனை எச்சரித்தவன் வீடணன்.

 

அப்பொழுது இராமனும் அருகில் நண்பரை

இப் பொருள் கேட்ட நீ இயம்புவீர் இவன்

கைப் புகற் பாலனோ? கழியற் பாலனோ?

ஒப்புற நோக்கி நும் உணர்வினால் என்றான். (6547)

 

இதனைக் கேட்ட பின் நீங்கள் நினைப்பதென்ன என்று இராமன் தன் நண்பர்களிடம் வினவினான்.

 

உள்ளத்தின் உள்ளதை உரையின் முந்துற

மெள்ளத் தம் முகங்களே விளம்பும்; ஆதலால்

கள்ளத்தின் விளைவு எலாம் கருத்து இலா இருள்

பள்ளத்தின் அன்றியே வெளியில் பல்குமோ? (6580)

 

உள்ளத்தில் இருப்பதை முகமே காட்டும். வீடணன் நல்ல உள்ளம் கொண்டவன் என்பதை அவன் அகமே காட்டுகிறது.

 

“‘கொல்லுமின் இவனைஎன்று அரக்கன் கூறிய

எல்லையில்தூதரை எறிதல் என்பது

புல்லிது; பழியொடும் புணரும்; போர்த்தொழில்

வெல்லலம் பின்னர்என்று இடை விலக்கினான். (6586)

 

தூதனாகச் சென்ற போது ‘கொல்லுங்கள்’ என்று அரசனான இராவணன் கூறினான். அப்போதே வீடணன், ‘தூதனைக் கொல்லக் கூடாது’ என்ற நீதி உரைத்தவன்.

 

மாருதி வினைய வார்த்தை செவிமடுத்து அமிழ்தின் மாந்திப்

பேர் அறிவாள! நன்று! நன்று!! ‘ எனப் பிறரை நோக்கி

சீரிது; மேல் இம் மாற்றம் தெளிவுறத்  தேர்மின்என்ன

ஆரியன் உரைப்பது ஆனான்; அனைவரும் அதனைக் கேட்டார். (6595)

 

மாருதியை நோக்கி இராமன் பெரும் அறிவாளியே நன்மை உரைத்தாய் என்றான்.

 

இன்று வந்தான் என்று உண்டோ? எந்தையை யாயை முன்னைக்

கொன்று வந்தான் என்று உண்டோ?  புகலது கூறுகின்றான்;

தொன்று வந்து அன்பு பேணும் துணைவனும் அவனே; பின்னைப்

பின்றும் என்றாலும், நம்பால் புகழ் அன்றிப் பிறிது உண்டாமோ? (6598)

 

இன்று தான் வந்தான் என யோசிக்கலாமா? என் தந்தையைத் தாயைக் கொன்று விட்டு வந்திருந்தால் கூட யோசிக்கலாமா? நாளை நம்மை விட்டு விலகிச் செல்வான் என்று யோசிக்கலாமா? நம்மை நம்பி வந்தவன் நமது நண்பன். நமக்கு இனியவன். அவனை ஏற்பதால் நாம் புகழே அடைவோம்.

 

பேடையைப் பிடித்துத், தன்னைப் பிடிக்கவந்து அடைந்த பேதை

வேடனுக்கு உதவி செய்து விறகு இடை வெந்தீ மூட்டிப்

பாடுறு பசியை நோக்கித் தன் உடல் கொடுத்த பைம்புள்

வீடு பெற்று உயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமிது அன்றோ? (6601)

 

