தீபாவளியன்று காலை வழிபாடு முடிந்ததும் புதிதாக எங்காவது கிளம்பிச் சென்று வர விரும்புவேன். அவ்வாறு தீபாவளியன்று காலை புறப்பட்டுச் சென்று திரும்பிய பல ஊர்கள் நினைவில் வருகின்றன. ஸ்ரீரங்கம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் கும்பகோணம். அந்த ஊர்களும் நினைவுகளும் எழுகின்றன. பண்டிகைகளின் போது காணும் மக்கள் முகங்கள் அவர்கள் உணர்வுகளைப் படிக்க உதவி புரிகின்றன. தீபாவளி இந்தியா முழுமைக்கும் மக்கள் கொண்டாடும் - மக்கள் மகிழ்ச்சி அடையும் பண்டிகை.
வட இந்தியாவில் தீபாவளி மூன்று நாட்கள் கொண்டாடப்படும் வழக்கம் உண்டு. 2016ம் ஆண்டு எனது மோட்டார்சைக்கிள் பயணத்தின் போது தீபாவளியை ஒட்டி உத்திரப்பிரதேச மாநிலம் புலண்ட்ஷாரில் இருந்தேன். அங்கே வீடெங்கும் மாலை நேரத்தில் தீபம் ஏற்றியிருந்தனர். அடுத்த நாள் மாலை மத்தியப் பிரதேசத்தில் நர்சிங்பூரில் இருந்தேன். இரவு அங்கு மக்கள் விளக்கேற்றுவதைப் பார்த்தேன். அடுத்த நாள் காலை நர்சிங்பூரிலிருந்து புறப்பட்டேன். அன்றைய தினம் தமிழ்நாட்டில் தீபாவளி என்பதால் தங்கியிருந்த இடத்திலிருந்த தரைவழி தொலைபேசியிலிருந்து வீட்டுக்குத் தொடர்பு கொண்டேன். வீட்டில் அனைவரும் உணர்ச்சிவசப்பட்டனர். ஒரு ஆண்டு கூட தீபாவளிக்கு வீட்டில் இல்லாமல் இருந்ததில்லை; அந்த ஆண்டு 1500 கி.மீ தொலைவில் இருக்கிறேனே என வருத்தப்பட்டனர். ஒவ்வொரு நிமிடமும் வீட்டை நெருங்கிக் கொண்டிருக்கிறேன்; இன்னும் நான்கு நாட்களில் வந்து விடுவேன் என்று சொன்னேன். அன்று மதியம் மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரைக் கடந்து சந்திரபூர் வந்தேன். அங்கே தீபாவளிக் கொண்டாட்டம். அடுத்த நாள் தெலங்கானா கம்மம். அங்கே தீபாவளி. தீபங்களைக் காணும் போதெல்லாம் அந்த ஊர்களும் மக்களும் நினைவில் எழுகிறார்கள்.
இந்த ஆண்டு தீபாவளியை ஒரு வாரம் முன்னதாகவே கொண்டு வந்தாயிற்று. செயல் புரியும் கிராமத்தில் ஒரு முழு கிராமமும் இணைந்து வீட்டு வாசலில் தீபங்கள் ஏற்றியதன் மூலம் 2020 தீபாவளியும் நினைவில் நீங்கா இடம் பிடித்து விட்டது. இரண்டு நாட்கள் முன்னால் அங்கு சென்று முக்கிய நண்பர்கள் 16 பேருக்கு இனிப்புகளை வழங்கி விட்டு தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லி விட்டு வந்தேன்.
தீபச் சுடரால் ஒளி நிறைவது போல நம் அன்பால் நாம் ஒட்டுமொத்த மானுடத்தையும் இணைக்க வேண்டியிருக்கிறது.