Monday 23 November 2020

ஊற்று

செயல் புரியும் கிராமத்தில், சென்ற புதனன்று, ஒரு வீதியில் உள்ள வீடுகளுக்கு அலரி மரக்கன்றுகளை வழங்கிய போது சில கன்றுகள் அதிகம் இருந்தன. அவற்றை அந்த வீதியில் இருக்கும் பிள்ளையார் கோவிலின் எதிரில் நட்டு விடலாம் என அந்த வீதிவாசிகள் அபிப்ராயப்பட்டனர். அந்த கன்றுகளை நான் நட வேண்டும் என விரும்பினர். நான் அவற்றை நட்டேன். நட்ட பின் அவற்றுக்கு நீர் ஊற்ற விரும்பினேன். அங்கே ஒரு கை பம்ப் ஒன்று இருந்தது. அது பயன்பாட்டில் இல்லை. சற்று தள்ளியிருந்த வீடொன்றிலிருந்து வாளியில் நீர் எடுத்து வந்து ஊற்றினோம். 

கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள வீட்டின் பெண்மணி, சற்று தயக்கத்துடன், ‘’சார்! ஒரு விஷயம்’’ என்றார். 

‘’என்னம்மா! சொல்லுங்க. என்ன விஷயம்?’’

‘’பிள்ளையார் கோவில் இங்க ரொம்ப வருஷமா இருக்கற கோயில் சார். அர்ச்சகர் ஒருத்தர் தினமும் வந்து பூஜை பண்றார். பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்ய தண்ணீ வேணும்னு கொஞ்சம் வருஷம் முன்னால கை பம்ப் போட்டோம். திடீர்னு வேலை செய்யாம போச்சு. அர்ச்சகர் தினமும் குடத்தை எடுத்துட்டு கொஞ்சம் தள்ளியிருக்கற வீட்டுக்குப் போய் தண்ணி கொண்டு வர்ரார். இந்த பம்ப்-பை சரி பண்ணி கொடுங்க சார். நீங்க வச்ச கன்னுக்கு  நான் தினமும் தண்ணி ஊத்தறன். சாமி காரியத்துக்கு ஒத்தாசை செஞ்சதாவும் இருக்கும்’’

‘’ராம் கிருஷ்ண ஹரி’’ என மனதுக்குள் சொல்லிக் கொண்டேன். 

‘’என்னால என்ன செய்ய முடியும்னு அவசியம் பாக்கறேன் அம்மா”

கட்டிட வேலையில் எங்கள் முதல் பணி ‘’போர்வெல்’’ போடுவது. பிளாட்டின் வடகிழக்கு மூலையில் போர்வெல் அமைத்து ஹேண்ட் பம்ப் பொருத்துவோம். மின் மோட்டார் பொருத்துவோம். மின் வெட்டு சமயத்தில் ஹேண்ட் பம்ப் கட்டுமானத் தேவைகளுக்கு உதவும். எங்கள் கட்டுமானப் பணியின் துவக்கம் என்பது ஹேண்ட் பம்ப். எந்த செயலும் தொடங்கும் போது முதலில் வணங்கப்படும் கடவுள் பிள்ளையார். இந்த பணியை எவ்வளவு சீக்கிரம் செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்து முடிப்பது என்று முடிவு செய்தேன். 

பணியில் உதவும் பொறியியல் மாணவனான அக்கிராமத்தின் இளைஞனிடம் லோக்கல் பிளம்பர் ஒருவரைத் தொடர்பு கொண்டு பம்ப்-ஐ சரிசெய்ய என்னென்ன உதிரி பாகங்கள் தேவை என்ற விபரத்தைக் கேட்டுக் கொள்ள சொன்னேன். இரண்டு நாட்களாக அந்த இளைஞனைத் தொடர்பு கொண்டு தேவைப் பட்டியல் என்ன என ஃபோனில் கேட்டு நான் எழுதிக் கொண்டேன். 

பட்டியல் என் கைக்கு வந்ததும் எனது நண்பரான கட்டிடப் பொறியாளர் ஒருவருக்கு ஃபோன் செய்தேன். 

‘’பாஸ்! வணக்கம். பிரபு பேசறன்.’’

‘’வணக்கம் பிரபு. எப்படி இருக்கீங்க?’’

‘’நல்லா இருக்கன். எனக்கு ஒரு உதவி வேணும்’’

‘’சொல்லுங்க’’

‘’மரக்கன்னு நடறோம்ல அந்த கிராமத்துல ஒரு பழைய பிள்ளையார் கோவில் இருக்கு. அதுக்கு எதுத்தாப்ல ஒரு ஹேண்ட் பம்ப் வேலை செய்யாம கிடக்கு. பம்ப், பி.வி.சி பைப் மட்டும் வச்சுகிட்டு மத்த ஸ்பேர்ஸை கம்ப்ளீட்டா மாத்தணும். அர்ச்சகர் தினமும் 100 மீட்டர் தள்ளிப் போய் தண்ணீர் மொண்டுட்டு வர்ரார். சுவாமி காரியத்துக்கு உங்களோட சப்போர்ட் வேணும்.’’

‘’Rough-ஆ எவ்வளவு ஆகும்?’’

‘’அறுநூறு ரூபா ஆகும்?’’

‘’நோ இஷ்யூஸ். நான் கொடுத்துடறேன்.’’

ஜவுளிக்கடை வைத்திருக்கும் எனது நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்து பிளம்பரின் ஒருநாள் ஊதியத்துக்கான ஏற்பாட்டை உதவியாகக் கோரிப் பெற்றேன். 

நேற்று, ஞாயிற்றுக்கிழமை, எனது நண்பர் ஒருவரைக் கூட்டிக் கொண்டு பிளம்பிங் உதிரி பாகங்களை வாங்கி எடுத்துக் கொண்டு கிராமத்துக்குச் சென்றேன். பம்பின் அடிப்பகுதியில் இருக்கும் சிமெண்ட் தளத்தை உடைத்து வைத்திருக்கிறோம்; அதில் கான்கிரீட் போட்டு விட்டு , திங்கள் காலை பம்ப்-ஐ சரி செய்து விடலாம் என்று கூறினர். மீண்டும் இன்று காலை அங்கே சென்றோம். பம்ப் இயங்கும் நிலையில் இருந்தது. ஒரு வாளியில் தண்ணீர் பிடித்து அலரிக் கன்றுகளுக்கு ஊற்றி விட்டுக் கிளம்ப ஆயத்தமானோம். அந்த பகுதியின் மக்கள் அனைவரும் வந்து நன்றி தெரிவித்தனர். 

‘’நான் ஒன்னும் செய்யல அம்மா. இந்த மாதிரி விஷயங்கள் செய்ய ஆர்வமா இருக்கறவங்களுக்கும் உங்களுக்கும் நடுவில நான் ஒரு பாலமா இருக்கன்; அவ்வளவுதான்’’ என்றேன்.