Sunday 29 November 2020

நமது செயல்முறை

நவம்பர் 6ம் தேதி அன்று, செயல் புரியும் கிராமத்தில், மாலை 6.15 மணிக்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஏழு தீபங்கள் ஏற்றுமாறு அந்த கிராமத்தின் மக்களை கேட்டுக் கொண்டோம். அன்று காலை, கல்லூரிப் பேராசிரியரான எனது நண்பர் என்னை அலைபேசியில் அழைத்தார்.  எனது முழு எண்ணமும் மாலை நிகழ்ச்சியை நோக்கியே இருந்தது. அது குறித்து அவரிடம் சொன்னேன். 

‘’பிரபு! என்ன சொல்றீங்க? ஒரு முழு கிராமமும் சேர்ந்து இந்த விஷயத்தைச் செய்வாங்களா? இது சாத்தியம் தானா? என்னால நம்பவே முடியல. எப்படி நீங்க சொல்றதை எல்லாரும் கேக்கறாங்க?

***

நவம்பர் 6ம் தேதி மதியம் ஒரு ஃபோட்டோகிராஃபரை ஏற்பாடு செய்து கொண்டேன். முழு கிராமமும் பங்கெடுக்கும் நிகழ்ச்சி என்பதால் அது ஆவணப்படுத்தப்பட வேண்டும் என எண்ணினேன். ஒளி மிக்க நிகழ்வு என்பதாலும். 

நான் அவரை எனது டூ-வீலரில் பின்னால் உட்காரவைத்துக் கொண்டு அந்த கிராமத்தினுள் நுழைந்தேன். 

என்னைப் பார்த்துக் குழந்தைகள் கையசைத்தனர். இளைஞர்களும் முதியவர்களும் நலம் விசாரித்தார்கள். பலரும் புன்னகைத்தனர். 

‘’சார்! இந்த ஊர்ல எல்லாருக்குமே உங்களைத் தெரிஞ்சுருக்கு. உங்களுக்கும் எல்லாரையும் தெரிஞ்சிருக்கு சார். பல பேரை பேர் சொல்லி கூப்பிடறீங்க. ஆச்சர்யமா இருக்கு சார்!’’

நிகழ்வு முடிந்து ஊர் திரும்பும் போது ஃபோட்டோகிராஃபர் சொன்னார்.

‘’சார்! நான் எத்தனையோ நிகழ்ச்சியைப் படம் எடுத்திருக்கன். ஆனா ஒரு முழு கிராமமும் சேர்ந்து செஞ்சிருக்க இந்த விஷயம் வாழ்க்கைல மறக்க முடியாதது சார்.’’

***

நிகழ்வு முடிந்து இரண்டு நாட்கள் கழித்து அந்த ஊரின் இளைஞன் ஒருவன் என்னிடம் கேட்டான்:

‘’நவம்பர் 6ம் தேதி ஊரோட எல்லா தெருவுக்கும் போய் பார்த்தேன். எல்லாரும் அகல் விளக்கு ஏத்தியிருந்தாங்க. எல்லாரும் உங்களுக்குப் பழக்கமா சார்?’’

‘’எப்படி நான் ஒனக்குப் பழக்கமோ அதே மாதிரி எல்லாரும் எனக்குப் பழக்கம் தானே தம்பி?’’ நான் கேட்டேன். 

***

மூன்று உரையாடல்கள். 

இவை எழுப்பும் கேள்வி ஒன்றுதான்.

இது எப்படி சாத்தியம்?

***

ஒரு கிராமம் என்பது 450 குடும்பங்கள். நான் ஒவ்வொரு வீட்டுக்கும் செல்வேன். என்னை அறிமுகப்படுத்திக் கொள்வேன். ‘’நாங்கள் நாலு பேர். எங்களுக்கு மரக்கன்றுகளை அதிக அளவில் வளர்க்க ஆசை. விவசாயிகளான உங்களுக்குத் தேவையான மரக்கன்றுகளை நாங்கள் வழங்குகிறோம். நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள்’’ என்று சொல்வேன். விவசாயிகளின் வருமானம் பெருக வயல் வரப்புகளில் தேக்கு மரம் வளர்க்குமாறு சொல்வேன். அவர்களுக்கு எவ்வளவு வயல் இருக்கிறது என்பதைக் கேட்டு அறிவேன். அவர்களின் வயல் பரப்புக்கு ஏற்ப எத்தனை மரங்கள் தேவைப்படும் என்பதை கணக்கிட்டுச் சொல்வேன். மரப்பயிரின் நன்மைகள் குறித்து சொல்வேன். ஒரு குடும்பத்துக்கு சராசரியாக 15 நிமிடம் ஆகும். எனினும் அந்த உரையாடலில் ஒரு நல்ல புரிதல் உருவாகி விடும். பரஸ்பரம் மரியாதையும் நல்லெண்ணமும் உருவாகும். ஒரு கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளையும் முழுமையாக நிறைவு செய்ய ஒரு வாரம் ஆகும். அந்த ஒரு வாரத்தில் கிராமத்தில் உள்ள அனைவருமே நண்பர்களாகி விடுவர். 

பின்னர் மரக்கன்றுகள் வழங்குவோம். எப்படி நட்டுள்ளார்கள் என்று அவர்கள் வயல்களுக்குச் சென்று பார்ப்பேன். ஆலோசனைகள் வழங்குவேன். 

வன்னி, வில்வம், இலுப்பை, ஆல், அரசு போன்ற மரங்களை பொது இடத்தில் நட்டு வளர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து சொல்வேன். அதற்குத் தேவையான உதவிகளை கிராம மக்கள் வழங்குவார்கள். 

ஒரு பெண்மணி தனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் தரிசாக உள்ளது. அதில் என்ன பயிரிடலாம் என்று கேட்டார். 

சில இளைஞர்கள் வேலை வாங்கித் தருமாறு கேட்டனர். அதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

சிறிதும் பெரிதுமாக இன்னும் பல சம்பவங்கள். 

***

இன்று காலை, செயல் புரியும் கிராமத்துக்குச் சென்று அங்குள்ள ஆலயத்தில் ஏழு தீபங்கள் ஏற்றினேன். 

வீதிக்கு ஒருவர் என சிலரிடம், அவர்கள் வீட்டுக்குச் சென்று,  அடுத்த கிராமத்தில் கணக்கெடுப்பைத் துவக்க உள்ளதைச் சொன்னேன். 

‘’சார்! அடுத்த கிராமத்துக்குப் போய்ட்டா இனிமே எங்க கிராமத்துக்கு அடிக்கடி வர மாட்டீங்களா?’’

’’அடுத்த கிராமம் உங்க கிராமத்துக்கு ஒரு கிலோ மீட்டர் முன்னாடி இருக்கு அவ்வளவுதான். என்னோட ஃபோன் நம்பர் உங்க எல்லார்ட்டயும் இருக்கு. எப்ப என்ன விஷயம்னாலும் எனக்கு ஃபோன் பண்ணுங்க. நான் உடனே வருவேன். ‘’

*