Thursday 26 November 2020

ஆதலால் செயல் புரிக


ஒரு நற்செயல் அடுத்த நற்செயலுக்கு வழிகோலுகிறது. செயலில் தீவிரமானவன் முழுமையாகக் களத்தில் நிற்கிறான். களத்துக்குத் தன்னை முழுதளிக்கிறான். செயலுக்குத் தன்னை முழுதளித்தோம் என்பதே செயல்பாட்டாளன் கொள்ளும் நிறைவு. 

‘’காவிரி போற்றுதும்’’ பணிகள் ஒரு கிராமத்தில் துவங்கின. நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. திட்டமிட்டபடி, 20,000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை ஒரு குறிப்பிட்ட கிராமத்துக்கு - கிராமத்தில் உள்ள எல்லா விவசாயிகளுக்கும் வழங்கினோம். மரக்கன்றுகள் நல்ல முறையில் வளர்ந்து வருகின்றன. அந்த கிராமத்தின் மக்கள் அனைவருமே எங்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கிறார்கள். அன்பு காட்டுகிறார்கள். பிரியமாய் இருக்கிறார்கள். உரிமையுடன் பல விஷயங்களைச் சொல்கிறார்கள் ; கேட்கிறார்கள். ஒற்றுமையையும் கூட்டுச் செயல்பாட்டையும் உணர்த்தும் விதமாக, நாம் கேட்டுக் கொண்டவாறு,  ஊரில் உள்ள எல்லா வீட்டு வாசலிலும் 06.11.20 அன்று மாலை 6.15 மணிக்கு 7 தீபங்கள் ஏற்றினார்கள்.


தீபம் ஏற்றும் நிகழ்வையடுத்து, கிராமத்துக்கு மேலும் செய்யக்கூடிய பணிகளைச் செய்ய முடிவெடுத்துள்ளோம். ஒரு கிராமத்தின் தேவைகள் பெரியவை. எனினும் தொடர்ந்து முயல்வது என்று முடிவெடுத்துள்ளோம். 

அந்த கிராமத்தில் வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் பயன் தரும் மரங்களை நடுவது என்றும் அவற்றை ஓராண்டு வரை தண்ணீர் டேங்கர் மூலம் நீர் ஊற்றி பராமரிப்பது என்றும் முடிவெடுத்துள்ளோம். அந்த ஊருக்குப் புதிதாக வரும் எவருக்கும் மற்ற ஊர்களுக்கும் அந்த ஊருக்கும் உள்ள வித்யாசம் உடனடியாகக் கண்ணில் பட வேண்டும். இது எப்படி சாத்தியமானது என்று எவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

மரங்கள் வளர்ந்து, பூக்கள் பூத்து, கனிகள் நிரம்பியிருக்கும் ஒரு கிராமமோ நகரமோ பெருநகரமோ அதில் வாழும் மக்களின் மனத்தில் இனிமையை நிறைக்கின்றன. 

செயல் புரியும் கிராமத்தில், பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் அக்கிராமத்தின் பக்கத்தில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எப்போது எங்கள் கிராமத்தில் செயல் புரியப் போகிறீர்கள் என ஓயாது கேட்ட வண்ணம் இருக்கின்றனர். மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப, ‘’காவிரி போற்றுதும்’’ தனது அடுத்த படியை எடுத்து வைக்கிறது. 

இந்த முறை பத்து கிராமங்களில் நாம் செயலாற்ற இருக்கிறோம். 

ஒரு கிராமத்தில் முழுமையாகச் செயலாற்றிய அனுபவம் இருப்பதால் அதனைக் கொண்டு பணியை பத்து கிராமங்களுக்கு விரிவாக்கிச் செல்லலாம் எனத் திட்டமிட்டுள்ளோம். 

இலக்கு பெரிது; எனினும் நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்கிறோம்.

’’ஆதலால் செயல் புரிக’’ என்கிறது கீதை.