6804. வந்தனன் வானரத் தச்சன்; மன்ன! நின்
சிந்தனை என்? என செறிதிரைக் கடல்
பந்தனை செய்குதல் பணி நமக்கு ‘என
நிந்தனை இலாதவன் செய்ய நேர்ந்தனன்.
வானரத் தச்சனாகிய நளன் சுக்ரீவனிடம் என்ன கட்டளை
என பணிவுடன் கேட்டான். கடலில் ஒரு பாலம் அமைக்க வேண்டும் என சுக்ரீவன் கூற உடன்
தன் பணியைத் துவக்கினான் நளன்.
6806. ‘இளவலும் இறைவனும் இலங்கை வேந்தனும்
அளவு அறு நம் குலத்து அரசும் அல்லவர்
வளைதரும் கருங்கடல் அடைக்க வம் ‘எனத்
தளம் மலி சேனையைச் சாம்பன் சாற்றினான்.
கடலில் அணை கட்டுவோம் வாருங்கள் என வானரர்களுக்கு
அறைகூவல் விடுத்தான் சாம்பன்.
6807. கரு வரை காதங்கள் கணக்கு இலாதன
இரு கையில் தோள்களில் சென்னி ஏந்தின
ஒரு கடல் அடைக்க மற்று ஒழிந்த வேலைகள்
வருவன ஆம் என வந்த வானரம்.
எழுகடல்களில் ஒரு கடலில் அணை கட்ட மற்ற ஆறு
கடல்களும் திரண்டு வந்தது போல வானர சேனை கடலென எழுந்து வந்தது. அவை கைகளில் தோளில்
சென்னியில் பெருமலைகளைத் தூக்கி வந்தன.
6808. பேர்த்தன மலை சில; பேர்க்கப் பேர்க்க நின்று
ஈர்த்தன சில; சில சென்னி ஏந்தின;
தூர்த்தன சில; சில தூர்க்கத் தூர்க்க நின்று
ஆர்த்தன; சில சில ஆடிப் பாடின.
வானர சேனை மலைகளைப் பெயர்த்தது. அள்ளி எடுத்தன
சில. தலையில் தூக்கின சில வானரங்கள். சில வானரங்கள் கடல் மேல் தூக்கி வீசின. நீர்
சிதறுகையில் ஆடிப் பாடின சில.
6811. மஞ்சினில் திகழ்தரு மலையை மாக் குரங்கு
எஞ்சுறக் கடிது எடுத்து எறியவே நளன்
விஞ்சையில் தாங்கினன் சடையன் வெண்ணெயில்
‘தஞ்சம்! ‘என்றோர்களைத் தாங்கும் தன்மைபோல்.
திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளல் தன்னை நம்பி
வந்தவர்களைக் காப்பதைப் போல நளன் வானர சேனை கொண்டு வந்து சேர்த்த மலைகளை அடுக்காக
எடுத்து வைத்து பாலம் கட்டினான்.
6826. ஒள்ளிய உணர்வு கூட
உதவலர் எனினும் ஒன்றோ,
வள்ளியர் ஆயோர் செல்வம்
மன்னுயிர்க்கு உதவும் அன்றே?
துள்ளின, குதித்த, வானத்து
உயர்வரைக் குவட்டில் தூங்கும்
கள்ளினை நிறைய மாந்தி,
கவி எனக் களித்த மீன்கள்.
நல்ல மனம் படைத்தவர்கள் தற்செயலாக செய்யும் செயல்
கூட மக்களுக்கு உதவுவது போல வானரங்கள் கொண்டு வந்து போடும் மலைகளின் உச்சியில்
இருக்கும் தேனை அருந்திய கடல்மீன்கள் தேன் குடித்த குரங்குகள் போல மயக்கம் கொண்டன.
6827. மூசு எரி பிறக்க, மீக் கொண்டு,
இறக்கிய முடுக்கம் தன்னால்,
கோய் சொரி நறவம் என்னத்
தண்புனல் உகுக்கும் குன்றின்
வேய் சொரி முத்துக்கு, அம்மா
விருந்து செய்திருந்த விண்ட
வாய் சொரி இப்பியோடும்
வலம்புரி உமிழ்ந்த முத்தம்.
மலையின் உச்சியிலிருக்கும் மூங்கில் சொரியும்
முத்தும் வலம்புரி முத்தும் கடலில் ஒன்றாய்க் கிடந்தன.
6839. சேதுவின் பெருமைக்கு இணை செப்ப ஓர்
ஏது வேண்டும் என்று எண்ணுவது என்கொலோ
தூதன் இட்ட மலையின் துவலையால்
மீது விட்டு உலகு உற்றன மீன்களும்.
அனுமன் எறிந்த மலைகளின் விசையால் மீன்கள்
ஆழ்கடலிலிருந்து தெறித்து வானவர் உலகில் விழுந்தன.
6853. போதல் செய்குநரும் புகுவார்களும்
மாதிரம் தொறும் வானர வீரர்கள்
‘சேது எத்துணை சென்றது? ‘என்பார் சிலர்;
‘பாதி சென்றது ‘எனப் பகர்வார் சிலர்.
அவ்வப்போது வானரங்கள் அவர்களுக்குள் பாலம் எவ்வளவு
தூரம் சென்றிருக்கிறது என்றும் பாதி சென்றிருக்கிறது இன்னும் ஒரு பாதி இருக்கிறது
என்றும் பேசிக் கொண்டன.
6862. துப்பு உறக் கடல் தூய துவலையால்
அப்புறக் கடலும் சுவை அற்றன;
எப்புறத்து உரும் ஏறும் குளிர்ந்தன;
உப்பு உறைத்தன மேகம் உகுத்த நீர்.
கடல்நீர் திசையெங்கும் தெரித்தமையால்
வான்மேகங்களும் உப்பாயின.
6867. உற்றதால் அணை ஓங்கல் இலங்கையை
முற்ற மூன்று பகல் இடை; முற்றவும்
பெற்ற ஆர்ப்பு விசும்பு பிளந்ததால்;
மற்று இவ் வானம் பிறிது ஒரு வான் கொலோ?
வானர சேனை மூன்று நாளில் கடலின் மேல் பாலத்தைக்
கட்டியது. கட்டிய பின் வெற்றி முழக்கம் இட்டன. அவற்றின் முழக்கத்தால் வானம்
இரண்டாகப் பிளந்தது.
6872. ஆன பேர் அணை அன்பின் அமைத்தனர்;
கான வாழ்க்கைக் கவிக்குல நாதனும்
மான வேலை இலங்கையர் மன்னனும்
ஏனையோரும் இராமனை எய்தினார்.
ஸ்ரீராமன் மீதான பக்தியால் சேது அமைத்த வானர
அரசனும். வீடணனும், மற்றவர்களும் பணிநிறைவை ஸ்ரீராமனிடம் சென்று சொல்ல விரைந்தனர்.
6873. எய்தி ‘யோசனை ஈண்டு ஒரு நூறு உற
ஐ இரண்டின் அகலம் அமைந்திடச்
செய்ததால் அணை ‘என்பது செப்பினார்
வைய நாதன் சரணம் வணங்கியே.
சேது அமைக்கப்பட்டது என உலகநாதனான ஸ்ரீராமனிடம்
தெரிவித்தார்கள்.