குன்றுகொடு அடைத்து, அணை குயிற்றியது ஒர் கொள்கை,
அன்று உலகு தந்த முதல் அந்தணன் அமைத்தான்
என்ற பொழுதின்கணும் இது என்று இயலும்? என்றான்.
படைப்புக் கடவுளான பிரம்மனுக்கும் அரிய இப்பணியை
வானரசேனை சாத்தியமாக்கியது எங்கனம் என சேதுவை நோக்கியவாறு ஸ்ரீராமன் எண்ணினான்.
6879. இருங்கவி கொள் சேனை மணி ஆரம் இடறித் தன்
மருங்கு வளர் தணெ் திரை வயங்கு பொழில் மான
ஒருங்கு நனி போயினது; உயர்ந்த கரை ஊடே
கருங்கடல் புகப் பெருகு காவிரி கடுப்ப.
வானர சேனை மலர்களையும் மணிகளையும்
ஏந்தி கடல் நோக்கி விரையும் காவிரியைப் போல சேதுவின் மேலே சென்றது.
6880. ஓதிய குறிஞ்சி முதலாய நிலன் உள்ள
கோது இல அருந்துவன கொள்ளையின் முகந்து உற்று
யாதும் ஒழியாவகை சுமந்து கடல் எய்தப்
போதலினும் அன்ன படை பொன்னி எனல் ஆகும்.
ஐவகை நிலத்தின் செல்வத்தையும் அள்ளிச் செல்வதால்
பொன்னி என்றும் வானர சேனையைக் கொள்ளலாம்.
6883. இழைத்து அனைய வெம்கதிரின் வெம்சுடர் இராமன்
மழைத்த முகில் அன்ன மணி மேனி வருடாமல்
தழைத்த நிழல் உற்ற குளிர் சந்தனம் உயர்ந்த
வழைத் தரு எடுத்து அருகு வந்தனர் அநேகர்.
மலைகளைக் கொண்டு சேது எழுப்பியதால் மலைகலின்
உச்சியிலிருந்த சந்தன மரங்களை ஸ்ரீராமனுக்குக் குடையாகப் பிடித்தன வானரங்கள்.
6887. நீலனை இனிது நோக்கி, நேமியோன், ‘விரைய ‘நீ நம்
பால்வரு சேனைக்கு எல்லாம் இழைத்தியால் பாடி ‘என்னக்
கால்வரை வணங்கிப் போனான், கல்லினால் கடலைக் கட்டி,
நூல்வரை வழி செய்தானுக்கு அந் நிலை நொய்திற் சொன்னான்.
ஸ்ரீராமன் நீலனிடம் வானர சேனைக்குப் படைவீடு
அமைத்திடுமாறு சொன்னான். நீலன் அப்பணியை சேதுவை எழுப்பியவனான நளனிடம் ப்ணித்தான்.
6889. வில்லினாற்கு இருக்கை செய்யும்
விருப்பினால், பொருப்பின் வீங்கும்
கல்லினால் கல்லை ஒக்கக்
கடாவினான், கழைகளான
நெல்லினால் அலக்கும் காலும்
நிரப்பினான், தருப்பை என்னும்
புல்லினால் தொடுத்து, வாசப்
பூவினால் வேய்ந்து போனான்.
பாறைகளையும் மூங்கிலையும் தர்ப்பையையும்
பூக்களையும் கொண்டு இராமனின் படைவீட்டை அமைத்தான் நளன்.
இராமன் பாறையைப் போல வலிமை பொருந்தியவன்.
மூங்கிலைப் போல உறுதியானவன். புல்லின் பொறுமை கொண்டவன். மலர்களைப் போல இனிதாக
எளிதாக வெற்றியை எய்துப்வன் என்பதை அவன் படைவீடு அமைக்கப்படுவதைக் கொண்டு கம்பன்
விளக்குகிறான்.
6896. இற்று இது காலம் ஆக,
இலங்கையர் வேந்தன் ஏவ,
ஒற்றர் வந்து, அளவு நோக்கிக்
குரங்கு என உழல்கின்றாரைப்
பற்றினன் என்ப மன்னோ!
பண்டு தான் பலநாள் செய்த
நல்தவப் பயன்கள் துய்ப்ப
முந்து உற போந்த நம்பி.
வானர சேனையில் வானரங்கள் உருவில் உளவு பார்க்க
நுழைந்திருந்த இரண்டு அரக்கர்களை வீடணன் அடையாளம் கண்டான்.
6897. பேர்வு உறு கவியின் சேனைப்
பெருங் கடல் வெள்ளம் தன்னுள்
ஓர்வு உறும் மனத்தன் ஆகி,
ஒற்றரை உணர்ந்து கொண்டான்;
சேர்வுறு பாலின் வேலைச்
சிறுதுளி தறெித்த வேனும்
நீரினை வேறு செய்யும்
அன்னத்தின் நீரன் ஆனான்.
அன்ன பட்சி நீரையும் பாலையும் விலக்கி அறிவதைப்
போல இராவணன் வானர சேனையில் உளவு பார்க்க வந்த அரக்கர்களைப் பிரித்து அறிந்தான்.
6898. பெருமையும் சிறுமைதானும்
முற்றுறு பெற்றி ஆற்ற
அருமையின் அகன்று, நீண்ட
விஞ்சையுள் அடங்கித் தாமும்
உருவமும் தரெியா வண்ணம்,
ஒளித்தனர், உறையும் மாயத்து
இருவரை ஒருங்கு காணும்
யோகியும் என்னல் ஆனான்.
6899. கூட்டிய விரல் திண்கையால்
குரங்குகள் இரங்கக் குத்தி,
மீட்டு ஒரு வினை செய்யாமல்,
மாணையின் கொடியால் வீக்கிப்
பூட்டிய கையர் வாயால்
குருதியே பொழிகின்றாரைக்
காட்டினன் கள்வர் என்னாக்
கருணையங் கடலும் கண்டான்.
தனது கருணை மிக்க கண்களால் அந்த அரக்கர்களை இராமன்
கண்டான்.
6900. பாம்பு இழைப் பள்ளி வள்ளல் பகைஞர்
என்று உணரான், ‘பல்லோர்
நோம் பிழை செய்த கொல்லோ குரங்கு?
என, இரங்கி நோக்கித்
தாம் பிழை செய்தாரேனும்,
தஞ்சம் என்று அடைந்தார் தம்மை
நாம் பிழை செய்யல் ஆமோ?
நலியலிர் விடுதிர் ‘என்றான்.
கருணைக் கண்களால் அவர்களைக் கண்ட இராமன் அவர்களைத்
தண்டிக்காமல் விடுக என கருணையுடன் சொன்னான்.
6968. அணை நெடுங் கடலில் தோன்ற,
ஆறிய சீற்றத்து ஐயன்,
பிணை நெடுங் கண்ணி என்னும்
இன்னுயிர் பிரிந்த பின்னை,
துணை பிரிந்து அயரும் அன்றில்
சேவலின் துளங்குகின்றான்,
இணை நெடுங் கமலக் கண்ணால்
இலங்கையை எய்தக் கண்டான்.
சீதை சிறை வைக்கப்பட்டிருக்கும் இலங்கையைத் தன்
கண்களால் கண்டான் இராமன்.