ஒரு காட்டில், மரத்தில், புறா இணை ஒன்று வசித்தது. பெண் புறா ஒருநாள் சோர்ந்திருந்தது. ஆண் புறா பெண் புறாவை மரத்தில் ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு இரை தேடச் சென்றது. அப்போது அங்கு வந்த வேடன் வலை விரித்தான். அதில் பெண்புறா சிக்கி விட்டது. வேடன் அதனைக் கூண்டில் அடைத்து விட்டான். ஆண்புறா மாலை அங்கு வந்து பெண்புறாவைத் தேடியது. தான் கூண்டில் அடைபட்டுக் கிடப்பதாக பெண்புறா கூறியது. ஆண்புறாவிடம், ‘’நம் இடத்துக்கு வந்திருக்கும் வேடன் நம் விருந்தினன். மாலை இருண்டு இரவு நேரம் தொடங்கி விட்டது. அவன் குளிரால் வருந்துகிறான். அவன் குளிரைப் போக்க ஏதாவது செய்’’ என்கிறது பெண்புறா. சுள்ளிகளைப் பொறுக்கி வந்து போட்டு அதில் தீ மூட்டுகிறது ஆண்புறா. குளிர் நீங்கிய வேடன், பசி மிஞ்சி அத்தீயில் பெண்புறாவை இட்டான். பிரிவைத் தாங்காது ஆண்புறாவும் அதில் விழுந்தது. இதைக் கண்ட தெய்வங்கள், புறாக்களுக்கு வீடுபேறு அளித்தன. அவற்றால் உபசரிக்கப்பட்டதால் அந்த வேடனும் வீடுபேறு பெற்றான்.

இந்த கதையை ஸ்ரீராமன் கூறுகிறார்.

 

சொல்லருங் காலம் எல்லாம் பழகினும், தூயர் அல்லார்

புல்லலர் உள்ளம்; தூயர் பொருந்துவர், எதிர்ந்த ஞான்றே;

ஒல்லை வந்து உணர்வும் ஒன்ற, இருவரும், ஒருநாள் உற்ற

எல்லியும் பகலும் போலத், தழுவினர், எழுவின் தோளார். (6612)

 

தூய உள்ளம் இல்லாதவர்கள் பல காலம் பழகினாலும் அக நெருக்கம் அடைய மாட்டார்கள். உள்ளம் தூயவர்கள் சந்தித்த கணத்திலேயே உள்ளம் ஒன்றுவர். சுக்ரீவனும் வீடணனும் அவ்வாறு ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டனர்.

 

பஞ்சுஎனச் சிவக்கும் மென் கால் தேவியைப் பிரித்த பாவி

வஞ்சனுக்கு இளைய என்னைவருக! “ என்று அருள் செய்தானோ?

தஞ்சு எனக் கருதினானோ? தாழ்சடைக் கடவுள் உண்ட

நஞ்சு எனச் சிறந்தேன் அன்றோ, நாயகன் அருளின் நாயேன் (6615)

 

தன் துணையைப் பிரித்தவனின் சகோதரன் எனினும் எனக்கு அபயம் அளித்தானோ? வரவேற்றானோ? விஷம் சிவனின் கண்டத்தில் இணைந்ததால் வணங்கப் பெற்றது. நானும் அவ்வாறான பெயர் பெற்றேன்.

 

அழிந்தது பிறவிஎன்னும் அகத்து இயல் முகத்தில் காட்ட,

வழிந்த கண்ணீரின் மண்ணின் மார்பு உற வணங்கினானைப்

பொழிந்தது ஓர் கருணை தன்னால்,  புல்லினன் என்ன நோக்கி

எழுந்து, இனிது இருத்திஎன்னா, மலர்க் கையால் இருக்கை ஈந்தான். (6630)

 

வீடணன், ‘’பிறவித் தளை அழிந்தது’’ என்னும் உணர்வுடன் இராமனை நோக்கினான். ஸ்ரீராமன் வீடணனுக்கு ‘’அமர்க’’ என இருக்கை தந்தான்.

 

குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு; பின், குன்று சூழ்வான்

மகனொடும், அறுவர் ஆனேம்; எம் உழை அன்பின் வந்த

அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனேம்;

புகலருங் கானம் தந்து, புதல்வரால் பொலிந்தான் நுந்தை. (6635)

 

தசரத மன்னரின் புதல்வர்களாகிய நாங்கள் குகனைச் சந்தித்ததால் ஐவர் ஆனோம். கிஷ்கிந்தை மன்னனின் நட்பால் அறுவர் ஆனோம். என் மீதான தூய அன்பால் என்னிடம் வந்து சேர்ந்த உன்னால் நாம் எழுவர் ஆனோம். கானக வாழ்வு சகோதரர்களைப் பெற்றுத் தந்துள்ளது. எனது கானக வாழ்வால் என் தந்தை மைந்தர்களால் பொலிகிறார்.