Monday 23 November 2020

நண்பன்

 



சில நாட்களாக, எனது வாகனம் டூ-வீலர் பட்டறையில் பழுது நீக்கப்பட்டுக் கொண்டிருந்தது. வாகனம் கையில் இல்லை என்றால் ஒரு கரம் இல்லாதது போல. 2016ம் ஆண்டு ‘’காவிரியிலிருந்து கங்கை வரை’’ பயணம் மேற்கொண்ட போது ஒரு நாளைக்கு சராசரியாக 250 கி.மீ வரை பயணிப்பேன். வாகனத்துக்கும் எனக்கும் மானசீகமான உரையாடல் ஒன்று நடந்து கொண்டிருக்கும்  (’படிக்காதவன்’ படத்தில் ரஜினி அவரது டாக்ஸியுடன் உரையாடுவது போல). எங்கள் உரையாடல் மௌனத்திலேயே நிகழும். 

மத்தியப் பிரதேசத்தில் ‘’காண்ட்வா’’ என்ற வனப்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட 120 கி.மீ தூரத்துக்கு மனித நடமாட்டத்தையே காண முடியவில்லை. தார்ச்சாலை இருப்பதும் பத்து கி.மீ தூரத்திற்கு ஒரு முறை ஒரு சில ஆட்டு மந்தைகளைக் காண முடிவதுமே மக்கள் அந்த பிரதேசத்தில் வசிக்கிறார்கள் என்பதற்கான நம்பிக்கையாக இருக்கும். வண்டியின் என்ஜின் ஓசை மட்டுமே துணையாய் இருக்கும். 

அப்போது, என் வாகனத்தை எண்ணி நான் கண்ணீர் சிந்தினேன். வாகனம் என் மீது காட்டும் அன்பு என்னை சிலிர்க்கச் செய்தது. ஓர் உற்ற நண்பனைப் போல என்னுடன் உடனிருக்கிறது. துணை நிற்கிறது. என்னிடம் எதையும் கேட்கவில்லை; மாறாக எனக்கு எவ்வளவோ கொடுக்கிறது என்பதை எண்ணிய போது நான் யாருக்காகவாவது அவ்வாறு இருந்திருக்கிறேனா என நினைத்துப் பார்த்த போது தன் மேலான பெருந்தன்மையால் என் வாகனம் மேலோங்கி நின்றது. 

பயணத்தில், ரயில்வே லெவல் கிராஸிங்-களில் ரயில் கடந்து செல்ல காத்து நிற்கும் போது, அந்த சாலைகளில் அதிகமாக பயணிக்கும் டிரக்-களின் கிளீனர்கள் குத்தூசி ஒன்றை வைத்துக் கொண்டு லாரி டயர்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் சிறு கற்களை எடுத்து விடுவார்கள். நானும் என்னுடைய வாகனத்தின் டயரில் ஒட்டியிருக்கும் சிறு கற்களை வாகனத்தை செண்டர் ஸ்டேண்ட் போட்டு எடுத்து விடுவேன். ‘’கொல்லுப் பட்டறையில் ஈ-க்கென்ன வேலை’’ என்பது போல டிரக் டிரைவர்களும் கிளீனர்களும் என்னைப் பார்ப்பார்கள். 

தாபாக்களில் இரவில் தங்கும் போது , டூ-வீலரை பார்க் செய்து விட்டு என்னுடைய பயணப்பையை கயிற்றுக் கட்டிலில் வைத்து விட்டு மீண்டும் நேராக வாகனத்திடம் வருவேன். ஒரு துணியால் வண்டியைத் தூய்மையாகத் துடைத்து வைப்பேன். துடைத்து முடித்ததும் வாகனம் என்னிடம் அடுத்தது எங்கே போகிறோம் என்று கேட்கும். நன்றாக ஓய்வெடு; நாளை காலை 5.30க்கெல்லாம் கிளம்புவோம் என்று சொல்வேன். இரவு உணவு முடித்து விட்டு வாகனத்தை மீண்டும் ஒருமுறை பார்த்து விட்டு செல்வேன். உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையின் மீது போர்வையை போர்த்தி விட்டுச் செல்லும் அன்னையைப் போல.