Monday, 9 November 2020

எழு பசும் பொற்சுடர்

மரக்கன்றுகள் நட்டு செயல்புரியும் கிராமத்தில் வெள்ளிக்கிழமையன்று (06.11.20) மாலை 6.15 மணிக்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஏழு தீபங்கள் ஏற்றுமாறு கேட்டுக் கொண்டோம். ஒற்றுமையிலும் கூட்டுச் செயல்பாட்டிலும் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் உறுதியையும் வெளிப்படுத்தும் விதமாக தீபங்களை ஏற்றச் சொன்னோம்.  அன்றைய தினம் சப்தமி என்பதால் ஏழு தீபங்கள். இந்திய மரபில் ஏழு என்பது பலவகையில் முக்கியத்துவம் கொண்டது. ஸ்வரங்கள் ஏழு. தெய்வ அன்னையர் எழுவர். முதல் முனிவர்கள் ஏழு பேர். புண்ணிய நதிகள் ஏழு. வானவில்லின் வர்ணங்கள் ஏழு. வாரத்தின் நாட்கள் ஏழு. பிறவிகள் ஏழு. பெருங்கடல்கள் ஏழு. அதிசயங்கள் ஏழு. உடலின் உயிர்ச் சக்கரங்கள் ஏழு. 

ஆறு மாதங்களுக்கு முன்னால் முதல்முறையாக அந்த கிராமத்துக்குச் சென்றேன். ஊரின் பெயரை மட்டும் சில முறை கேட்டிருக்கிறேன். முன்னர் எப்போதும் அங்கு சென்றது கிடையாது. அப்போது, அந்த ஊரில் யாரும் எனக்கு அறிமுகமோ பரிச்சயமோ இல்லை. இந்தியா முழுக்க மோட்டார்சைக்கிளில் பயணித்தவன் என்ற முறையில் இந்திய கிராம மக்கள் ஊருக்குப் புதிதாக வருபவர்களிடம் அன்பு பாராட்டுவார்கள் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருந்தேன். அந்த நம்பிக்கையே அவ்வளவு தொலைவில் உள்ள அந்த கிராமம் நோக்கி என்னைச் செலுத்தியது. 

இத்தனை நாட்கள் செயல்புரிந்த முறையில், இன்று அந்த கிராமத்தில் உள்ள அனைவரும் நண்பர்களாக உள்ளனர். அவர்கள் என் மீது காட்டும் அன்பு மறக்க இயலாதது. 

வெள்ளியன்று மாலை கிராமத்தின் எல்லா வீட்டு வாசலிலும் மக்கள் ஏழு தீபங்கள் ஏற்றினர். கிராமத்தின் வீதிகள் அகல் விளக்குகளின் ஒளியில் அழகுற மிளிர்ந்தன. அன்றைய மாலை திருக்கார்த்திகைக் கொண்டாட்டம் போல் இருந்தது. 

நான் எளிய கருவி மட்டுமே. அங்கே நிகழ்ந்த அனைத்தும் அக்கிராம மக்களாலேயே நிகழ்ந்தது. 

பணிகளுக்கு முடிவு என்பது எப்போதுமே கிடையாது. மேலும் என்ன பணிகளைச் செய்ய முடியும் என்பது குறித்தே யோசிக்கிறேன். செயல்படுகிறேன். 

கடமையைச் செய் என்கிறது கீதை.