Wednesday, 23 December 2020

மலரும் ஒற்றுமை

தமிழ் மக்களுக்கு, அரசமரத்தடியில் சுடர்ந்து கொண்டிருக்கும் தீபம் முதல் பேராலயத்தில் கருவறையில் சயனித்திருக்கும் கார்மேனி வரை அனைத்தும் தெய்வ வடிவங்களே.  மக்கள் தினமும் அவற்றை வழிபடுகின்றனர். சிலருக்கு அரசமரத்தடியில் நடப்பட்டிருக்கும் வேலையோ சூலத்தையோ சுற்றி நீர் தெளித்து கோலமிட்டு அகல் விளக்கை ஏற்றுதல் வழிபாடு. சிலர் தங்கள் வீட்டுக்கருகில் கோவில் கொண்டிருக்கும் விக்னேஸ்வரரை தங்கள் பணி துவங்கும் முன் சென்று வணங்குதல் வழிபாடு. பெண்கள் அம்மன் ஆலயத்துக்குச் சென்று வழிபடுகின்றனர். செவ்வாய் வெள்ளி கிழமைகளில் செல்வதை பழக்கமாக வைத்துள்ளனர் சிலர். அனுமனை வழிபடுகிறார்கள். பெருமாள் கோவிலுக்குச் செல்கிறார்கள். தினமும் காலை சிவாலயம் சென்று வழிபடுகிறார்கள். நாம் தினந்தோறும் காணும் பலரது வழக்கம்தான் எனினும் அதில் ஒரு முக்கியமான கவனிக்க வேண்டிய அம்சம் ஒன்று உள்ளது. தமிழ்ச் சமூகம், அத்வைதத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. மக்கள் சேவையை முன்வைக்கும் விசிஷ்டாத்வைதம் உதித்ததும் தமிழ் நாட்டில்தான்.  சிலப்பதிகாரம் பூம்புகாரில் இருந்த பல்வேறு கோட்டங்கள் (கோயில்கள்) குறித்து பேசுகிறது. சங்க இலக்கியங்கள் சிவனையையும் மாயோனையும் முருகனையும் துர்க்கையையும் போற்றி எழுதப்பட்டுள்ளன. துறவை பெரும் விழுமியமாகத் தமிழ் மக்கள் கருதியதாலேயே சமணமும் பௌத்தமும் இங்கே செழித்து வளர்த்திருந்தது. 

சோழர்கள் காலத்தில் பெரிய அளவில் ஆலயங்கள் நிர்மாணிக்கப்பட்டன. தமிழ்நாட்டின் பேராலயங்கள் ஆகம முறைப்படி அமைக்கப்பட்டவை.  சைவம், சாக்தம், கௌமாரம், காணபத்யம் ஆகியவை சிவாலயங்களில் ஒருங்கிணைக்கப்பட்டன. தமிழ் வரலாற்றில் அது ஒரு பெருநிகழ்வு. அது ஒரு அரசியல் நிகழ்வு அல்ல. சமய சாஸ்திரங்களின் படியும், சிற்ப சாஸ்திரத்தின் படியும் ஆகம சாஸ்திரத்தின் படியும் அவைகளுக்கு இடையே இருக்கும் பொதுத் தன்மையை ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு முறையாக நிலைநிறுத்தும் பெரும் பணி அக்காலகட்டத்தில் மக்கள் ஏற்புடன் நிகழ்த்தப்பட்டது. அதே நேரத்தில், இங்குள்ள ஒவ்வொருவரும் தமக்கு விருப்பமான விதத்தில் கடவுளை வழிபடவோ அல்லது வழிபடாமல் இருக்கவோ சுதந்திரம் இருந்துள்ளது. இத்தகைய பன்மைத்தன்மை உலகில் சில சமூகங்களில் மட்டுமே நிலவுகின்றன. உலகில் மிகச் சில நாடுகளில் மட்டுமே உள்ளன. இவ்வாறான ஒரு சமூக ஏற்பாட்டை நமக்கு நம் முன்னோர் வழங்கியுள்ளனர். இது நம் பெருமை. 

பிரிட்டிஷாராலோ அல்லது வேறு ஐரோப்பியர்களாலோ இவ்வாறான ஒரு சமூக அமைப்பை நினைத்துப் பார்க்கக் கூட முடியாது. அன்று மட்டுமல்ல; இன்றும். இன்றும் உலகின் பெரிய நாடுகள் மதநிறுவனங்களுக்குக் கட்டுப்பட்டவை. இந்திய சமூகத்தில் பொருளாதாரச் சுரண்டல் இருந்ததாக பிரிட்டிஷார் கூறுகின்றனர். ஆனால் அதை விட நூறு மடங்கு பொருளாதாரச் சுரண்டலை தம் மக்கள் மேல் அந்த நாட்டின் சமூகங்கள் கொண்டிருந்தன என்பதே வரலாறு. 

