நான் சிறுவயதில் (10 வயதில்) சுவாமி சித்பவானந்தரின் சொற்கள் வழியாக சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையையும் அவரது உரைகளையும் அறிந்தவன். சுவாமிஜியை அறிந்ததன் மூலமாக இந்தியாவின் பண்பாட்டுப் பாரம்பர்யத்தை அறிந்தேன். இந்தியாவின் பண்பாடு என்பது உலகின் உன்னதமான மனங்களில் உச்சமானவர்களான மனிதகுலத்தின் பெரும் ஆளுமைகளால் சிறு சிறு துளியாகப் பெருவெள்ளமெனத் திரண்டது. சுவாமிஜியின் சொற்களில் சொல்வதானால், ‘’வாழையடி வாழையெனத் தொடரும் பாரம்பர்யம்’’. சுவாமிஜி இந்தியா குறித்த பல சித்திரங்களை உருவாக்கிக் காட்டுவார். இந்தியா மேன்மையுற்றிருந்த காலகட்டத்தை அவரது சொற்கள் நிகழ்காலமெனக் காட்டும். பல நாடுகளுக்குச் சென்று அந்த நூற்றாண்டின் மகத்தான ஆளுமைகளுடன் உரையாடியவர் ஆதலால் ஒவ்வொரு நாட்டைப் பற்றியும் அதன் இயல்புகளைப் பற்றியும் துல்லியமாக விவரிப்பார். இந்தியாவின் ஆன்மா அதன் ஆன்மீகமே என்பதை நாடெங்கும் அலைந்து திரிந்தவராகவும் - இந்தியாவின் மகத்தான ஞான மரபின் தலைமகனாகவும் - எடுத்துரைப்பார்.
ஆன்மீகத்தின் முக்கியமான இயல்பு அது எதனையும் வெறுப்புடன் அணுகாது; மக்களை பல்வேறு வகையில் ஒன்றுபடுத்த முயலும். இந்திய நிலப்பரப்பு எண்ணற்ற வழிபாட்டு முறைகளை - சடங்குகளை - நம்பிக்கைகளைக் கொண்டது. வேறுபட்ட பல வழிமுறைகள் எந்த மோதலும் இன்றி மிக அமைதியாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழும் - வாழ்ந்து வரும் நாடு இந்தியா. ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டிய விஷயம் இது. சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் தனது முதல் உரையில் இதைப் பற்றியே பேசினார்.
சுவாமிஜி அத்வைத மரபில் வந்தவர். வேதாந்தமான உபநிடதங்களின் சொற்களை மக்களிடம் கொண்டு சென்றவர். தனது குருதேவரின் அருள் வெள்ளத்தை நாடெங்கும் பாயச் செய்தவர். அவரது சொற்களால் வழிநடத்தப்படுபவர்கள் மனிதன் உருவாக்கிக் கொள்ளும் குறுகிய எல்லைகளுக்கு அப்பால் சிந்திக்கக் கூடியவர்களாகவே இருப்பார்கள். ஆன்மீகம் என்பது அதுவே. உலகெங்கிலும் ஆன்மீகவாதிகள் இருக்கிறார்கள். மானுட குலத்தை மேம்படச் செய்வதையே ஆன்மீகம் தன் பணியாகச் செய்யும்.
இந்திய மரபு மண், மலை, ஆறு, பறவை, விலங்கு, புழு, மேகம், சூரியன், சந்திரன், இருள், ஒளி, மனிதன் என அனைத்தையும் இறைவடிவமாகக் காணக் கூடியது. அவற்றில் உறைந்திருக்கும் இறைமையைக் காண்பது.
இந்திய ஆன்மீகத்தின் தாக்கம் இந்தியாவின் அனைத்து சமூகங்களிலும் இருந்தது. இருக்கிறது. இந்தியாவில் எப்போது ஆன்மீகம் ஓங்கியிருந்ததோ அப்போதெல்லாம் இங்கே இந்திய சமூகங்கள் பெரும் பொருளியல் வல்லமை பெற்றிருக்கின்றன. இந்தியா அளவுக்கு செல்வச் செழிப்பு மிக்க நாடாக உலகில் எந்த நாடும் இருந்ததில்லை. குறிப்பாக எந்த ஐரோப்பிய நாடும். பிரிட்டிஷார் தங்கள் கல்வித்திட்டத்தின் மூலம் அளித்த எதிர்மறைச் சித்திரங்களை நாம் உண்மை என நம்பத் தொடங்கினோம். அந்த மனநிலை இன்றும் பலவிதத்தில் தொடர்கிறது.
ஐரோப்பியர்களைப் போன்ற கொடுங்கோலர்கள் உலக வரலாற்றில் எவருமில்லை. இரக்கமில்லாமல் தங்கள் ஆதிக்கத்தில் இருந்த நாடுகளின் கோடிக்கணக்கான மக்களை அவர்கள் பஞ்சத்தால் சாக விட்டனர். அப்போது அந்நாடுகளிலிருந்து உணவு தானியத்தை தங்கள் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தனர். நாம் ஒரு தகவலாகக் கூட நம் பாடப்புத்தகத்தில் இவற்றைப் படிப்பது இல்லை.
சுரண்டல் உலகெங்கிலும் இருந்திருக்கிறது. உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் சுரண்டல் மிகக் குறைவு.
பொய் பிரச்சாரம் மூலம், மக்களுக்குள் - சமூகங்களுக்குள் வேற்றுமையை உருவாக்கி அவர்களை மோத விட்டு - அவர்களை நிரந்தர வறுமையில் தள்ளி நாட்டை இருளில் மூழ்கடிக்கும் அரசியல் பிரிட்டிஷாரின் அரசியல்.
மக்களை இணைக்கும் - ஒற்றுமைப்படுத்தும் செயல்பாடுகளே இப்போதைய தேவை.