7022. என்னும் வேலையின், இராவணற்கு
இளவலை, இராமன்
‘கன்னி மாமதில் நகர் நின்று
நம் வலி காண்பான்
முன்னி, வானகம் மூடி நின்றார்களை,
முறையால்
இன்ன நாமத்தர், இனையர் என்று
இயம்புதி ‘என்றான்.
வானர சேனையின் வலிமையைக்
காண, இலங்கையின் நெடிய மதில்களுக்கு மேல் இருக்கும் முகப்பில் நின்று நோக்கிக்
கொண்டிருக்கும் அரக்கர்களை இன்னின்னார் எனக் கூறுவாயாக.
7023. ‘நாறு தன் குலக் கிளை எலாம்
நரகத்து நடுவான்
சேறு செய்து வைத்தான், உம்பர்
திலோத்தமை முதலாக்
கூறு மங்கையர் குழாத்திடைக்
கோபுரக் குன்றத்து
ஏறி நின்றவன், புன்தொழில்
இராவணன் ‘என்றான்.
இலங்கை என்னும் நாற்றங்காலில் உள்ள அரக்கர் குலம்
என்னும் பயிரை நரகத்தில் நடும் அழிவைச் செய்பவனாகிய இராவணன் மதிலின் மேல்
இருக்கும் முகப்பில் நிற்கிறான்.
7053. என்று அவன் இரங்கும் காலத்து,
இருவரும் ஒருவர் தம்மில்
வென்றிலர் தோற்றிலாராய்
வெஞ்சமம் விளைக்கும் வேலை,
வன்திறல் அரக்கன் மௌலி
மணிகளை வலியின் வாங்கி,
‘பொன்றினென் ஆகின் நன்று ‘என்று,
அவன் வெள்க, இவனும் போந்தான்.
இராவணனைத் தொலைவில் கண்ட
சுக்ரீவன் ஆத்திரம் அடைந்து அவன் மீது பாய்ந்து அவனுடன் துவந்த யுத்தம்
புரிந்தான். இராவணனால் சுக்ரீவனை வெல்ல முடியவில்லை. இருவரும் சரிசமமாகப்
போரிட்டனர். எனினும் இராவணன் மகுடத்தில் இருக்கும் மாணிக்கக் கற்களை பிடுங்கி
எடுத்துக் கொண்டு இராவணனை சாவுக்கு சமமான மனநிலையில் விட்டு சுக்ரீவன் இராமனிடம்
திரும்பினான்.
7054. கொழு மணி முடிகள் தோறும்
கொண்ட நல் மணியின் கூட்டம்
அழுது அயர்வுறுகின்றான்தன்
அடித்தலம் அதனில் சூட்டி,
தொழுது, அயல் நாணி நின்றான்;
தூயவர் இருவரோடும்
எழுபது வெள்ளம் யாக்கைக்கு
ஓர் உயிர் எய்திற்று அன்றே.
சுக்ரீவன் இராமனின் பாதங்களில் அந்த மாணிக்க
மணிகளைச் சமர்ப்பித்தான். அதனைக் கண்ட வானர சேனை தனது துயர் நீங்கி உயிர் பெற்றது
போலானது.
7055. என்பு உறக் கிழிந்த புண்ணின்
இழி பெருங் குருதியோடும்
புன்புலத்து அரக்கன்தன்னைத்
தீண்டிய தீமை போக,
அன்பனை அமரப் புல்லி,
மஞ்சனம் ஆட்டி விட்டான்,
தன்பெரு நயனம் என்னும்
தாமரை சொரியும் நீரால்.
சுக்ரீவனின் பாசத்தைக் கண்ட இராமன் தன் ஆனந்தக்
கண்ணீருடன் சுக்ரீவனைத் தழுவினான்.
7065. ‘வாங்கிய மணிகள், அன்னான்
தலைமிசை மௌலி மேலே
ஓங்கிய அல்லவோ? மற்று,
இனி அப்பால் உயர்ந்தது உண்டோ?
தீங்கினன் சிரத்தின் மேலும்,
உயிரினும், சீரிது அம்மா!
வீங்கிய புகழை எல்லாம்
வேரொடும் வாங்கி விட்டாய்!
’’உன் வீரத்தால் எடுத்து
வந்த மணிகள் இராவணின் சிரசை விட உயர்ந்தவை. அவன் வீரத்தின் புகழை நீ புழுதியில்
சாய்த்து விட்டாய்.’’
7072. என்றானும் இனைய தன்மை
எய்தாத இலங்கை வேந்தன்,
‘நின்றார்கள் தேவர் கண்டார் ‘
என்பது ஓர் நாணம் நீள,
அன்று ஆயமகளிர் நோக்கம்
ஆடவர் நோக்கம் ஆக,
பொன்றாது பொன்றினான்; தன்
புகழ் என இழிந்து, போனான்.