பிரிட்டிஷார் நமக்கு அளித்த கல்வியைக் கொண்டு நம் நாட்டை நம் சமூகத்தை அறிய முற்பட்ட நாம் நம் மரபு குறைபாடுகள் கொண்டது என எண்ணத் துவங்கினோம். குறைபாடுகள் கொண்ட இந்த அமைப்பு தகர்க்கப்பட வேண்டும் என எண்ணினோம். இந்தியா அளவுக்கு தம் சமூக அமைப்பை காலத்துக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொண்டிருக்கும் சமூகங்கள் உலகளவில் மிகக் குறைவு. 

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான வழிபாடு சிறப்பாக இருக்கும். வழிபடப்படுவது சிவனே என்றாலும் திருச்சூரில் - திருவண்ணாமலையில் - நஞ்சன்கூடில்- தர்மஸ்தலாவில்- ஓம்காரேஷ்வரில் - காசியில் என ஒவ்வொரு வழிபாடும் பிரத்யேகத் தன்மை கொண்டது. 

தமிழ்நாட்டின் பல்வேறு பண்பாட்டு முறைகள் நிலைப்பெற அவசியம் மேற்கொள்ள வேண்டிய செயல்களை செய்வது இன்றைய காலகட்டத்தின் தேவை. 

1. உலகெங்கிலும் எல்லா சமயத்தின் ஆலயங்களும் மக்கள் மனத்துயரைப் போக்குவதை தம் வழிமுறையாகக் கொண்டுள்ளன. மக்கள் ஆலயத்தில் தங்கள் கடவுள் முன் மனம் விட்டு பிராத்திக்கின்றனர். அவர்கள் மனம் விட்டு பிராத்திப்பதற்கான சூழலை உருவாக்குவது சமூகத்தின் கடமை. சமூகத்தை நிர்வகிக்கும் அரசுக்கும் இக்கடமை உள்ளது. 

2. தமிழ்நாட்டின் பேராலயங்கள் நம் தமிழ் மரபின் சாட்சியங்கள். கலை, கட்டிடவியல், சிற்பம், ஓவியம், இசை ஆகியவற்றுக்கான இடம் பேராலயங்களில் சமயத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளன. அவற்றுக்கான இடம் நிகழ்காலத்திலும் அளிக்கப்பட வேண்டும். ஆலயத்தின் செல்வத்தின் ஒரு பகுதி இவற்றுக்காக செலவழிக்கப்பட வேண்டும். இவை செலவினங்கள் அல்ல; இவை பொருளியல் சுழற்சியை உருவாக்க வல்லவை. 

3. காலை அந்தியிலும் மாலை அந்தியிலும் ஒவ்வொரு பேராலயத்திலும் ஆயிரம் தீபங்கள் ஒளிரும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். 

4. ஒவ்வொரு ஆலயமும் தினமும் சந்நிதிகள் நீரால் தூய்மை செய்யப்பட்டு கோலமும் மலர்களும் இடப்பட்டு இருக்க வேண்டும். மங்கல இசை இசைக் கலைஞர்களைக் கொண்டு மெலிதாக ஒலித்தவாறு இருக்க வேண்டும். தேவாரம் இசைக்கப்பட வேண்டும். வேத கோஷம் ஒலிக்க வேண்டும். இவை அனைத்தும் சேர்ந்ததே தமிழ் வழிபாடு. 

5. ஆலயத்தின் வருமானம் முற்றிலும் ஆலயத்துக்கு மட்டுமே உரியது. அதிக வருமானம் உள்ள ஆலயங்களின் வருமானம் வருமானம் குறைவாக இருக்கும் ஆலயங்களின் பராமரிப்புக்கு மட்டுமே பயன்பட வேண்டும். 

6. ஆலய நிலங்கள் அதன் குத்தகைதாரர்களிடமிருந்து கிரமமாக மாத வாடகை வருவதை உறுதி செய்ய வேண்டும். 

7.  ஆலயங்களுக்கு வருபவர்களிடம் உள்ளாட்சி அமைப்புகள் வசூல் செய்யும் ‘’பார்க்கிங் கட்டணங்கள்’’ நீக்கப்பட வேண்டும். வாகனங்கள், வாகன ஓட்டிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். காலணி வைப்பகங்கள் கட்டணமின்றி அனைத்து ஆலயங்களிலும் அமைக்கப்பட வேண்டும். ஆலயங்களுக்கு உலகெங்குமிருந்து - வெளிநாட்டவர் உட்பட - வருகின்றனர். இது போன்ற சிறு சேவைகள் கட்டணமின்றி அளிக்கப்பட வேண்டும். 

சோழ மன்னர்கள் அரசாங்கத்தை விடவும் ஆலய நிர்வாகத்துக்கு முக்கியத்துவம் அளித்தனர். ஆலயங்கள் மூலம் சமூக ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் உருவாக்கினர். ஆயிரம் ஆண்டு மலர் அது. அதன் நறுமணம் இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கும் நீடிக்க வேண்டும்.