Friday, 25 December 2020

வழித்துணை

தமிழ்ச் சமூகத்தின் பண்பாடு மிக விரிவானது. தமிழ்ச் சமூகம் குறித்து எவரேனும் ஆர்வம் கொள்வார்களேயாயின் அவர்கள் தெரிந்து கொள்வதற்கு விரிவாகப் பயில்வதற்கு எண்ணற்ற அறிவுத்துறைகளும் நூல்களும் உள்ளன. தமிழ்ச் சமூகத்தை புரிந்து கொள்ள மொழிகள் (தமிழ், சமஸ்கிருதம், பாலி மொழி), இலக்கணம், இலக்கியம், கட்டிடவியல், கல்வெட்டு, வரலாறு,  தத்துவம் என பல அறிவுத்துறைகள் குறித்து அடிப்படையாகவேனும் சில நூல்களைப் பயில வேண்டும். ஒரு மாணவனாக தனது கல்வி மூலமும் தன் கற்பனை மூலமும் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். 

தமிழ்நாட்டின் துரதிர்ஷ்ட்டம் திராவிட இயக்கம் தமிழ் மொழி குறித்தும் தமிழின் பண்டைய வரலாறு குறித்தும் தங்கள் மேடைகளில் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப பிரச்சாரம் செய்யத் துவங்கினர். அவர்கள் தமிழ்நாட்டுக்கு இழைத்த ஆகப் பெரிய தீமை ஒரு குறிப்பிட்ட சமூகமே தமிழ்ச் சமூக வளர்ச்சிக்குத் தடை என மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்தது. அப்போது தமிழ்நாட்டின் எழுத்தறிவு 20% கீழ் இருந்துள்ளது. ஒரு எதிரியைக் கட்டமைத்து அவர்களை இலக்காக்கி சமூகத்தின் எல்லா சிக்கலுக்கும் கட்டமைத்த எதிரியையே பொறுப்பாக்குவது என்பது ஃபாசிச அரசியலின் வழிமுறை. அத்தகைய ஃபாசிச அரசியலுக்கு தமிழ்நாட்டை திராவிட இயக்கம் இட்டுச் சென்றது. 

அவர்கள் ஜாதி வெறுப்பை தமிழ் மக்கள் மனத்தில் விதைத்தனர். மக்களை ஜாதி அடிப்படையில் பிரித்து தங்கள் அரசியல் நலன்களை பேணிக் கொண்டனர். தமிழ் மக்கள் மனத்தில் வெறுப்பும் அவநம்பிக்கையும் விதைக்கப்பட்டது. அந்த விதைகள் தூவப்படாத இடமே இல்லை என்பதாக அவர்களுடைய செயல்முறை பரவியது. 

மக்களின் இயல்பு பிரிந்து இருப்பது. ஆட்சியாளர்களும் சமூகச் செயல்பாட்டாளர்களும் சாத்தியமான வழிகளிலெல்லாம் மக்களை இணைக்க வேண்டும். அவ்வாறு இணைக்கப்பட்ட சமூகங்கள் உலக அளவில் சாதித்துள்ளன. இந்தியாவின் பல வணிகச் சமூகங்கள் உலக நாடுகளில் தங்கள் வணிகத்தை மேற்கொள்கின்றன. அச்சமூகங்களின் எண்ணிக்கையுடன் தமிழர்கள் உலக நாடுகளில் மேற்கொள்ளும் வணிகம் குறித்து ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை புரியும். ஜாதி வெறுப்பு பிரச்சாரத்தால் நாம் நம் வணிகத் திறன்களை இழக்கிறோம் என்பதே உண்மை. 

1991ம் ஆண்டு திரு. நரசிம்ம ராவ் இந்தியப் பிரதமராக இருந்த போது சிறு மற்றும் குறுந் தொழில்களுக்கு கடன் கொடுக்க வங்கிகளை வற்புறுத்தினார். சிறுதொழில்களுக்கு பெரும் ஏற்றம் தந்த நிகழ்வு அது. 1999ல் திரு. அடல் பிகாரி வாஜ்பாய் இந்தியப் பிரதமராக இருந்த போது தேசிய நெடுஞ்சாலைகளுக்கும், கிராமச் சாலைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். சாமானியர்கள் பலருக்கு பல நல்வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்த பணிகள் அவை. 

தமிழ்நாடு, தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் காண்பதை ஊக்குவிக்கும் தலைமையைப் பெறவே இல்லை. திராவிட இயக்கம் அனைத்தையும் ஓட்டுக் கணக்காகவே பார்க்கிறது. தமிழ்ச் சமூகங்கள் பொருளியல் வளர்ச்சி பெறுவது தங்கள் அரசியல் நலன்களுக்கு எதிரானது என்பதால் அதில் திராவிட இயக்க அரசுகள் ஈடுபடவே இல்லை. 

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு வழங்கப் பெறும் புள்ளிவிவரங்களைக் கண்டு தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே சமாதானம் செய்து கொள்ளும் போக்கு இருக்கிறது. 

தமிழ்நாடு மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் நீர்வளம் மிக்க மாநிலம். இங்கே பொழியும் ஆண்டு சராசரி மழைப்பொழிவு கணிசமானது. மாநில அரசாங்கம் உண்மையிலேயே விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டவர்களாக இருந்தால் நீர்ப்பாசனத் திட்டங்களில் முதலீடு செய்வார்கள். மழையின் பயனை முழுவதுமாக விவசாயிகள் பெறும் படி செய்வார்கள். தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் புதிதாக முதலீடு செய்ய வேண்டியது இல்லை; பண்டைய மன்னர்கள் உருவாக்கி வைத்த நீர்ப்பாசன முறைகளை அப்படியே பராமரித்தால் கூட போதும். நம் அண்டை மாநிலமான ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் செயல்படுத்தப்படும் நீர்ப்பாசனத் திட்டங்களுடன் ஒப்பிட்டால் உண்மை புரியும்.இது போன்ற விஷயங்கள் தொலைநோக்குடன் செயல்படுத்தப்பட வேண்டியவை. 

சிறு அளவிலோ பெரிய அளவிலோ ஒருங்கிணைப்பு இருக்கும் போது மட்டுமே பொருளியல் வளர்ச்சி நிகழும். ஒருங்கிணைக்கப்படாத சமூகம் மிகச் சொற்பமாகவே வளரும். 

மக்களின் வளர்ச்சிக்கு வழித்துணையாய் அமையும் சூழலே இப்போது தேவைப்படுகிறது.